Tuesday 15 December 2009

ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை தேவையா?

கருணாநிதி, ஜெயலலிதா, காங்கிரஸ் உள்ளிட்ட எல்லா தமிழகக் கட்சிகளுக்குமே ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டிய நிர்பந்தம். ஆனால் என்ன செய்வதென்றுதான் தெரியவில்லை. ஏதாவது செய்து அதைச் சொல்லி உலகத் தமிழர்களிடம் இழந்த மதிப்பை மீண்டும் தூக்கி நிறுத்திவிடலாம் என்கிற உத்வேகத்தில் உதித்த ஐடியாதான் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் யோசனை. திமுக நடத்திய அறிஞர் அண்ணாதுறை நூற்றாண்டு விழா மாநாட்டில் ஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு. டில்லிக்கும் கடிதம் எழுதப்பட்டது. ஆனால் முதலில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியா நிரந்தரக் குடியுரிமை கொடுக்குமா? அப்படிக் கொடுத்தால் பர்மா, திபெத், வங்கம், போன்ற நாடுகளில் இருந்து வந்து காலம் காலமாக இருக்கும் அகதிகளுக்கும் குடியுரிமை உண்டா? அவ்வாறு குடியுரிமை வழங்கும் பட்சத்தில் அது என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும். என்கிற எந்த பின்விளைவுகளைப் பற்றியும் யோசிக்காமல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பதோடு, மத்திய அரசின் நூறு சதவீத ஈழ விரோத போக்கை மறந்தும் விடுக்கப்பட்ட கோரிக்கை என்றே தெரிகிறது. எண்பதுகளின் ஜூலைக் கலவரங்களைத் தொடர்ந்து தமிழகத்திற்கு அகதிகள் வரத்துவங்கினர். கடந்த முப்பதாண்டுகளில் பல் வேறு காலக்கட்டங்களில் ஈழ அகதிகள் மண்டபம் வழியாக வந்த வண்ணமே இருந்தனர். ராஜீவ்கொலைக்குப் பிறகு ஈழ அகதிகளை வரவேற்பதில் மத்திய,மாநில அரசுகள் தயக்கம் காட்டின, புலிகள் ஊடுறுவார்கள் என்கிற ஒரு பூச்சாண்டி காரணமாக ஈழ அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதில் ஏராளமான தடைகளை ஏற்படுத்தியதோடு, கடல் எல்லையை வலுப்படுத்தியதன் மூலம் கண்காணிப்பின் மூலம் ஈழ மக்களை வடிகட்டினார்கள் மத்திய மாநில ஆட்சியாளர்கள். இதில் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இருவருமே ஒருப்போலவே நடந்து கொண்டனர். எண்பதுகளின் தொடங்கி இன்று வரை சுமார் (கடந்த ஆண்டு செப்டம்பர் மாத முடிவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி தமிழ் நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் 73 ஆயிரத்து 378 இலங்கை அகதிகள் வசிக்கிறார்கள் ) ஆனால் முகாமுக்குள்ளும் வெளியிலுமாக இரண்டு லட்சம் அகதிக் குடும்பங்கள் வாழ்வதாக தெரிகிறது. இவர்களை எப்படியாவது தமிழகத்தை விட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதில் இந்தியா முனைப்பு காட்டத் துவங்கியுள்ளது. மத்திய அரசின் கொள்கை இலங்கை அகதிகள் விவாகரத்தில் இப்படி இருக்க மாநில அரசோ, கட்டாயப்படுத்தி யாரையும் திருப்பி அனுப்பக் கூடாது என்றது. ஈழ அகதிகளை திருப்பி அனுப்பும் முயர்ச்சி 1992‐ல் ஒருமுறை முன்னெடுக்கப்பட்ட போது ராமதாசும், நெடுமாறனும் நீதிமன்றத்திற்குப் போய் தடையாணை பெற்றார்கள். தவிறவும் தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயர்ச்சி அப்போது கைவிடப்பட்டது. ஆனால் இப்போது இலங்கையில் போர் முடிந்து விட்டதாகவும் அங்கு சுமூகச் சூழல் நிலவுவதாகவும் இலங்கையின் குரலையே இந்தியாவும் பிரதிபலிக்கிறது. அதையே தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகள் மீது திணிக்கவும் பார்க்கிறது. மத்திய வெளியுறவுத்துறை அகதிகளை திருப்பி அனுப்பும் கொள்கை முடிவை எடுத்து பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில், மத்திய அரசின் விருப்பத்திற்கு நேர் எதிராக மாநில அரசு, அல்லது ஆளும் கட்சியான திமுக ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வேண்டும் என்று கோருகிறது. ஒன்றிலோ அவர்களை இராணுவச் சர்வாதிகார இலங்கைக்கு திருப்பி அனுப்புவது, அல்லது அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை கொடுத்து இலங்கை பிரஜாஉரிமையைப் பறிப்பது. அகதி வாழ்வின் மிக மோசமான விளிம்புக்கு ஈழ அகதிகள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இலங்கையில் பெரிய அளவிலானா சமாதானமோ, இணக்கமான வாழ்வோ இப்போதும் இல்லை. போர் இல்லை அவளவுதானே தவிற தமிழ் மக்கள் அதே அச்ச உணர்வோடுதான் இன்றளவும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கிருக்கும் லட்சக்கணக்கான அகதிகளை வலுக்கட்டாயமாகவோ, நிர்பந்தித்தோ அங்கு அனுப்புவது அவர்களுக்கு பாதகமாகவே அமையும், அதே நேரத்தில் இவர்களுக்கு குடியுரிமை வழங்குவதும் ஒரு வகையில் பாதகமானதே. ஏற்கனவே பத்து லட்சம் தமிழ் மக்கள் இலங்கையில் இருந்து வெளியேறி உள்ளார்கள். அவர்கள் புலம்பெயர் நாடுகளில் குடியுரிமை வாங்கியும் வாங்காமலும் வாழ்கிறார்கள். முப்பத்தைந்து லட்சத்தைக் கொண்ட ஒரு இனத்தில் இந்த இடப்பெயர்வு என்பது ஆக மோசமான அரசியல் பலவீனத்தை ஏற்படுத்தும் சூழலை நாம் காண்கிறோம். இந்நிலையில் இங்கிருக்கும் அகதிகளுக்கும் இந்தியா குடியுரிமை கொடுத்தால் ஒட்டு மொத்தமாக தேர்தல் ஜனநாயகத்தின் மூலம் கூட கிடைப்பதாக இருக்கும் பாராளுமன்ற அதிகாரத்தைக் கூட ஈழ மக்கள் இழக்க நேரிடும். இருபதாயிரம் வாக்குகளே இலங்கையின் ஒரு தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானித்து விடும் என்கிற நிலையில், இந்தத் தொகை என்பது இந்தியாவுக்கு ஒன்றுமே இல்லை இலங்கைக்கு பெரிய விஷயம்.ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், எதிர்கால வாழ்வே கேள்விக்குள்ளாகி அச்சம் படர்ந்திருக்கும் நிலையில். தேர்தல் நடைமுறை மூலமே ஈழ மக்கள் தங்களுக்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். எதிர்காலம் என்பது புரிபடாத புதிராக இருக்கும் சூழலில், இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வங்கியை இல்லாமல் ஆக்குவதன் மூலம் அவர்களின் எதிர்கால அரசியல் கேள்விக்குள்ளாகலாம்.தவிறவும் ஐய்ரோபிய நாடுகளில் பொருளாதார,கலாசார மேம்பாடுகளோடு ஒப்பீட்டளவில்தான் மேம்பட்ட வாழ்வை வாழும் புலத்து மக்களை இந்தியக் குடியுரிமையோடு ஓப்பிடவே முடியாது ஏனென்றால் சொந்தக் குடிகளோ பட்டினியில் சாகும் போது, அகதிகளுக்கு வழங்கப்படும் குடியுரிமையும் சிவில் உரிமையும் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறது. செய்யவேண்டியது என்ன? இந்நிலையில் சட்டப்பேரவையில் அகதிகள் தொடர்பாக பேசிய மாநில அமைச்சர் அன்பழகன் இலங்கை யுத்தம் காரணமாக தமிழகத்துக்கு வந்த இலங்கை அகதிகள் இங்கே வசிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள 115 அகதிகள் முகாம்களில் 19 ஆயிரத்து 705 குடும்பங்களைச் சேர்ந்த 73 ஆயிரத்து 451 தமிழர்கள் வசிக்கின்றனர். மொத்தம் 26 மாவட்டங்களில் அகதிகள் முகாம்கள் உள்ளன. 1983ம் ஆண்டு முதல் 87 வரை முதல் கட்டமாகவும், 1989ம் ஆண்டு முதல் 91 வரை 2வது கட்டமாகவும், 1996 முதல் 2003 வரை மூன்றாவது கட்டமாகவும், 2006ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி முதல் தற்போது வரை நான்காவது கட்டமாகவும் தமிழகத்திற்கு அகதிகள் வந்துள்ளனர். இன்னும் வந்து கொண்டிருக்கின்றனர்.தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்காக 2008, 2009ம் ஆண்டில் தமிழக அரசு ரூ. 44.34 கோடியை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர 16 கோடியில் அகதிகளுக்காக திட்டம் தீட்டப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அன்பழகன் தெரிவித்தார். இந்நிலையில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள சூழலில் ஈழ அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் யோசனையில் இந்திய மத்திய அரசு இருப்பதாகத் தெரிகிறது.ஆனால் அகதிகளை திருப்பி அனுப்பும் முடிவு தமிழகத்தில் கொந்தளிப்புகளை உருவாக்கும் என்பதால் மத்திய அரசு நிதானப் போக்கை இதில் கடைபிடிக்கிறது. இந்நிலையில் அகதிகளுக்காக மாநில அரசு உருவாக்கியிருக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் அகதிகளை நிரந்தரமாகவே ஏற்றுக் கொள்ளும் சூழல் எழலாம் என்கிற நிலையில். தமிழகத்தில் உள்ள அகதிகளிடம் சுதந்திரமான அமைப்பு ஒன்றை வைத்து மனித உரிமை ஆர்வலர்களின் கண்காணிப்பில் அவர்களிடம் இந்த குடியுரிமை விருப்பம் தொடர்பாக கருத்தரிய வேண்டும் என்பதோடு, அவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். குடியுரிமை வேண்டுமா? வேண்டாமா?என்பதை முடிவு செய்ய வேண்டிய உரிமை ஈழ அகதிகளுடையதே அல்லாமல் இங்குள்ள தலைவர்களுடையது அல்ல, மாறாக இங்கு அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் இழிந்த வாழ்வை நீக்க உருப்படியாக ஏதாவது செய்யலாம். அவர்களுக்காக வழங்கப்படும் மானியங்கள் உணவுகள் எதுவும் பொதுமானதாக இல்லாத நிலையில் மிகவும் ஏழ்மையான துன்ப வாழ்வையே அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப்படுகிற மானியங்கள் உயர்த்தப்படவேண்டும். அவர்களின் சிவில், சமூக வாழ்வின் எல்லா சுதந்திரங்களும் பேணப்பட வேண்டும். அகதிகளும் கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். அவர்கள் தற்காலத்தில் எதிர் கொள்ளும் வாழ்வை சுயமரியாதையான வாழ்வாக மாற்ற முயர்சிக்க வேண்டுமே தவிற அகதிகளை ஒன்றிலோ அந்தப் பக்கம் தள்ளிவிடுவது, அல்லது இந்தப் பக்கம் இழுத்து பாழடிப்பது ஆகாது.

ஆடை ஏற்றுமதி வரிச்சலுகையும் அரசாங்கத்தின் சுய கௌரவமும்

வவுனியா முகாம்களுக்குள் 3 இலட்சம் தமிழ் மக்களை முடக்கி வன்னியில் 30 சத வீதமான சிங்கள மக்களை குடியேற்ற அரசாங்கம் திட்டமிடுவதாக யாழ். மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பத்தி ரிகையாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார். தமிழர்கள் தனித்து வாழக் கூடிய சூழ்நிலை உருவாகாமல் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் சிந்தனையிலேயே அரசாங்கம் செயற்படுகிறதெனவும் இதன் மூலம் எதிர்காலத்தில் தமிழர் தாயகக் கோட்பாடு எழாமல் போகலாமென்று அரசாங்கம் எண்ணுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 5 மாதங்களாகியும் இம்மக்கள் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பதன் பின்னணியை மிகத் தெளிவாக விளங்கப்படுத்தியுள்ளார் சுரேஷ் பிரேமச்சந்திரன். “”கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றுவதற்கு அனைத்து லக அமைப்புகள் அரசைக் கேட்ட போதிலும் அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை. அதேவேளை 150 ஏக்கர் நிலத்தில் பாரிய படைத் தளமொன்று கிளிநொச்சியில் நிறுவப்படுகிறது. ஆனாலும் 40 ஆயிரம் மக்கள் மீள் குடியேற்றப்பட்டதாக அரசு சொல்கிறது. இதன் பின்புலத்தில் ஜீ.எஸ்.பீ. பிளஸ் சலுகையைப் பெறுவது என்கிற நோக்கம் மறைந்திருக்கிறது” என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கின்றார். அரசு தற்போது எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை, இந்த ஜீ.எஸ்.பீ. பிளஸ் விவகாரமென்பது, வெளிப்படையாகத் தெரிகிறது. கொழும்புக் கடற் பரப்பில் இந்தியக் கடற்படையோடு இணைந்து கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டால் வாக்கு வங்கி நிரம்பக் கூடிய சாத்தியப்பாடுகள் உண்டு. போர் வெற்றியை தேர்தல்வரை தொடர்ந்து தக்க வைக்க கடற் சாகசங்களும் கண்காட்சிகளும் அரசிற்குத் தேவை. ஆனாலும் பொருளாதார ஸ்திர நிலைமை ஆட்டங் காணுமானால் கண்காட்சிகள் வழங்கும் மாயத் திரைகள் விலகத் தொடங்கிவிடும். ஏற்கனவே தவணை முறையில் நிதி வழங்கும் சர்வதேச நாணய சபை கொழும்பில் காரியாலயத்தை திறந்து கணக்குப் பார்க்கத் தொடங்கி விட்டது. வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் கணக்கு வாக்கெடுப்பு என் கிற புதிய பாதையை தேர்ந்தெடுத்து, சர்வதேச நாணய சபையையும் மக்களையும் இலகுவில் ஏமாற்றலாமென்று அரசு காய்களை நகர்த்துகிறது. நிதிப் பற்றாக்குறையை 5 சத வீதமாக்க வேண்டுமென நாணயச் சபை விடுத்த நிபந்தனையை அரசால் நடைமுறைப்படுத்த முடி யாது. ஆனாலும் இவ்வருட இறுதியில் இது 9 சத வீதமாக அதிகரிக்குமென்று பொருளியல் நிபுணர்கள் அறுதியிட்டுக் கூறுகின்றார்கள். இந்நிலையில் வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் முன் வைத்தால் அதன் குறை நிரப்பு வீதம் என்னவாக இருக்குமென்பது அம்பலமாகும். அந்தக் கணக்கு, சர்வதேச நாணய சபைக்கு, மகிழ்ச்சி தரக்கூடிய விடயமாக நிச்சயம் இருக்காது. அரசாங்கம் மீதான வாய்வழி விமர்சனங்களை முன்வைத்தாலும் பன்னாட்டு நிதிச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கவே உலக வங்கி, நாணயசபை போன்ற கடன் வழங்கும் நிறுவனங்கள், இலங்கை போன்ற மிகச் சிறிய நாடுகளுக்கு திட்டியபடியாவது கடனுதவி செய்கின்றன. அத்தோடு பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடன்களை, திருப்பிச் செலுத்துவதற்கும் இச் சபைகள் நிதியுதவி செய்கின்றன. ஜீ 20 கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரஷ்யாவும் உலக வங்கியிடமிருந்து 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளது. ஐரோப்பாவிற்கு எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் ரஷ்யாவிற்கே இந்தக் கதியென்றால் ஆடையிலும் தேயிலையிலும் அந்நியச் செலõ வணியை எதிர்பார்க்கும் இலங்கையின் நிலை குறித்து அதிக விளக்கங்கள் தேவையில்லை. சுனாமி அனர்த்தத்தின்பின் 2005 ஆம் ஆண்டு ஆடை ஏற்றுமதிக்கான வரிச் சலுகை ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டது. ஆனால், அதை வழங்குவதற்கு பற்பல நிபந்தனைகள், ஏற்றுமதி வரியை முற்றாக நீக்குவதால், மேற்குலக நாடுகள் பாதிப்படைகின்றன என தவறாக எடை போடக்கூடாது. இது பிச்øசயும் அல்ல. இலங்கையில் இயங்கும் இந்த ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கான முதலீடுகள் யாவும் அனேகமாக மேற்குலகின் தனியார் வர்த்தக நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. ஒப்பீட்டளவில் சிறிய முதலீட்டோடு குறைவõன கூலியில் உழைப்புச் சுரண்டல் பிரயோகிக்கப்பட்டு பன்மடங்கு விலையில் இத் தைத்த ஆøடகள் ஐரோப்பாவில் விற்பனையாகின்றன. முதலீடு செய்யும் ஐரோப்பிய கம்பனிகளுக்கு இலாபம்தான் அதிகமாகிறது. வரிச் சலுகையால் இழந்ததை விட, விற்பனை வரி மூலம் அதிக பணத்தை ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் பெற்றுக் கொள்கின்றன. ஆனாலும் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், தமது ஊதிய உயர்விற்காக இன்னமும போராடிக் கொண்டுதõனிருக்கிறார்கள்.21 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையின் மொத்த தேசிய வருமானம் 42 பில்லியன் அமெரிக்க டொலர்களென மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2008 ஆம் ஆண்டிற்கான ஆடை ஏற்றுமதியில் 3.3 பில்லியன் டொலர்கள் ஈட்டப்படுகின்றன. ஏறத்தாழ மொத்த தேசிய வருமானத்தில் 10 சதவீதமிது. 270 தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்களுமாக ஒரு மில்லியன் மக்கள் இத்துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைக்கப்பட்டுள்ளனர். இத் தொழிற்றுறையானது நாட்டின் இரண்டாவது பெரிய அந்நியச் செலவாணியை ஈட்டும் சக்தியாகும். சர்வதேச அளவில் இதன் பாரிய சந்தைகளாக ஐரோப்பிய ஒன்றியத்தையும் அமெரிக்காவையும் குறிப்பிடலாம். 1.6 பில்லியன் டொலர்களைப் பெற்றுத் தரும் ஐரோப்பிய ஒன்றியம், மொத்த வருமானத்தில் 48 சத வீதத்தையும் 1.5 பில்லியனை வழங்கும் அமெரிக்கா 45 சத வீதத்தையும் உள்ளடக்குகிறது. இலங்கையில் 2002 இல் ஸ்தாபிக்கப்பட்ட “ஜாப்’ எனப்படும் பேரவை 2010 ஆம் ஆண்டிற்கான தைத்த ஆடை ஏற்றுமதியால் பெறப்படும் வருமானம் 5 பில்லியன் அமெரிக்க டொலரை எட்டுமென எதிர்வு கூறியுள்ளது. இத் தொகையைப் பெறுவதற்கு பன்னாட்டுக் கம்பனிகளான, விக்டோரியாஸ் சீக்ரட், கப்,மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர், நைக் ரொமி ஹில்பிகர் ரையம்ப், ஆன் ரெயிலர் போன்றவை தொடர்ந்தும் ஆதரவளிக்குமென்று “ஜாப்’ பேரவை நம்புகிறது. அதேவேளை இதில் “”ரைஸ்டார் ஆடை ஏற்றுமதி நிறுவனம்” எனும் நிறுவனமும் இப்பன்னாட்டு கம்பனிகளோடு போட்டி போடுவதை அவதானிக்கலாம். இதன் நிறுவனர் குமார் தேவபுர, சிறுவர்களுக்கான அரை மில்லியன் ஆடைகளை, பிரித்தõனியாவிலுள்ள “டெபனம்ஸ்’ (ஈஞுஞஞுணடச்ட்ண்) நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான முதல் கேள்விப் பத்திரமொன்றைப் பெற்றுள்ளார். இந் நிறுவனமானது 50,000 சதுர அடி நிலப் பரப்பில் பாரிய தொழிற்சாலை ஒன்றினை திருமலையில் நிறுவிட 50 மில்லியன் ரூபாக்களை, அரச முதலீட்டுச் சபை மற்றும் “முதலீட்டு ஊக்குவிப்பு முகவர்” அமைப்புகளிடமிருந்து ஏற்கனவே பெற்றுள்ளது. அதற்கான நிலம், அரசால் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இத் தொழிற்சாலை நிர்மாணிப்பிற்கான மொத்தச் செலவு 75 மில்லியன் ரூபாக்களாகும். இதற்கான இயந்திர உபகரணங்களுக்கு மட்டும் ஏறத்தாழ 100 மில்லியன் ரூபாக்களை இந் நிறுவனம் செலவிட்டுள்ளது. இவை தவிர அண்மைக் காலமாக பன்னாட்டு கம்பனிகள் செலுத்திவரும் முதலீட்டு ஆதிக்க நகர்வுகளையும் அவதானிக்க வேண்டும். “”மாஸ் ஹோல்டிங்” (Mச்ண் ஏணிடூஞீடிணஞ்) என்கிற பல்தேசிய நிறுவனம் “நைக்’ (Nடிடுஞு) எனப்படும் நிறுவனத்தோடு இணைந்து ஆடை உற்பத்தியில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்துவதற்கான பயிற்சி நிலையங்களை துல்கிரியவில் அமைக்க திட்டமிடுகிறது. காலணி தயாரிப்பில் புதுமைகளைச் செய்ய வியட்னாமில் பயிற்சி நிலையமொன்றை இக்கூட்டணியினர் நிறுவி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அதேவேளை அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களைக் கொண்ட பன்னாட்டுக் கம்பனியான “”பேர்ஸ்ராவ் ஹோல்டிங்” (கஞுணூண்tச்ஞூஞூ ஏணிடூஞீடிணஞ்) உள்நாட்டு முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து, “ஏற்றுமதி வர்த்தக இல்லம்’ (உதுணீணிணூt கூணூச்ஞீடிணஞ் ஏணிதண்ஞு) ஒன்றினை நிறுவப் போகிறது. அதற்கான கூட்டு முதலீட்டில் ஈடுபடும் 5 இலங்கைக் கம்பனிகளுக்கு 11.75 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இலங்கை முதலீட்டுச் சபை இணங்கியுள்ளது. ஆரம்ப கட்டமாக 215,000 டொலர்களை முதலீடாகப் போடும் இக் கம்பனிகள் மின் உபகரணங்கள் மற்றும் ஆடை உற்பத்திகளை சர்வதேச சந்தையில் விற்கத் திட்டமிட்டுள்ளன. இவை தவிர ஜேர்மனி, ஹொங்கொங் முதலீட்டாளர்கள் நடத்தும் ஜே.சீ.ஆர். (ஒ.இ.கீ.) நிறுவனத்தோடு, இலங்கை முதலீட்டுச் சபை, ஒப்பந்தமொன்றில் அண்மையில் கைச்சாத்திட்டிருந்தது. 265,000 அமெரிக்க டொலர் முதலீட்டில் தமது உற்பத்தியை ஆரம்பிக்கும் இந் நிறுவனம் தைத்த ஆடைகளை மத்திய ஐரோப்பா, சுவிற்சர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது. “”ஜே.சி.ஆர். காமண்ட்” பணிப்பாளர் ஜோகனாஸ் ஹில், இம் முதலீடு குறித்து தெரிவிக்கும் செய்தி தான் மிக முக்கியமானது. அதாவது சர்வதேச சந்தைகளை நோக்கி இலகுவாக நகர்வதற்கு ஸ்ரீ லங்காவின் கேந்திர முக்கியத்துவம்மிக்க மையத் தரிப்பிடம், சாதகமாக இருப்பதாக அவர் கூறுகின்றார். கடந்த வருட ஏற்றுமதி வருமான புள்ளி விபரங்களின் அடிப்படையில் 8.1 பில்லியன் மொத்த வருமானத்தில் தீர்வையற்ற 7200 உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி வருமானமானது 36 சதவீதமாக இருப்பதைக் கவனிக்க வேண்டும். இவ்வரிச்சலுகையை இழந்தால் இதே தொழில் துறையில் போட்டியிடும் சீனா, இந்தியா, வியட்நாமுடன் மோத வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்படும். ஆடை உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய விரும்பும் சீனாவும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நிறுத்தப்பட்டால் இலங்கையின் பக்கம் தனது பார்வையைத் திருப்பாது. நாட்டின் சுய கௌரவம், இறைமை பற்றி, சர்வதேச வர்த்தக மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திக்கான அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பேசுகின்றார். பில் கிளின்டன் மொனிகா லிவி ன்ஸ்கி விவகாரத்தை நினைவூட்டி, அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டனுடன் மோதுகின்றார் பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க. தனி மனிதர் மீதான தாக்குதல்கள், சர்வதேச இராஜதந்திர நகர்வுகளில் பாரிய சிக்கல்களையே தோற்றுவிக்கும். அச்சுறுத்தி அடி பணிய வைக்கும் இராஜதந்திரங்கள், யானை தன் தலைமீது மண் அள்ளி வீசிய கதையாகவே முடியும். ஆகவே வவுனியா “மெனிக்பாம்’ முகாமிற்கு விஜயம் செய்த பிரித்தானிய சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மைக் பொஸ்டர் வெளிப் டுத்திய கருத்துக்களை, ஐரோப்பிய ஒன்றியம் கருத்தில் கொள்ளுமாöவன்பதை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு பின்னர் தெரிந்து கொள் ளலாம். பருவ மழை ஆரம்பிக்கும் முன்பாக முகாம் மக்கள் வெளி÷யற்றப்பட வேண்டுமென வலியுறுத்தும் அமைச்சர், டிசம்பர் மாதம்வரை அதற்கான காலக் கெடுவினையும் அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார். சுய கௌரவச் சிக்கலில் வீழ்ந்துள்ள அரசாங்கம், இக் கூற்றின் கனதியைப் புரிந்து கொள்ளுமாவென்று தெரியவில்லை. தெளிவினைத் தொலைத்து விட்டு தீர்வி னைத் தேட முடியாது.

தீபா”வலி”யும் தமிழரும்!

உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது. ஆனால் தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு வெட்கம் கெட்ட இனமும் இந்த உலகத்தில் உண்டு. அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற தமிழினம்தான் அது. பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்து, தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாங்கள்தான் அந்த பெருமைக்குரியவர்கள். இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் “தீபாவளி வாழ்த்துக்கள்” சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது. ஆனால் இந்த தீபாவளியின் பின்னணி வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? எங்களின் மூதாதையர் அழிக்கப்பட்ட நாளை, தமிழினம் தோற்கடிக்கப்பட்ட நாளை நாம் கொண்டாடுகிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அதைப் பார்ப்பதற்கு முன் தீபாவளியை தமிழினத்திற்குள் திணித்த ஆரியப் பார்ப்பனர்கள் தீபாவளி குறித்து சொல்லுகின்ற கதையை சுருக்கமாகப் பார்ப்போம். முன்பொரு காலத்தில் ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டானாம். படைப்புத் தொழிலை செய்வதற்கு பூமி இல்லையே என்று கவலைப்பட்ட பிரம்மா விஸ்ணுவிடம் முறையிட்டாராம். விஸ்ணு பன்றியாக மாறி அரக்கனோடு சண்டை போட்டு அவனை கொன்று பூமியை மீட்டாராம். பூமிக்கு தன்னை மீட்ட பன்றியின் மீதே காதல் வந்துவிட்டதாம். பன்றியும் சரியென்று சொல்ல இருவரும் உறவு கொண்டார்களாம். அதனால் ஒரு பிள்ளை பிறந்ததாம். அவன்தான் நரகாசுரன் என்ற அரக்கனாம். அவன் தவம் செய்து தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றானாம். வரம் பெற்ற அரக்கன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினானாம். கடைசியில் விஸ்ணு கிருஸ்ணனாகவும் பூமாதேவி சத்தியபாமாவாகவும் அவதாரமெடுத்து நராகசுரனோடு போரிட்டார்களாம். கடைசியில் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவனுடைய தாயாகிய சத்தியபாமாவால் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளியாம். இப்படி ஒரு ஆபாசமான புராணக் கதையைக் அடிப்படையாகக் கொண்டு இந்த தீபாவளியை ஆரியப் பார்ப்பனியம் தமிழர்களுக்குள் திணித்தது. உருண்டையாக இருக்கின்ற பூமியை எப்படி பாயாக சுருட்டலாம் என்றோ, பூமியிலே இருக்கின்ற கடலுக்குள் எப்படி பூமியையே ஒளித்து வைக்கலாம் என்றோ, பூமியாலும் பன்றியாலும் உறவு கொள்ள முடியுமா என்றோ கேள்விகளை எழுப்ப முடியாதபடி தமிழினத்தை மடமைக்குள் தள்ளியது ஆனால் தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி வேறு. இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். தெரிந்த பின்பும் கொண்டாடினால் அவர்கள் சூடு சுரணை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள். பாரத கண்டத்தின் வரலாறு என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர்கள் எனப்படுகின்ற தமிழர்கள் ஆண்டு கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பை வந்தேறு குடிகளான ஆரியர்கள் மெது மெதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு, மொழி ஆக்கிரமிப்பும், பண்பாட்டு ஆக்கிரமிப்பும் நிகழந்தது. ஆரியர்களின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழர்கள் நீண்ட காலம் வீரப் போர் புரிந்தார்கள். இந்தப் போர்கள்தான் புராணக் கதைகளில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போர்களாக வர்ணிக்கப்படுகின்றன. சுர பானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சுர பானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். அத்துடன் அசுரர்கள் தெற்கே வாழ்பவர்கள் என்றும் புராணக் கதைகளில் குறிப்பிடப்படுகிறார்கள். கிருஸ்ணனும் சரி அதற்கு முந்தையவனாக சொல்லப்படுகின்ற இராமனும் சரி, அசுரர்களை அழிப்பதற்கு தெற்கு நோக்கி படை எடுத்து வந்ததாகவே ஆரியர்களின் புராணங்கள் சொல்லுகின்றன. அசுரர்கள் கறுப்பாக இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். புராணக் கதைகளை ஆரய்ந்த பாரதத்தை சேர்ந்த நடுநிலையான ஆராய்ச்சியாளர்களும், மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அசுரர்கள் என்று திராவிடர்களையே குறிப்பிடப்படுகிறது என்று கூறி உள்ளார்கள். ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை கூறுகின்ற கதையே இராமயணம். அன்று தமிழ் மண்ணை ஆண்ட மன்னன் இராவணனாக உருவகப்படுத்தப்படுகிறான். ஆக்கிரமிப்பு போர் நடத்திய ஆரியர்களின் மன்னனாக இராமன் இருக்கின்றான். தமிழ் மண்ணின் பல பகுதிகளை கைப்பற்றி தமிழ் மன்னர்களை ராமன் வெற்றி கொள்கிறான். கடைசியில் தமிழர்களின் தலைநகரான இலங்கை வரை சென்று பல சூழ்ச்சிகள் செய்து இராவணனையும் கொல்கிறான். இதுதன் இராமயணக் கதை. இராவணனை பேரரசனாகக் கொண்டே அன்று தமிழர்களின் அனைத்து அரசுகளும் இருந்தன என்பதை இராமாயணத்தை ஆராய்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது. இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள். கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள். இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது அன்று ஆரியர்கள் அன்று தமிழின விடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள். முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமான பற்களும் முளைத்து விட்டன. ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்! சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா? நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால். அப்பொழுது எங்களின் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது. எமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள். இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலைவீரனின் நினைவுநாளை நாம் மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம். ஆரியர்கள் தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையோ கொண்டாட வைத்து விட்டார்கள். இதை உணர்ந்து தமிழினம் இந்த தீபாவளியை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். இங்கே இன்னும் ஒன்றையும் குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும். இன்றைய நாகரீக உலகில் யாருடைய இறப்பும் கொண்டாடப்படுவதில்லை. எம்மை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த எதிரிகள் கொல்லப்பட்ட நாளை நாங்கள் யாரும் கொண்டாடுவதில்லை. கோடிக்கணக்கில் மனிதர்களை கொன்ற கிட்லரின் இறப்பையும் யாரும் கொண்டாடுவதில்லை. இப்படி யாராக இருந்தாலும், ஒரு இறப்பு கொண்டாடப்படுவதில்லை. ஆனால் நாம் எமக்காக உயிரை ஈந்த ஒரு மன்னனின் நாளை தீபாவளி என்று மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். இந்த நிலை மாறும் நாளே உண்மையில் தமிழினம் விடுதலை அடைந்த நாளாக இருக்கும்.

கடல் ஆதிக்கப் போட்டியில் உருவாகும் இந்திய இலங்கை முரண்பாடுகள்

2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம், இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியாளர்களால் சேது சமுத்திரத் திட்டத்திற்காக 2,427 கோடி இந்திய ரூபாய்கள் ஒதுக்கப்பட்டது.இதற்கான அடிக்கல்லை, அவ்வருடம் ஜூலை 2ஆம் திகதியன்று, பிரதமர் மன்மோகன்சிங் மதுரையில் நாட்டினார். மூன்றரை வருடங்களில் முடிவடையுமென்று கணிப்பிடப்பட்ட இத்திட்டம், ராமர் கட்டிய அணை விவகாரத்தால் இழுபட்டுச் செல்கிறது. 7500 கிலோ மீற்றர் நீள கடல் எல்லையைக் கொண்ட இந்தியாவிற்கு, பாக்கு நீரிணையானது, தொடர் பாதையைப் பேணுவதற்கு இடையூறாகவிருக்கிறது. இந்தியாவின் மேற்குத்துறை முகங்களிலிருந்து கிழக்குத் துறைமுகங்களுக்குச் செல்வதற்கு, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்று, இலங்கையைச் சுற்ற வேண்டும். இச் சேது சமுத்திரத் திட்டம், இந்தியாவின் கடல் ஆதிபத்திய எல்லைக்குள் அமைந்தாலும், ஐ.நா.சபையின் கடற் சட்ட சாசனத்தின்படி இலங்கைக்கு இதில் ஆட்சேபனை இல்லை என்கிற ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும். ஆனாலும், விடுதலைப் புலிகளுடன் தீவிரமான முரண்பாட்டினைக் கொண்டிருந்த அரசாங்கம், சேது சமுத்திரத் திட்டத்தினை எதிர்த்து, இந்தியாவைப் பகைத்துக் கொள்ள அன்று விரும்பவில்லை. அரசு சாராத அமைப்பின் கடலாதிக்கத்தை இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்பதைப் புரிந்து கொண்ட இலங்கை, இத்திட்டம் குறித்து அதிகம் பேசவில்லை. சேது சமுத்திரத் திட்டமானது, தென்னிலங்கைத் துறைமுகங்களின் முக்கியத்துவத்தை குறைத்து, பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துமென்கிற விவகாரத்தை உணர்ந்தாலும் நீண்ட நோக்கின் அடிப்படையில் ஆயுதப் போராட்டத்தை நிர்மூலமாக்க வேண்டுமென்கிற குறுகியகால உத்திக்கு அரசு முன்னுரிமை வழங்கியது. இத்திட்டம் ஆரம்பித்த காலத்தில் இந்திய கப்பல் போக்குவரத்து மத்திய அமைச்சராக இருந்தவரே தமிழக தூதுக்குழுவின் தலைவராக இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு. இந்த பயணத்தின் பின்புலத்தில், பிராந்திய கடலாதிக்கம் குறித்த இந்தியாவின் கரிசனை, மறைமுகமான பங்கினை வகித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆளும் கட்சி உறுப்பினர்களை அனுப்பியதன் ஊடாக, மோதல்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. அத்தோடு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மறுப்பு ஐ.நா.வின் அழுத்தங்கள், மனித உரிமை சங்கங்களின் நச்சரிப்பு போன்றவற்றை எதிர்கொள்ள இலங்கைக்கு உதவும் வகையில் இந்தியாவால் பயன்படுத்தப்பட்டார்கள் இந்த தமிழக எம்.பி.க்கள். 58ஆயிரம் மக்கள், 15 நாட்களுக்குள் மீள குடியமர்த்தப்படுவார்களென்று தமிழக முதல்வர் கருணாநிதி வெளியிட்ட செய்தி ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை வழங்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானிக்கும் நாளான ஒக்டோபர் 15 இல் வந்தது. இவர்களின் பயணத்திற்கும், ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை நீடிப்பிற்கும், இடைவெளியற்ற நெருக்கமான தொடர்பு இருப்பது போல் தெரிகிறது. முகாம்களிலுள்ள மக்கள் அவலப்படுகிறார்களென்று தமிழக மக்களுக்கும், மக்கள் மீள் குடியேற்றம் ஆரம்பமாகி விட்டதென இந்திய மத்திய அரசிற்கும், இரட்டைத் தொனியில் கலைஞர் கூறியுள்ளார்.இந்த செய்தியைத் தான், இலங்கை அரசிற்கும், சர்வதேச நாடுகளுக்கும் சொல்ல இந்தியா விரும்பியது. அனைத்துலகின் அழுத்தங்களிலிருந்து இந்தியா தம்மைக் காப்பாற்றுமென்கிற நம்பிக்கையிலேயே தமிழக ஆட்சிக் குழுவை இலங்கை அரசாங்கம் வரவேற்றது. ஆபத்தில் உதவும் நண்பன் பிரதியுபகாரமாக இனி எதைக் கேட்பார் என்பது பற்றிப் பார்ப்போம். கச்சதீவிலிருந்து, முகாம் நிலை குறித்த அறிக்கை வரை, பல விட்டுக் கொடுப்புக்களையும், சமரசங்களையும் இந்தியா மேற்கொண்டுள்ளது. ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்குச் செய்த பணிக்காக, திருமலை நிலத்தடி எண்ணெய் குதங்களும், அனல் மின் நிலைய ஒப்பந்தங்களும், காங்கேசன்துறை துறைமுகமும், மன்னார் கடற்பரப்பும் அரசால், தானமாக இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், மே மாதம் நடந்த இந்திய தேர்தல் காலத்தில், அரை மில்லியன் சதுர கிலோமீற்றர் பரப்பளவு கடற்படுகையை, தனதென உரிமை கொண்டாடிய இந்தியா, தற்÷பாது மேலதிகமாக, அடுத்த அரை மில்லியன் ச.கி.மீற்றர் எண்ணெய், கனிமம், உலோகம், எரிவாயு வளம் கொண்ட கடற்படுக்கையை தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது. இந்த புதிய கடற்படுக்கையால்தான், இலங்கையுடன் கடலாதிக்கச் சிக்கல் உருவாகப் போகிறது. முதலில் கடற் சட்டத்திற்கான ஐ.நா. சாசனம் (க்NஇஃOகு) குறிக்கும், “கடற்படுக்கை’ (குஞுச் ஆஞுஞீ) என்பதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது “கடற் படுக்கை’ யானது ஆழ்கடலுக்கு முன்பாக, ஆழமில்லாக் கடலின் படுக்கையாயுள்ள கண்டத்தைச் சார்ந்த தரை அல்லது கண்டத்திட்டு. இதனை பெருநிலப்பரப்பின் பாறை அடுக்கின் நீட்சி என்றும் கூறலாம். இந்த நீட்சியின் எல்லைக்கு அப்பால், அப் பெரு நிலப்பரப்பைச் சார்ந்த நாடு, உரிமை கோர முடியாது. மே 1999 இல் அல்லது அதற்கு முன்பாக ஐ.நா. சாசனத்தில் இணைந்து கொண்டவர்கள், மே 2009 இல் தமக்குரிய கடற்படுக்கையை, அறிவியல் பூர்வ ஆதாரத்தோடு வரையறுத்து அதற்கான உரிமை கோரலை முன்வைக்கலாமென அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும், மே 11இல், இந்தியா சமர்ப்பித்த முழுமையற்ற உரிமை கோரல், 10 வருட காலக் கெடுவைத் தாண்டினாலும், மீதியை வேறொரு தினத்தில் முன்வைக்கலாமென்கிற அனுமதியை அது பெற்றது. இங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது. மே 8 இல் தனது இறுதியான அறிக்கையை சமர்ப்பித்தபோது, இந்தியா பெற்ற நாள் நீடிப்பு அனுகூலத்தை, இலங்கை கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது. காலக்கெடு கடந்த பின்னர், இந்தியா முன்வைக்கவிருக்கும், அந்தமான், நிக்கோபர் தீவுகளின் மேற்குக் கடல் பகுதியில் உள்ள 600,000 சதுர கிலோ மீற்றர் கடற்படுக்கைக்கான உரிமை கோரலில், இலங்கை சமர்ப்பித்த படுகைகளும் உள்ளடங்குகிறது. இலங்கை பெருநிலப்பரப்போடு இணைந்த பாறை அடுக்கின் நீட்சிக்குள், இப்படுகை வரவில்லையென்பதே இந்தியாவின் வாதம். இத்தகைய முரண்பாடுகளை இரு நாடுகளும் பேசித் தீர்க்கலாம். அவ்வாறு ஒரு இணக்கச் சூழ்நிலை உருவாகாதநிலையில், ஹம்பேர்க்கிலுள்ள கடற் சட்டத்திற்கான சர்வதேச நீதிமன்றிற்கு இவ்விவகாரத்தை இலங்கை கொண்டு செல்லலாம். ஏற்கெனவே பங்களாதேஷிற்கும் மியன்மார் அரசிற்குமிடையே, கடல் எல்லையை வரையறுக்கும் விவகாரத்தில், இதுபோன்ற சிக்கல் உருவாகியுள்ளதைக் குறிப்பிடலாம். கடல் எல்லை வகுப்பிற்கான காலக்கெடு, 2011 வரை பங்களாதேஷிற்கு வழங்கப்பட்டுள்ளது. மியன்மாரிற்கான காலக்கெடு மே 2009 இல் முடிவடைந்துவிட்டது. ஐ.நா. சாசனத்தின் கடற் சட்டத்தின் (க்NஇஃOகு) பிரகாரம், ஒருநாட்டின் கடல் எல்லை, 3 இலிருந்து 12 மைல் வரை அதிகரிக்கப்பட்டு, பிரத்தியேக பொருளாதார வலயம் (உதுஞிடூதண்டிதிஞு உஞிணிணணிட்டிஞி ஙூணிணஞு) 200 மைல் களாக நிர்ணயிக்கப்பட்டது. அதாவது இந்த வலயத்தில் கனிமவளத்தை அகழ்ந்தெடுப்பதற்கும், அப்பகுதியை உரிமை கொண்டாடுவதற்கும் இச்சாசனம் வழிவகுத்துள்ளது. ஆனாலும், உரிமை கோரப்படும் கடலடிப் பாறை அடுக்கின் நீட்சி, ஐ.நா. சாசனம் வரையறுத்த 200 கடல் மைல் எல்லைக்குள் அப்பால் விரியுமாயின், அதற்கான அறிவியல் பூர்வமான தொழில்நுட்பத் தகவல்களை, உரிமை கோரல் நாடு வழங்க வேண்டும். இதில் வங்கக்கடல் விவகாரத்தில், தனது நிலை மிகத் தெளிவாக, விஞ்ஞான பூர்வமான தகவல்களோடு தாம் இருப்பதாகவும் இந்தியா நம்புகிறது.1947 இல் சுதந்திரமடைந்த இந்தியா, தனது பாரம்பரிய கடற் பிராந்திய எல்லையை 3 மைல்களாக பிரகடனம் செய்தது. 1955 ஆகஸ்ட்டில், பாறை அடுக்கின் நீள அகலத்தை கருத்தில் கொள்ளாமல், கடற் படுக்கைக்கான பூரண இறைமையை உரிமை கோரியது. 1956 மார்ச்சில் கடல் ஆதிக்கத்தை 6 மைல்களாக அதிகரித்து, 29 நவம்பர் 1956 இல். தாமே வரையறுத்த எல்லைக்கு அப்பாலுள்ள 100 மைல் கடற்பரப்பை, மீன்பிடி வலயமாக்கியது. அதேவேளை ஐ.நா.வின் 1982 ஆண்டு சாசனமே, கடற் சட்டத்தில் பல இறுக்கமான வரையறைகளை கொண்டு வந்தது. இதனை கடற் சட்டத்திற்கான ஐ.நா.சாசனம் 3 (க்NஇஃOகு 3) என்று கூறுவார்கள்.கடல் எல்லை 12 மைல்களாகப்பட்டு, பிரத்தியேக பொருண்மிய வலயம் (உஉஙூ) 200 மைல்களாக நிர்ணயிக்கப்பட்டு, அப்பகுதிக்கான ஆதிபத்திய உரிமையும், விசேட பொருளாதார நடவடிக்கைகளுக்கான அனுமதியும் இச்சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்டதெனலாம். ஆயினும் தமது அனுமதி இல்லாமல், பிறநாட்டு போர்க் கப்பல்கள் உள் நுழையக் கூடாதென்கிற விவகாரமும், இக்கடல் எல்லை வரையறுப்பில் முக்கிய பங்கினை வகிக்கிறது. பொருளாதார நலன்களுக்கு அப்பால், நாட்டின் பாதுகாப்பு பற்றியதான விடயத்தில் கடற்பிராந்தியம் பெரும் பங்கு வகித்திருப்பதை இரண்டு உலகப் போர்களிலும் காணலாம். கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை யுகத்திலும், கடற்படையின் முக்கியத்துவம் குறைந்து விடவில்லை. இந்த ஐ.நா. சாசன உடன்பாட்டில் கைச்சாத்திட்ட நாடுகள், சுமுகமான முறையிலோ அல்லது சர்வதேச நீதிமன்றிலோ, தமது கடல் ஆதிக்க எல்லையை வகுத்த பின்னர், மீண்டும் அதனை மீளப் பெறும் சாத்தியப்பாடுகள் மிக அரிதாகவே இருக்கும். நிலப்பரப்பிலுள்ள அத்தனை இறைமை சார்ந்த உரிமைகளும், கடலிலும் பிரயோகிக்கப்படும். தம்மைச் சூழவுள்ள அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்து சமுத்திரம் போன்ற கடல் பகுதிகளில், தமது ஆதிபத்திய எல்லைகளை நீடித்து, ஒரு அகண்ட, நிலம்,கடல் சார்ந்த இந்தியா உருவாக்கும் சாத்தியப்பாடுகளை இப்போது காணக்கூடியதாகவிருக்கிறது. மீன் வலை உயர்த்தப் பயன்படும் சிறு கச்சதீவைக் கொடுத்து, பெரும் கடற் பரப்பை தமதாக்க இந்தியா மேற்கொள்ளும் நகர்வுகளை பிராந்திய வல்லரசுகள் எவ்வாறு எதிர்கொள்ளுமென்பதை அவதானிக்க வேண்டும். பொருளாதார நலனும், நாட்டின் பாதுகாப்பும் பின்னிப் பிணைந்துள்ள இக் கடலாதிக்கப் போட்டியில், ஈழத் தமிழினத்தின் இறைமையும், உரிமைப் போராட்டமும் எத்தகைய பங்கினை வகித்தது என்பதை மே மாதம், முள்ளிவாய்க்காலில் தரிசித்தோம்.

மேற்குலகம் – ஈழத்தமிழ் மக்கள் உறவுகள் தென்னாசியாவில் அமைதியை உருவாக்கும்

கடந்து சென்ற வாரம் சிறீலங்காவில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சிறீலங்கா அரசின் மீது மேற்குலகம் மேற்கொண்டுவரும் கடும்போக்கு நடவடிக்கையின் ஒரு முக்கிய திருப்பமாக கடந்த திங்கட்கிழமை (19) ஜிஎஸ்பி பிளஸ் வர்த்தக வரிச்சலுகை தொடர்பான அறிக்கை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையானது சிறீலங்கா அரசிற்கு அதிக அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறீலங்காவில் மோசமடைந்துள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள், தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பெருமளவான மக்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் அதிக கவனங்களை தனது அறிக்கையில் செலுத்தியுள்ளது. ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலுவான கருத்தை கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 19 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்லுகையின் விதி முறைகளை மீறிவிட்டதாக தெரிவித்துள்ளதுடன், சிறீலங்காவுக்கான வரிச்சலுகையை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கும் தீர்மானித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவானது மேலும் வலுப்பெற்றால் சிறீலங்கா மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை. எனினும் சிறீலங்காவை காத்துக்கொள்ள இந்தியா, சீனா போன்ற நட்புநாடுகள் முயலலாம். ஆனால் அவர்களின் உதவிகள் என்பது நீண்டகாலம் சிறீலங்காவை காப்பாற்றப்போதுமானதல்ல. இருந்த போதும் இந்தியாவின் முயற்சிகள் சிறீலங்காவுக்கு சார்பாக மேற்குலகத்தின் நகர்வுகளை மாற்றும் ஒரு காய்நகர்த்தலாகவே கருதப்படுகின்றது. உதாரணமாக இந்த வருடத்தின் நடுப்பகுதியில் சிறீலங்காவுக்கான 1.9 பில்லியன் டொலர் கடன்தொகை தொடர்பாக அனைத்துலக நாணயநிதியம் பல அழுத்தங்களை கொண்டுவர முயன்றபோது இந்தியா அதனை தடுத்து நிறுத்தியிருந்தது. சிறீலங்காவுக்கான கடன் தொகையை அனைத்துலக நாணயநிதியம் வழங்காதுபோனால் இந்தியா சிறீலங்காவுக்கு 2.6 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கும் என அனைத்துலக நாணயநிதியத்திற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேரிடையாக எச்சரிக்கையை விடுத்திருந்ததாக சிறீலங்காவின் பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இந்தியாவும், பாகிஸ்த்தானும் இணைந்து சிறீலங்காவுக்கு ஆற்றிவரும் உதவிகள் தொடர்பாகவும் அவர் தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். அதனை போன்றதொரு முயற்சியை தான் இந்தியா இந்த மாதத்தின் ஆரம்பத்திலும் மேற்கொண்டிருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்லுகையின் நீடிப்பு காலம் ஒக்டோபர் மாதம் என்பதனால் தமிழக அரசின் ஊடாக தனது நாடாளுமன்ற குழவினரை சிறீலங்காவுக்கு அனுப்பி சிறீலங்கா தொடர்பான நல்ல கருத்துக்களை மேற்குலகத்திடம் ஏற்படுத்த இந்தியா முற்பட்டிருந்தது. இந்திய நாடாளுமன்ற குழுவினரின் இந்த விஜயம் சிறீலங்காவினால் மேற்கொள்ளப்பட்டதொன்று. அதனை மலையத்தின் முன்னனி அமைச்சர் ஒருவரின் ஊடாகவே சிறீலங்கா அரச தரப்பு தமிழக அரசதரப்புடன் மே;றகொண்டிருந்தது. ஆனால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடகங்களும், இந்திய மத்திய அரசின் காய்நகர்த்தல்களும் மேற்குலகத்தின் நகர்வுகளில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை. மேற்குலகம் பொருளாதார அழுத்தங்களின் ஊடாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 19 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையினை தொடர்ந்து சிறீலங்கா மீதான நடவடிக்கைக்கு அது தனது உறுப்பு நாடுகளின் ஆதரவுகளை தற்போது திரட்டி வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக வரிச்சலுகையானது சிறீலங்காவின் பொருளாதாரத்தின் மிகமுக்கிய ஆணிவேர், அதன் மூலம் தென்னிலங்கையில் 350,000 மக்கள் நேரிடையாகவும், 750,000 மக்கள் நேரடியற்ற வழிகளிலும் தொழில்வாய்ப்புக்களை பெற்று வருகின்றனர். எனவே தான் அரசோ அல்லது எதிர்க்கட்சிகளோ என்ன கூறினாலும் இந்த வரிச்லுகை தமக்கு அவசியம் என தொன்னிலங்கை தொழிலாளர் சங்கப்பிரதிநிதிகள் கடந்த மாதம் தெரிவித்திருந்தனர். அதாவது இந்த வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் பெருமளவான தென்னிலங்கை மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் தள்ளப்படலாம் என்ற அச்சங்கள் தென்னிலங்கையில் எழுந்துள்ளது. இந்த வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் எல்லா இன மக்களும் பாதிப்படைவார்கள் என அரசு தெரிவித்து வரும் போதும் அதன் பலன்களை வடக்கு – கிழக்கு மக்களை சென்றடைந்ததில்லை என்பதே உண்மையாகும். சிறீலங்காவை பொறுத்தவரையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 51 சதவிகித ஆடை ஏற்றுமதியை மேற்கொண்டு வருகின்றது. இதன் மூலம் அது 3.5 பில்லியன் டொலர்களை வருமானமாக ஆண்டுதோறும் பெற்று வருகின்றது. இந்த வரிச்சலுகையானது ஐரோப்பிய ஒன்றியத்தை விட சிறீலங்காவுக்கே அதிகம் தேவையானது. ஏனெனில் சிறீலங்காவின் ஏற்றுமதிகள் நின்றுபோனால் அதனை பங்களாதேசம், சீனா, தாய்லாந்து போன்ற நாடுகள் பிரதியீடு செய்துகொள்ளும். அவை தான் சிறீலங்காவுக்கு போட்டியாக உள்ள நாடுகள். எனவே இழப்பீடுகள் என்பது சிறீலங்காவுக்கு தான் அதிகம், ஐரோப்பிய ஒன்றியத்தை பணியவைப்பதற்கு இந்தியா, ஈரான், லிபியா போன்ற நாடுகளின் ஒத்துழைப்புக்களை சிறீலங்கா அரசு நாடியிருந்த போதும் அவை அதிக மாற்றங்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் போக்கில் ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (22) ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் சிறீலங்கா மீதான தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறீலங்கா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் அதிகப்படியான வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் 60 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர், அதற்கு எதிராக யாரும் வாக்களிக்க முன்வரவில்லை. மூன்று உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை. இந்த தீர்மானத்தில் சிறீலங்காவில் மோசமடைந்துள்ள மனித உரிமை மீறல்கள், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் போன்றன முக்கிய இடத்தை பிடித்துள்ளன. சிறீலங்காவில் வாழும் எல்லா சமூகமும் சம உரிமைகளுடன் வாழவேண்டும் என்ற வலுவான நிலைப்பாட்டை மேற்குலகம் கொண்டுள்ளது. ஆனால் அதற்கான நடவடிக்கைகளை பலப்படுத்த வேண்டிய புறச்சூழல்களை தான் அவர்கள் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். இதனிடையே அமெரிக்காவின் வெளியுறவு திணைக்களத்தினால் காங்கிரஸ் சபையில் கடந்த மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்த சிறீலங்கா தொடர்பான அறிக்கை கடந்த புதன்கிழமை (21) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் சிறீலங்காவில் நடைபெற்ற படை நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட போரியல் குற்றங்கள் தொடர்பாக அழுத்தமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள், போரியல் குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் அவசியம் என்பதையும் அது வலியுறுத்தியுள்ளது. இந்த அறிக்கையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட சிறார் படை சேர்ப்பு, சிறீலங்கா அரசினாலும், விடுதலைப்புலிகளினாலும் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சிறீலங்கா அரசினாலும், அவர்களுடன் சோந்தியங்கும் துணை இராணுவக்குழுவினராலும் மேற்கொள்ளப்பட்ட பலவந்தமான கடத்தல்கள் போன்றன அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான தேவைகள் தவிர்ந்த சிறீலங்காவுக்கான ஏனைய நிதி உதவிகளை இடைநிறுத்துமாறும் அமெரிக்க அரசுக்கு இந்த அறிக்கை பரிந்துரை செய்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை உரிமைகளை சிறீலங்கா அரசு மதிக்கும் வரையிலும் சிறீலங்காவுக்கான நிதி உதவிகள் இடைநிறுத்தப்படவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க வெளியுறவுத்திணைக்களத்தின் இந்த அறிக்கையை தொடர்ந்து சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போரியல் குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக சுயாதீன விசாரணைக்குழுவை அமைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன முன்வர வேண்டும் என அமெரிக்காவை தளமாக கொண்ட அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிராட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். சிறீலங்கா தொடர்பாக மேற்குலகத்தின் நகர்வுகள் மிகவும் வேகமாக இடம்பெற்று வருகின்றன. கொங்கோவில் ஐ.நாவின் அமைதிபடையின் நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரியான பற்றிக் கமேட் என்பவரை சிறீலங்காவுக்கு அனுப்புவதற்கு ஐக்கிய நாடுகள் சபை திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் வாரமளவில் சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பற்றிக்கின் விஜயத்தை சிறீலங்கா அரசு தனது அழுத்தங்களை பயன்படுத்தி நவம்பர் 23 ஆம் நாளுக்கு பின்போட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவை சேர்ந்த மேஜர் ஜெனரலான பற்றிக் இன் விஜயத்திற்கு முன்னர் தடுப்பு முகாம்களில் உள்ள இளைஞர்கள் பலரை இடம்மாற்றும் முயற்சிகளை மேற்கொள்வதற்கே சிறீலங்கா இந்த காலஅவகாசத்தை மேற்கொண்டுள்ளதாக ஐ.நாவின் ஊடக மையமாக இன்னசிற்றி பிரஸ் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளது. இருந்த போதும், மேற்குலகின் இராஜதந்திர அழுத்தங்களில் இருந்து தப்பும் முயற்சிகளை சிறீலங்கா கடந்த 22 ஆம் நாள் ஆரம்பித்துள்ளது. அதாவது இடம்பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினரை வடபகுதியில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு கடந்த வியாழக்கிழமை (22) அவசர அவசரமாக மேற்கொண்டிருந்தது. மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் ஒரு தொகுதி மக்கள் அவசர அவசரமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால் அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு அப்பாலும் அரசினால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பல உள்ளன என்பதே மேற்குலகத்தின் கருத்து. மேற்குலகத்தின் இந்த கருத்துக்களை வலுப்படுத்தும் முயற்சிகளை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ந்து மேற்கொண்டே வருகின்றனர். மேற்குலகத்திற்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்படுமாக இருந்தால் அது தென்ஆசிய பிராந்தியத்தில் நிரந்தர அமைதியையும், ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கைகள் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் வலுவடைந்து வருகின்றது. உலகில் சிறிதளவேனும் மனிதநேயம் தப்பிப்பிழைத்துள்ளது என்பதை மேற்குலகத்தின் இந்த நடவடிக்கைகள் தான் எடுத்துக்காட்டுவதாக ஈழத்தமிழ் மக்கள் வலுவாக நம்புகின்றனர். எனவே எதிர்வரும் மாதங்கள் மேலும் பல மாற்றங்களை கொண்டுவரலாம் என்பது எல்லோரினதும் எதிர்பார்ப்புக்களாகும்

தமிழகத்தில் தமிழ் உணர்வுள்ள பலம்பொருந்திய அரசியல் கூட்டணி உருவாக்கப்படவேண்டும்

தமிழக அரசியல் தலைமைகள் இன்று ஈழத்தமிழர்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டிய தருணத்தில் உள்ளனர் என்பதை எடுத்துக்கூறவேண்டிய நிலைமைக்கு நாங்கள் இன்று தள்ளப்பட்டுள்ளோம். அண்மைக்காலமாக இந்தியாவின் பல பகுதிகளிலும் அதிலும் அதிகமாக தமிழகத்தில் இலங்கையில் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளது தொடர்பில் தொடர் விழிப்புணர்வு போராட்டம் நடத்தப்பட்டுவருகின்றமை தினமும் செய்திகளாக வெளிவந்தவண்ணம் உள்ளன. உண்மையில் இச்செயற்பாடுகளை ஒவ்வொரு தமிழனும் உணர்வுபூர்வமாக கொள்வதுடன் தமது ஆதரவையும் தெரிவிக்கவேண்டும். இன்று உலகின் மனசாட்சியை தொட்டுக்கொண்டிருப்பது இலங்கையில் சுமார் 3 இலட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் செயற்பாடாகும். இது தொடர்பில் இந்தியாவில் ஊடகங்கள் பாராமுகமாக இருக்கின்றபோதிலும் ஒரு சில தமிழ் ஊடகங்கள் அவற்றை வெளிக்கொணர்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. அதிலும் தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வுள்ள அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் போராட்டங்கள் எம்மை ஓரளவு ஆதரவடைய வைத்தாலும் இது தொடர்பில் இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் வெளியிட்டுவரும் அறிக்கைகள் இலங்கை அரசாங்கமே ஆச்சரியப்படவைக்கும் அளவுக்கு உள்ளன. உதாரணமாகஇலங்கை சென்று திரும்பிய பாராளுமன்ற குழுவின் தலைவர் டீ.ஆர்.பாலு நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கை அரசாங்கம் 68ஆயிரம் தமிழர்களை குடியேற்றிவிட்டதாக பெரும் பொய்யை தமிழக மக்கள் மத்தியில் அவிழ்த்துவிட்டுள்ளார். ஒன்றை இந்த டீ.ஆர்.பாலு போன்ற தமிழக அரசியல்வாதிகள் புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் நினைத்ததைப்போன்று இங்கு எந்தவித குடியேற்றங்களும் செய்யப்படவில்லை. முகாமில் இருந்து சிறு தொகையினர் கொண்டுசெல்லப்பட்டு வேறு ஒரு இடத்தில் அகதிமுகாமிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை எவரும் தமது சொந்த இடத்தில் குடியமர்த்தப்படவில்லை. அவ்வாறு குடியமர்த்தப்பட்டிருந்தால் அது தொடர்பில் இந்த தமிழக அரசியல்வாதிகளினால் நிரூபிக்ககூடிய ஆதாரங்களை வழங்கமுடியுமா? இலங்கையில் தமிழர்களுக்கு நீங்கள் உதவாவிட்டாலும் பரவாயில்லை. பொய்யான தகவல்களை தமிழக மக்கள் மத்தியில் பரப்பமுயலவேண்டாம் என்பதே எங்கள் கோரிக்கை. இந்த வேளையில் தமிழகத்தில் போராட்டங்களை முன்னெடுத்துவரும் தமிழ் உணர்வுள்ள அரசியல் தலைமைகள் முகாம் மக்களின் இடர்பாடுகள் மட்டுமன்றி இவ்வாறான பொய் தகவல்களை வழங்கிவரும் அரசியல்வாதிகள் தொடர்பிலும் விழிப்புணர்வுகளை மேற்கொள்ளவேண்டும். அதற்காக இந்த வேளையில் தமிழ் உணர்வுள்ள அரசியல் தலைமைகள் தம்மிடம் உள்ள அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றுசேரவேண்டிய வரலாற்று கடமை உங்களுக்கு உள்ளது. இன்று சர்வதேசம் எங்கும் இலங்கை தமிழர்களுக்கு சாதகமான நிலை உருவாகி வருகின்றது.இதனை இல்லாமல் செய்ய இலங்கை சிங்கள அரசு தமிழகத்தில் உள்ள ஆளும் வர்க்கத்தினரை நன்கு பயன்படுத்திவருகின்றது. எனவே தமிழகத்தில் தமிழர்களுக்கு ஆதரவான பலமான கூட்டணி ஒன்றை உருவாக்க அரசியல் தலைமைகள் அரசியலுக்கு அப்பால் ஒன்றுசெரவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதற்கு தமிழ் உணர்வாளர் நெடுமாறன் போன்ற தமிழ் இனத்தின் காவலர்கள் கடும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.அதன் மூலம் பலமான தமிழ் கூட்டணியை உருவாக்கி இன்று சர்வதேசம் எங்கும் தமிழர்கள் பால் எழுந்துவரும் சிறப்பான கருத்தியலை செயலுருவாக்கம்பெற வழிசமைக்கவேண்டும் என்பதே இன்று ஒவ்வொரு தமிழனதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

தீர்வுக்கான கூட்டா? அல்லது தேர்தல் கூட்டா?

தேர்தல் திருவிழா ஆரம்பமாகிறது. இன்னமும் இலங்கையில், ஜனநாயகப் பயிர் அழிந்து விடவில்லையென்று உலகிற்கு எடுத்துக் கூற, இந்தத் தேர்தலை விட்டால் வேறு மார்க்கம் இல்லை போல் தெரிகிறது. மக்களுக்கான ஜனநாயகம், புள்ளடி போடுவதோடு முற்றுப் பெற்றுவிடும். இன முரண்நிலையைத் தீர்ப்பதற்கு புதிய வகை தேடல்களோடு களமிறங்க, பலரும் தயாராகி வருகின்றனர். வாக்கு வங்கியை மையப்படுத்தி, சகல தரப்பினரும் சுழல ஆரம்பித்து விடுவார்கள். புள்ளடியைப் போட்டு விட்டு, விடியலைத் தேடும் விபரீத விளையாட்டில் மக்களும் அரசியல்வாதிகளும் மோதிக் கொள்கிறார்கள். இந்த புள்ளடிச் சுதந்திரம், அடித்தட்டு பெரும்பான்மை மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தியதாகத் தெரியவில்லை. தேச மக்களின் இறைமை, அதிகார வர்க்கத்தால் கடத்திச் செல்லப்பட்டு, சிறு குழுவினருக்கானதாக மாற்றமடைகையில் இனங்களுக்கிடையிலும் வர்க்கங்களுக்கிடையிலும் முரண்பாடுகள் தோற்றமுறுகின்றன. ஆகவே, வருகிற ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் என்றும் மாறாத புள்ளடி ஜனநாயகத்தின் கீழ் நடத்தப்படப் போகின்றது என்பதில் சந்தேகம் இல்லை. முள்ளிவாய்க்காலில் ஓய்வடைந்த, 60 ஆண்டுகால அரசியல், ஆயுதப் போராட்டங்கள், புதியதொரு அரசியல் போராட்ட வடிவத்துள் காலடி எடுத்து வைப்பதாகக் கூறப்பட்டாலும் புள்ளடி அரசியல் என்கிற பழைய முறைமைக்குள் இருந்து வேறுபடவில்லை. இராணுவ பலத்தில் உச்ச நிலையைத் தொட்ட விடுதலைப் புலிகள், அதனை அரசியல் தீர்வொன்றைப் பெறும் நிலைக்கு பயன்படுத்தவில்லை அல்லது அதற்கான ஆளுமை அவர்களுக்கு இருக்கவில்லையென்கிற வகையில் வியாக்கியானங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஐம்பதுக்கு ஐம்பது என்பதிலிருந்து ஆரம்பித்து பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், திம்புப் பேச்சுவார்த்தை வரை சாத்வீக வழியில் அரசியல் போராட்டம் நடத்தியவர்கள் சாதிக்க முடியாதவற்றை, ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொண்ட விடுதலைப் புலிகளாலும் சாதிக்க முடியவில்லை. ஆகவே சமஷ்டி வடிவிலான தீர்வொன்றை முன்வைக்கப் போவதாகக் கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராலும் எதையும் சாதிக்க முடியாதென்கிற முடிவினை இலகுவில் ஊகித்துக் கொள்ளலாம். சர்வதேசத்திடம் கையளிக்கப்படவிருக்கும் இந்த உயர்ந்தபட்ச அதிகாரம் கொண்ட தீர்வுத் திட்டம், கொழும்பு ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்டால் அடுத்த கட்ட அரசியல் நகர்விற்கான ஆதரவினை இந்தியாவும் மேற்குலகும் வழங்குமென்று கூட்டமைப்பு எதிர்பார்ப்பது போல் தெரிகிறது. ஆனாலும் பிரிந்து செல்வதே, இந்த அடுத்த கட்ட நகர்வென்று, ஆட்சியாளர்களுக்கு மிக நன்றாகப் புரியும். 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பின்னடிக்கும் அரசாங்கம், பூரண சுயாட்சியுடன் கூடிய தீர்வு பற்றி அக்கறை கொள்ளாது. இன்னமும் இரண்டு வாரங்களுள் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படுமென்று கடந்த இரண்டு மாதங்களாகக் கூறி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள், பொதுத் தேர்தலுக்கு முன்பாக அத்தீர்வுப் பொதியை முன்வைப்பாரா என்று தெரியவில்லை. சிலவேளைகளில் இத்தீர்வுத் திட்டம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமாகவும் மாறலாம். தந்தை செல்வாவின் வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்புப் போன்று இப்புதிய தீர்வுத் திட்டத்தினை, மக்களின் அங்கீகாரத்திற்காகத் தேர்தலில் முன்வைப்பதாகவும் இவர்கள் கூறலாம். ஏனெனில், வன்னி முகாம் மக்களின் அவல நிலைக்கு அப்பால் தேர்தலை நோக்கிய அதிதீவிரப் பார்வையொன்று அரசியல் தளத்தில் வெளிக்கிளம்புவதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது. தளர்வான ஐக்கியத்தைப் பேணும், அரசியற் கட்சியல்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தனித்துவம் பேணும் நான்கு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுமை கலந்த அனுசரணையோடு உருவாக்கப்பட்ட இக்கூட்டமைப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஷ்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி போன்றவை இணைந்து புலிகளை தமிழ் மக்களின் ஏக தலைமையாக ஏற்றுக் கொண்டன. தற்போது விடுதலைப் புலிகளின் பிரசன்னம் வெளிப்படையாக இல்லாத நிலையில், வருகிற தேர்தலை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஈ. பி. ஆர். எல். எப். (வரதர் அணி) போன்ற கட்சிகளோடு சேர்ந்து, பரந்த கூட்டணி அமைக்க கூட்டமைப்பு இணங்கியுள்ளது. அத்தோடு தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளுக்கிடையில் இணக்கம் காணப்பட வேண்டியது அவசியமென இப் புதிய தேர்தல் கூட்டணி கருதுகிறது. இந்த ஆறு கட்சிகளும் ஒன்றுகூடிய நிகழ்வில் வடக்கு மக்கள் மீள்குடியேற்றம், கிழக்கு மாகாண காணிப் பங்கீடு மற்றும் எதிர்கால தேர்தலில் தமிழ் பேசும் கட்சிகளின் நிலைப்பாடு உள்ளடங்கிய எட்டு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. மறுபடியும், வருகிற செவ்வாய்க்கிழமை கூடும் இவர்கள், தமக்கிடையே ஏற்பட்டுள்ள பொது இணக்கம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர, நான்கு கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் முயற்சி முன்னெடுக்கப்படுவதாகத் தெரிய வருகிறது. தத்தமது கட்சிகளை கலைத்து விட்டு, ஈழம், தமிழீழம் என்கிற சொற்பதமற்ற தமிழ்த் தேசியம் என்கிற பொது கோட்பாட்டைத் தாங்கி நிற்கும் பெயருடன் அடுத்த அரசியல் பாதையை இவர்கள் தேர்ந்தெடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கூட்டமைப்போடு இணைவுப் போக்கினை மேற்கொள்ளவிக்கும் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சிகள், இறுதிப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மற்றும் பேரவலம் தொடர்பான தமது நிலைப்பாட்டை தெளிவாக மக்கள் முன் வைக்க வேண்டும். தேர்தலிற்கான கூட்டாக இது அமைந்தால் வாக்கு வங்கியில் பெரிய மாற்றங்கள் நிகழும் சாத்தியப்பாடுகள் அரிதாகவே இருக்கும். இந்த பொதுக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கு வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்திலும் மனோ கணேசனின் கட்சிக்கு கொழும்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு மேலதிக ஆசனங்களைப் பெற உதவும். ஆனாலும் வடக்கைப் பொறுத்தவரை ஏனைய தமிழ்க் கட்சிகளின் ஆதரவு, கூட்டமைப்பின் வாக்குப் பலத்தை அதிகரிக்க உதவுமாவென்பதில் பலத்த சந்தேகமுண்டு. தற்போது உருவாகும், பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் இக்கூட்டு, தேர்தலை நோக்கிய தற்காலிக முன்னணியா? அல்லது சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க, ஒரு பொதுவான தீர்வுத் திட்டத்தை முன்வைத்து, நகரப் போகும் சந்தர்ப்பவாதமற்ற உறுதியான சக்தியா? என்பதை அறிய புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் ஆவலாக இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு அரசியல் தீர்வு பற்றிய சிந்தனை கிடையாது, செப்டெம்பர் 11, இரட்டைக் கோபுரத் தாக்குதலிற்குப் பின், அமெரிக்கா தொடுத்த உலகப் பயங்கரவாதத்திற்கெதிரான போரின் நுட்பங்களை புலிகள் புரிந்து கொள்ளவில்லை என்று பிராந்திய சர்வதேச வல்லரசாளர்களின் சதிகளையும், நலன்களையும் புரிய மறுப்பவர்கள், இனி என்ன செய்யப் போகிறார்களென்பதை பார்க்க வேண்டும். இந்தியா இல்லாமல் அணுவும் அசையாது என்போர், சமஷ்டித் தீர்வுத் திட்டத்தை புதுடில்லிக்குச் சமர்ப்பித்து, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கட்டும். விடுதலைப் புலிகள் இல்லாத, ஈழத் தமிழர்களின் புதிய அரசியல் தலைமைத்துவத்தை இந்தியா ஏற்குமென்பவர்களும் இந்திய அனுசரணைக்கு புலிகள் தடையாக இருந்தார்கள் என்பவர்களுக்கும் இப்போது புதிய களம் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனாலும் வடக்கு கிழக்கில், பல இலட்சம் மக்கள் முகாம்களில் முடக்கப்பட்டிருக்கையில் தேர்தல் ஜனநாயகம் பற்றிப் பேசுவது விந்தையாக இருக்கிறது.

அமெரிக்காவும் இலங்கையும்; யார் கையில் யார்?

இலங்கையில் நடந்து முடிந்த ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றில் கோதபயா ராஜபக்சேவுக்கு உள்ள தொடர்புகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறு இலங்கை கூட்டுப் படைத் தலைவர் சரத் பொன்சேகாவை கேட்டுள்ளது அமெரிக்க அரசு. தற்போது சரத் பொன்சேகா அமெரிக்கா வந்துள்ளார். தனது கிரீன் கார்டு காலாவதியாகி விடாமல் காப்பாற்றுவதற்காக அவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் கோதபயாவுக்கு எதிரான சாட்சியத்தை வழங்குமாறு பொன்சேகாவிடம் அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போரின் இறுதிக் கட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய அட்டூழியங்கள், போர்க் குற்றங்கள், படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், கற்பழிப்புகள் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்களிலும் கோதபயாவுக்கு உள்ள பங்குகள் குறித்த ஆதாரங்களையும், வாக்குமூலங்களையும் அளிக்குமாறு பொன்சேகாவை அது கேட்டுக் கொண்டுள்ளது. பொன்சேகாவிடம் அமெரிக்க அரசு இவ்வாறு கேட்டுக் கொண்டிருப்பது உண்மைதான் என்று இலங்கை வெளியுறவு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இன்று வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா இலங்கை அரசின் கருத்தை தெரிவிக்கவுள்ளதாகவும் அது கூறியுள்ளது. தனக்கு அமெரிக்க அரசு விடுத்துள்ள கோரிக்கை குறித்து வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் பொன்சேகா. தற்போது பொன்சேகா ஓக்லகாமா நகரில் தனது மகள் வீட்டில் தங்கியுள்ளார். அவரது மருமகன் தொலைபேசி மூலம் பொன்சேகாவைத் தொடர்பு கொண்ட அமெரிக்க அதிகாரிகள், கோதபயாவுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனராம். தன்னிடம் அமெரிக்க அதிகாரிகள் கேட்டுக் கொண்டதை அப்படியே கடிதம் மூலம் இலங்கை தூதரகத்திற்குத் தெரிவித்துள்ளார் பொன்சேகா. முன்னதாக அமெரிக்க உள்துறை அமைச்சக அதிகாரிகள் பொன்சேகாவை விசாரிக்கவுள்ளதாகம், இதற்காக அவரை உள்துறை அமைச்சக விசாரணை அலுவலகத்திற்கு அழைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் இலங்கை அரசு அதிர்ச்சியும்இ பீதியும் அடைந்தது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அமெரிக்க அரசு தீவிரப்படுத்துவதாக அது சந்தேகமடைந்துள்ளது. கடந்த அக்டோபர் 22ம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், நாடாளுமன்றத்தில், இலங்கை போர்க்குற்றம் தொடர்பா அறிக்கையை தாக்கல் செய்தது என்பது நினைவிருக்கலாம். அதில் கோதபயா ராஜபக்சே, சரத் பொன்சேகா உள்ளிட்டோர் போர்க் குற்றம் புரிந்ததற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோதபயா ஏற்கனவே அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆவார். பொன்சேகா விரைவில் அமெரிக்க குடியுரிமையைப் பெறப் போகிறார். இந்த நிலையில் கோதபயாவை அமெரிக்கா குறி வைத்திருப்பதும், அதற்கு பொன்சேகாவை சாட்சிக்கு அழைப்பதும், ராஜபக்சே சகோதரர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிகிறது. அமெரிக்காவிடமிருந்து ‘தப்ப’ ராஜபக்சே தீவிரம்! இந் நிலையில் ஈழப் போர் குறித்து என்ன மாதிரியான விளக்கம் தேவைப்பட்டாலும் அதுகுறித்து நேரடியாக என்னிடமே அமெரிக்கா கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என அதிபர் ராஜபக்சே அமெரிக்காவுக்குத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொன்சேகாவை விரைவில் அமெரிக்காவிலிருந்து கொழும்புக்கு வரவழைக்கவும் முயற்சிகளை இலங்கை அரசு முடுக்கி விட்டுள்ளதாம். ஒரு நாள் கூட அமெரிக்காவின் விசாரணைக்கு பொன்சேகா உட்பட்டு விடக் கூடாது என்றும் இலங்கை அரசு தீவிரமாக உள்ளதாம். இதுதொடர்பாக மூத்த அமைச்சர்களை அழைத்து அவசர ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார் ராஜபக்சே. மேலும், போர்க் குற்றம் தொடர்பாக யாருக்கேனும், குறிப்பாக அமெரிக்காவுக்கு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் தன்னையே நேரடியாக கேட்கலாம் என்று அப்போது கூறினாராம் ராஜபக்சே. முப்படைகளின் தலைவர் என்ற முறையில் நானே அனைத்து விவரங்களையும் சொல்ல முடியும் என்றும் ராஜபக்சே தெரிவித்தாராம். இதுதொடர்பாக அமெரிக்க அரசுக்கும் உரிய முறையில் தகவல் தெரிவித்துள்ளதாம் இலங்கை அரசு. மேலும், உடனடியாக பொன்சேகாவை அமெரிக்காவிலிருந்து வரவழைப்பது தொடர்பாகவும் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு சிறுவர்களைத் தமது படைக்குச் சேர்த்ததாகவும்,இலங்கைப் படைகள், போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்ததாகவும், தம்மிடம் சரண் அடைந்த போராளிகளைக் கொன்றதாகவும்இபடையினர் அல்லது அரசு சார்பு ராணுவக் குழுக்கள் தமிழ்ப் பொது மக்களை குறிப்பாக சிறுவர்களையும் இளைஞர்களையும் கடத்திச் சென்று கொன்றதாவும் அமெரிக்க வெளியுறவுத்துறை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளைக் கொடியுடன் யார் சரணடைய வந்தாலும் ஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொன்று விடும்படி கோத்தபயா உத்தரவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச அளவில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்க அரசு கூறியிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இலங்கை அரசு தானே ஒரு விசாரணையை நடத்துவதாக அவசரம் அவசரமாக அறிவித்தது. இந்த நிலையில் அமெரிக்கா நேரடியாக களத்தில் இறங்கியிருப்பது போல தெரிவதால் இலங்கை அரசு பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

கொம்புசீவும் அமெரிக்காவும் தடுமாறும் இந்தியாவும்

போர் முடிவடைந்ததும் நடைபெறப் போகும் தேர்தல்கள், புதிய களமுனைகளைத் திறந்துள்ளன. இதில் ஜெனரல் சரத் பொன்சேகாவை மையமிட்டுச் சுழலும் அரசியல் காய்நகர்த்தல்கள் புதிய கூட்டணிகளை உருவாக்குகின்றன. ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சிகள், ரணிலை முன்னிலைப்படுத்தும் எதிர்க்கட்சியினர் தமிழ்தேசியக் கூட்டமைப்பினரோடு இணையும் சிறுபான்மையின தேசியக் கட்சிகள் என்பவற்றோடு நான்காவதொரு அணியாக அரசியல் களத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவும் சேர்ந்து கொள்வாரென எதிர்வு கூறப்படுகிறது. அவர் தேர்தலில் இறங்கி தற்போதைய ஆட்சியாளர்களுக்குச் செல்லும் வாக்குகளைப் பிரிக்க வேண்டுமென இரண்டு தரப்பினர் விரும்புகின்றனர். உள்நாட்டைப் பொறுத்தவரை ஆட்சியைக் கைப்பற்ற விரும்பும் ரணில் தலைமையிலான எதிர்க்கட்சியினரும் வெளியுலக வல்லரசாளர்களைப் பொறுத்தவரை அமெரிக்க தலைமையிலான மேற்குலகினருமே இந்த இரு தரப்புகளுமாகும். ஜெனரல் சரத் பொன்சேகா, அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளும் முன்பாக அவரை உசுப்பேற்றி கொம்பு சீவி விடும் பிரசாரங்களில் எதிர்க்கட்சியினர் மறைமுகமாக ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் முன்பு எழுந்தன. படைத் தரப்பினர் அரசியலில் ஈடுபடக் கூடாதெனவும் அது குறித்த சர்ச்சைகளைக் கிளறி விடுவது குற்றமாகுமென்றும் அரசு சில எதிர்நகர்வுகளை மேற்கொண்டது. ஆனாலும் குடும்ப ஆட்சிமுறை நோக்கி, நாட்டை நகர்த்துவதாக குறை சொல்லும் சில சிங்கள கடும் போக்குக் கட்சிகள், அரசின் அச்சுறுத்தல்களைக் கவனத்தில் கொள்ளாது ஜெனரலுடன் பல சந்திப்புகளை நிகழ்த்தின. தமது அரசியல் இருப்பிற்காகவும் எதிர்கால நலனுக்காகவும் சரத்தின் அரசியல் பிரவேசத்தை ஜே.வி.பி.யும் ஜாதிக ஹெல உறுமயவும் மனதார வரவேற்பார்களென்பதே உண்மையாகும். அதேவேளை, பிரதான எதிர்க்கட்சியின் தந்திரோபாயம், இதிலிருந்து முற்றாக வேறுபடு கிறது. ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் ஏகோபித்த வேட்பாளராக சரத் பொன்சேகாவை நிறுத்தினால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மற்றும் மனோ கணேசனின் ஆதரவு தமக்குக் கிடைக்காதென்பதை ரணில் அறிவார். இருப்பினும் சரத் பொன்சேகாவை அரசியல் ஆடுகளத்தில் மிதக்க விட்டு இறுதியில் வேறொருவரை ஜனாதிபதி முதன்மை வேட்பாளராக நிறுத்துவது என்கிற உத்தியை எதிர்க்கட்சியினர் மேற்கொள்ளவும் கூடும். அண்மையில் மேற்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி முக்கியஸ்தர் ஒருவர் இத்தகைய கருத்தொன்றை புலம்பெயர் தமிழ் மக்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. “”பச்சை அட்டை” (Green Card) வதிவிட அனுமதி கிடைக்கப் பெற்ற ஜெனரல் சரத் பொன்சேகாவின் அமெரிக்க விஜயமும் உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் மேற்கொள்ள உத்தேசித்திருந்த விசாரணைகளும் கொழும்பு அரசியலில் பல அதிர்வுகளை உருவாக்கியிருந்தன. போரின் இறுதி நாட்களில் நிகழ்ந்தேறிய குற்றங்கள் குறித்து பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷவிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை சரத்பொன்சேகாவிடம் ஏன் அமெரிக்கா முன்வைக்க முயல்கிறது என்கிற பிரச்சினையும் எழுந்தது. ஆனாலும் அமெரிக்க அரசோ, இத்தகைய சந்தேகக் கணைகளுக்கும் உத்தியோகபூர்வ அரசின் கேள்விகளுக்கும் எதுவித பதில்களையும் வழங்காமல் கண்ணை மூடிய பூனை போல் இருந்தது. அமெரிக்க அரசின் உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம், சரத் பொன்சேகா மீது விசாரணை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்ததும், தேசப்பற்று, தேசிய இறைமைக்கு ஆபத்துவந்துவிட்டது போல் அனைத்து சக்திகளும் ஒருமித்த குரலில் ஆர்ப்பரிக்கத் தொடங்கின. தேசிய அரசியலில் இருந்து அந்நியப்படுத்தப்படும் கையறு நிலைக்குள் தள்ளப்பட்டவர்களே அதிகம் பேசினார்கள். மௌனமாகவிருந்து செயற்பட்டு அமெரிக்கா சீவிய கொம்பு, தேர்தல் களத்தில் ஆளும் கட்சியினரைப் பதம் பார்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேற்குலகின் பாரம்பரிய நட்புச் சக்தியான ஐ.தே. கட்சியினர் மறுபடியும் ஆட்சி பீடமேறுவதற்கு ஜனாதிபதியைப் பலவீனப்படுத்தும் சக்திகளை இயக்க வேண்டிய பிராந்திய நலன் சார்ந்த தேவை அமெரிக்காவுக்கு இருக்கிறது. அந்த வகையில் ஆளும்கட்சியினரின் வாக்கு வங்கியைச் சிதைத்து தமக்குச் சார்பானவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டுமாயின் சிலரின் சுய முனைப்பையும் சுய கௌரவத்தையும் சீண்டி விடக் கூடிய தந்திரோபாய உளவியல் செயற்பாட்டினை அதிகரிக்க வேண்டும். இந்த உளவியல் சார்ந்த உத்தியினையே எதிர்க்கட்சியினரும் கையாள முற்படுகிறார்கள். அமெரிக்காவின் விசாரணைகளை உதாசீனம் செய்து தாய்நாட்டுக்குத் திரும்பிய சரத் பொன்சேகா குறித்து பிரமாண்டமான கதாநாயகத்துவ பிம்பம், சிங்கள மக்களிடையே முன்னெப்பொழுதும் இல்லாதவாறு பரந்து விரிந்து உயர்ந்து நிற்கிறது. இந்த விசாரணை விவகாரம், ஒரு தனித்துவமான ஒப்பற்ற சிங்கள தேசிய ஆளுமையை ஜெனரலுக்கு வழங்கியுள்ளமையை ஆட்சியாளர்களும் உணர்வார்கள். சம்பள அதிகரிப்பு மற்றும் போரில் பாதிப்புற்றோர் மீதான கரிசனை போன்ற விடயங்கள், அமெரிக்க விசாரணைக் காலத்தில் நடந்ததை குறித்துக் கொள்ள வேண்டும். அத்தோடு வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள படையினரின் ஆட்சியாளர் குறித்த பார்வை, தென்னிலங்கை மக்களிடையே குறிப்பிடத்தக்க அளவிற்கு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. இவை தவிர, எதிர்க்கட்சிகளுக்கிடையே உருவாகும் புதிய கூட்டுகள் குறித்தும் அண்மிக்கும் தேர்தல்களில் அவை உருவாக்கப் போகும் வலிமைமிக்க தாக்கங்கள் பற்றியும் நோக்க வேண்டும். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஸ்ரீல.சு.க. (மக்கள் பிரிவு) வும் முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி (மனோ கணேசன்) என்பவற்றோடு பல சிறு கட்சிகளும் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணி என்கிற புதிய கூட்டு உருவாகியுள்ளது. அதேவேளை இப் பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டில் அங்கம் வகிக்கும் அதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் மனோவின் ஜனநாயக மக்கள் முன்னணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான சிறுபான்மைத் தேசிய இனங்களின் புதிய கூட்டணியிலும் இணைந்து கொள்கின்றன. இனப்பிரச்சினைத் தீர்விற்கான பொதுக் கருத்தொன்றை நிர்மாணிக்கவும் எதிர்கால அரசியல் வேலைத் திட்டங்களுக்கான புதிய தளமொன்றை உருவாக்கவும் இக்கூட்டணி நிறுவப்படுவதாகச் சொல்லப்படுகிறது. எந்த வேளையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாரிக்கும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முழுமையான வரைவு வெளியிடப்படலாம் என்கிற நிலையில் அவை குறித்து சிறுபான்மை தேசிய இனக் கட்சிகளுக்கிடையே ஒரு தெளிவான புரிதல் உருவாகி, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட இறுதியான தீர்வுத் திட்டம் வெளிவர முன்னர், பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம். அதற்கான சாத்தியப்பாடுகளே அதிகம் காணப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ரணில் வகுத்திருக்கும் தேர்தல் வியூகத்தில் முஸ்லிம் காங்கிரசையும் ஜனநாயக முன்னணியைப் பயன்படுத்தி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான புதிய கூட்டை தேர்தல் காலத்தில் தமது அணியில் இணைத்துக் கொள்ளலாமென்கிற தந்திரோபாயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும்,கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் கட்சியும் இணைந்து கொள்ளும் சாத்தியப்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. பயங்கரவாதத்தை ஒழித்த மஹிந்த ராஜபக்ஷவுக்கே வருகிற ஜனாதிபதித் தேர்தலில் தனது முழுமையான ஆதரவு கிட்டுமென முதலமைச்சர் பிள்ளையான் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதில் இந்தியா என்கிற பிராந்திய மேலாதிக்க மனோ நிலையாளர்கள், இத்தேர்தலில் எந்தக் கூட்டிற்குத் தமது மறைமுகமான ஆதரவை வழங்குவார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். போர் வெற்றியின் பிராந்தியப் பங்காளர்கள், தமது ஆதரவைத் தொடர்ந்தும் ஆட்சியாளர்களுக்கே வழங்குவார்களென்று தெரிகிறது. அதாவது சீனா, அமெரிக்கா மேலாதிக்க ஊடுருவலை தடுக்க வேண்டுமாயின், போர்க்கள உறவினை நீடிக்க வேண்டும். ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் நிஜமானால் தற்போதைய ஜனாதிபதியின் வாக்கு வங்கியில் சரிவு நிலை ஏற்படும். அந்த அக்கினிப் பிரவேசத்தை இந்தியாவால் தடுக்க இயலாது போனாலும் சில வேளைகளில் எதிர்க்கட்சிக் கூட்டோடு இணைய வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடுத்திட அதனால் முடியும். ஏனெனில் ஜனாதிபதித் தேர்தலில் மும்முனை மோதல் ஏற்படுமாயின் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை கவர்ந்து கொள்பவருக்கே 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் சாத்தியமுண்டு. அரைப் பங்கு இல்லாவிட்டால் அதிகாரமில்லை என்பதே ஜே.ஆர். எழுதிய ஜனாதிபதிக்கான அரசியல் சாசனம். இந்நிலையில் புலிகளுக்கு எதிரான போரில் ஒன்று திரண்ட பிராந்திய சர்வதேச வல்லரசாளர்கள், இனி அதிகாரத்தில் யாரை இருத்துவது என்கிற விவகாரத்தில் முட்டி மோதப் போகிறார்கள். தேர்தல் சூறாவளி மையங் கொள்ளும் இந்நிலையில் மே 19 போர் ஓய்விற்குப் பின்னரான முதல் நகர்வில் எவ்வாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது காலடியை எடுத்து வைக்கப் போகிறதென்பதை தாயக, புலம்பெயர் தமிழ் மக்கள் மிக உன்னிப்பாக அவதானிக்கிறார்கள். போரின் கொடூரங்களும் ஆழ்மனத்தின் ஆறாத இரணமாகி இன்னமும் வலிகளை உயிர்ப்பிய்த்துக் கொண்டிருக்கும் கோர நினைவுகளும் தொலைந்த இருப்புக்களும் தமிழ் மக்களை முட்கம்பி வேலிக்குள்ளும் வதைத்தபடியே இருக்கிறது. 83 இனப்படுகொலை துரத்திய பல மலையகத் தமிழர்கள், வன்னியில் குடியேறி, இன்று வவுனியா முகாம்களில் வாழ்வதையும், இதே நவம்பர் மாதத்தில் இழப்பதற்கு ஏதுமற்ற பெருந்தோட்ட பாட்டாளி மக்கள் நாடற்றவராகியதையும் மறக்க முடியாது.

சீன அடிமை VS அமெரிக்க பொம்மை – சோக பூமியில் துரோக அரசியல்

‘ போரில் தோற்றவர்களைவிட வென்றவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்’ என்பது புத்தனின் வாக்கு! தனது வலது பக்கத்தில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் இடது பக்கத்தில் பாதுகாப்புத் துறைச் செயலாளரும் தனது தம்பியுமான கோத்தபயவையும் வைத்துக்கொண்டு, ஈழத்தில் இரக்கமற்ற இரத்தக் கொடுமையை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே நடத்தி முடித்துவிட்டார். அந்த வெற்றிக்கு மகிந்தாவின் அரசியல் ஆளுமை காரணமா? பொன்சேகாவின் இராணுவ வலிமை முக்கியமா? என்ற ஒரு வரிக் கேள்விதான் இன்றைய இலங்கை அரசியல்! மே 18-ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பை முற்றாக முடித்து விட்டதாக நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷ அறிவித்த அன்றே, இந்தப் பிரச்னை ஆரம்பித்து விட்டது. பொன்சேகாவைத் திருப்திப்படுத்த நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட ஜெனரல் பதவி தரப்பட்டது. மகிந்தாவுக்கு இணையாக பொன்சேகாவும் சிங்களவர்களால் கொண்டாடப்பட்டார். பத்திரிகைகள் அவரை வானளாவப் புகழ்ந்தன. இது மகிந்தவுக்குச் சகிக்கவில்லை. பொன்சேகாவுக்கு நெருக்கமான ஏழு பத்திரிகையாளர்கள் தனியாக அழைக்கப்பட்டு, மிரட்டி அனுப்பப்பட்ட தகவல்தான் முதல் ஆரம்பம். இராணுவத் தளபதியாக இருந்தால், அவர் தரைப் படை வீரர்களை மொத்தமாகத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து எதையும் செய்து விடுவார் என்பதால், ‘முப்படைகளுக்கும் சேர்ந்த பொறுப்பு’ தரப்பட்டது. முக்கியமானதாக அது சொல்லப்பட்டாலும் எந்த அதிகாரமும் இல்லாத பதவி அது. முறைப்படி டிசம்பர் 18-ம் தேதி பொன்சேகா ஓய்வு பெற வேண்டும். அதற்குப் பின்னால் விளையாட்டுத் துறையின் ஆலோசகராக இருக்கலாம் என்று மகிந்த போட்ட உத்தரவு, தன்னைக் கிண்டல் செய்யும் காரியம் என்று நினைத்து, பொன்சேகா அவமானத்தில் நெளிந்தார். பாதுகாப்பு கூட்டுப் படைத் தலைமை அதிகாரி அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த பொன்சேகாவுக்கு எந்தக் கோப்புகளும் அனுப்பவில்லை. பழைய கோதாவில் பல விஷயங்களைக் கேட்டு அனுப்பினார் அவர். ‘முப்படைகளும் தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்பார்கள். அப்போது விளக்கம் அளித்தால் போதுமானது’ என்று விளக்கம் தந்தார்கள். அடுத்த நாள் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய கோத்தபாய, ‘பொன்சேகாவுக்கு அதிக அதிகாரம் வழங்கினால், அது ஆபத்தானதாக இருக்கும்’ என்றார். பொன்சேகாவுக்கு நெருக்கமான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இப்படித் தொடர்ச்சியாக வந்த எந்தத் தகவலும் பொன்சேகாவுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. இந்த மோதலைக் கொழும்பு பத்திரிகைகள் எழுதியது. இதை உற்றுக் கவனித்த எதிர்க்கட்சிகள், பொன்சேகாவை அரசியலுக்கு அழைத்து வந்தால் நல்லது என்று நினைத்தன. சீருடையைக் கழற்றி வைத்துவிட்டு யாரும் அரசியலுக்கு வரலாம்’ என்று வஞ்சகத்தை மறைத்து வைத்து மகிந்தாவும் பச்சைக்கொடி காட்டினார். இந்த நிலையில்தான், பொன்சேகாவின் அமெரிக்கப் பயணம் மர்மமான முறையில் நடந்தது. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களைச் சர்வதேச நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுபோகும் காரியத்தில் மும்முரமாக இருக்கும் நாடு அமெரிக்கா. அதற்கான ஆதாரங்களைத் திரட்டும் வேலையில் அது இறங்கியுள்ளது. அந்த நாட்டின் க்ரீன் கார்டு வைத்திருக்கும் பொன்சேகா, இலங்கையின் இராணுவத் தளபதியாக இருப்பது அதற்கு வசதியாகப் போனது. அவரை அங்கு வரவழைத்து விசாரித்து வாக்குமூலம் வாங்க முடிவெடுத்தார்கள். ‘நாட்டுக்கு விரோதமான எதையும் நான் செய்யமாட்டேன்’ என்று அமெரிக்காவில் இருந்து திரும்பிய பொன்சேகா கொழும்பு விமான நிலையத்தில் வாக்குமூலம் கொடுத்தார். தேவையான அளவுக்குத் தகவல்கள் அனைத்தையும் அவர் அமெரிக்காவுக்குக் கொடுத்துவிட்டார் என்றே கொழும்பு பத்திரிகையாளர்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. ’அதைவிட முக்கியமாக பொன்சேகாவை அதிபர் தேர்தலில் நிற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்கள். அந்தத் தைரியத்தில்தான் அவர் இருக்கிறார்’ என்றும் சொல்கிறார்கள். இதன் பின்னணி ரொம்பவே பீதியைக் கிளப்புவதாக இருக்கிறது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடாக இருந்தது இலங்கை. ஆனால், இந்தியாவின் நெருக்கடியின்போது தனக்கு அமெரிக்கா எந்த உதவியும் செய்யவில்லை என்று கோபப்பட்டு, உறவைப் புதுப்பிக்காமல் போனார்கள். இதைத் தனக்குச் சாதகமாக சீனா பயன்படுத்திக் கொண்டது. இன்று முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டுப் பிரதேசம்போல இலங்கை மாறியது, அமெரிக்காவுக்கு உறுத்தல். இதை மாற்ற தனக்குக் கிடைத்த துருப்புச் சீட்டாக பொன்சேகாவை அமெரிக்கா இறக்கிவிடக் காத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ’நான் எப்போதும் சீனச் சார்பு கம்யூனிஸ்ட்’ என்று சொல்லிக்கொள்பவர் மகிந்த ராஜபக்ஷே. அவர் ஆட்சிக்கு வந்ததும் ஆறு ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்படாத சீன ஆயுதக் கிடங்கு ஒப்பந்தத்தைப் புதுப்பித்தார். அம்பாந்தோட்டையில் சீனத்துறை முகம், புத்தளத்தில் அனல்மின் நிலையம் அமைக்க வழி அமைத்தார். இந்தியாவும் அமெரிக்காவும் அணுசக்தி ஒப்பந்தம் போட்டதுமே இலங்கை மீது சீனாவுக்கு அதிகமான பாசம் பொங்கியது. சுமார் எட்டு நாட்கள் சீனாவில் தங்கி, தனது நட்பைப் புதுப்பித்தார் ராஜபக்ஷ. இது மட்டுமல்லாமல், அமெரிக்க எதிரியான ஈரானுக்கு உமா ஓயா அணையில் நீர் மின் நிலையமும் கொழும்பில் பெட்ரோல் சுத்திகரிப்பு மையமும் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. ‘யார் என்ன சொன்னாலும், சீனாதான் இலங்கையின் நலனை முழுமையாக விரும்பும் நாடு. அதற்காக இந்தியாவை நாங்கள் பகைக்க மாட்டோம்’ என்று மகிந்த சொல்லி வருகிறார். ஆனால், அருணாசலப் பிரதேசத்தைச் சொந்தம் கொண்டாடுவது முதல் காஷ்மீர் பகுதிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பது வரை சீனாவுக்கும் இந்தியாவுக்குமான முட்டல் மோதல்கள் அதிகம். எதிரும் புதிருமான இரண்டு பேரை ஒரே நேரத்தில் நட்பு சக்தியாக இலங்கையால் நினைக்க முடியாது. ‘ராஜபக்ஷவுக்குச் சாதகமாக அக்டோபர் 15-ம் தேதி இந்திய இராணுவம் உஷாராக இருந்தது’ என்று பொன்சேகா சொன்னதும் அதிர்ச்சி அடைந்துவிட்டது இங்குள்ள மத்திய அரசு. இலங்கைக்குத் தேள் கொட்டினால் இந்தியாவுக்கு நெரி கட்டியது. ‘இன்னும் பல இரகசியங்களை பொன்சேகா வெளியிடுவதைத் தடுப்பதற்காகத்தான் பிரணாப் முகர்ஜி கொழும்பு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ‘இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்’ என்று பிரணாப் சொல்லியிருக்கிறார். தனி ஈழம் கேட்காத, சகோதர யுத்தம் செய்யாத இந்திய மீனவர்களை நித்தமும் அடித்து விரட்டும் சிங்களக் கடற்படையைக் கண்டிக்காத பிரணாப் முகர்ஜி, இலங்கை அரசியல் குழப்பங்களைத் தீர்க்கப் போயிருப்பது, அங்குள்ள கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்து மகா சமுத்திரத்தில் அமெரிக்கா, சீனா ஆகிய இரண்டு வல்லரசுகளும் நடத்தக் காத்திருக்கும் கோர யுத்தத்தின் முதல் காரியமாக இலங்கையின் அதிபர் தேர்தல் நடக்கப் போகிறது. எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளியும் தமிழர்களுக்கு நல்லது இல்லை. சுட்டவர் ஒரு அணியிலும், சுடச் சொன்னவர் மறு அணியிலும் நிற்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்கே – பிரபாகரன் ஒப்பந்தப்படி பொது மக்கள் வாழும் இடத்தில் இருந்து இராணுவத்தை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற விதியைப் பின்பற்றாமல் கொக்கரித்து புலிகளை முதலாவது கோபப்படுத்தியவர் சரத் பொன்சேகா. அதன் பிறகுதான் மகிந்தா ஆட்சிக்கு வந்தார். அமைதி ஒப்பந்தத்தை அவர் மதிக்கவே இல்லை. எனவே, இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ‘இன்று தமிழர்களுக்கு உரிமை தராமல் போனதற்கு யார் காரணம்?’ என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார் பொன்சேகா. தமிழர்களது வாக்கு வங்கியை வாங்க இப்போதே வலை விரிக்க ஆரம்பித்துவிட்டார் அவர். மீள்குடியேற்றம் என்று சொல்லி ஏற்கெனவே வலையை விரித்துவிட்டார் ராஜபக்ஷ. இவை இரண்டையும் சீனாவும் அமெரிக்காவும் அகலக் கண்கொண்டு பார்த்து இலங்கைத் தீவைக் கொத்தித் தின்னக் காத்திருக்கின்றன. இந்தியாவின் அடிவயிற்றில் என்னவோ நடக்கப்போகிறது!

இலங்கை அரசியலும் பிராந்திய வல்லாதிக்க போட்டிகளும்

தென்னிலங்கையின் அரசியல் நெருக்கடிகள், பூகோள பிராந்திய போட்டிகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. இலங்கையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்ற போர் கடந்த மே மாதம் முடிவுக்கு வந்த போது பொதுத் தேர்தலையும், அரச தலைவருக் கான தேர்தலையும் விரைவாக நடத்திவிட அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. எனினும் போரினால் வீழ்ச்சி கண்ட பொருளாதாரத்தை உயர்த்திய பின்னரே தேர்தலைச் சந்திப்பதற்கு அரசாங்கம் தன்னை தயார்படுத்தி வந்தது. ஆனால் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டமை பொருளாதாரத்தின் உயர்வுக்கு தடையாக அமைந்து விட்டது. அனைத்துலகத்தின் அழுத்தங்களை மீறி பொருளாதார அழுத்தங்களில் இருந்து மீளமுடியாது என்ற நிலை ஒருபுறம் ஏற்பட மறுபுறம் முன்னாள் இராணுவத்தளபதியும் படைகளின் பிரதான அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா விவகாரமும் ஒரு பெரும் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தி யுள்ளது. அரசாங்கத்துக்கும் படையதிகாரிகளின் பிரதானிக்கும் இடையில் நிலவிய முரண் பாடுகளைத் தொடர்ந்து கடந்த வாரம் ஜெனரல் சரத் பொன்சேகா தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். பொன்சேகாவின் பதவி விலகல் என்பது அவரது அரசியல் பிரவேசம் என பரவலாக பேசப்பட்ட போதும் அது தொடர்பான உத்தி யோகபூர்வமான அறிவித்தலை அவர் இன்னும் விடுக்கவில்லை. எனினும் அவரின் அரசியல் பிரவேசம் உறுதியானதே என்று பல அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள் ளனர்.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு அரசாங்கத்திடம் போரின் வெற்றி என்ற அஸ்த்திரம் உள்ளது. அதனை உடைப்பதற்கு எதிர்க்கட்சிகளிடம் எதுவும் இல்லை. ஆனால் பொன்சேகா என்ற அஸ்த்திரம் மூலம் போரின் வெற்றி என்ற வாக்கு வங் கியை உடைத்து விடலாம் என எதிர்க் கட்சிகள் நம்புகின்றன. ஏனெனில் போரை நடத்துவதற்கு ஆணையிட்டவர் என்ற அதிகாரம் ஜனாதிபதி மஹிந் தவை சாரும்போது அதனைக் களத்தில் வழி நடத்தியவர் என்ற நிலையை பொன்சேகா தக்கவைத்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. அதாவது எதிர்க்கட்சிகள் தமது வசம் உள்ள வாக்கு வங்கியுடன், போரின் வெற்றி என்ற சொற்பதத்தின் மூலம் பொன் சேகாவால் பெற்றுக்கொள்ளப்படும் வாக்குக ளையும் சேர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளன. தென்னிலங்கை அரசியலைப் பொறுத்த வரையில் படை அதிகாரிகளுக்கு அரசிய லில் அதிக முக்கியத்துவம் உண்டு. அதனை காலம் காலமாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள்தான் உருவாக்கியிருந்தன. அதாவது, போர் என்ற உளவியல் உந்து சக்தி ஒன்று தென்னிலங்கை மக்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த எழுச்சிகள் கடந்த மூன்று தசாப்தங்களில் பல மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. அதனால் தான் பல படை அதிகாரிகள் அரசியலில் இலகுவாக நுழைந்து கொண்டு ள்ளனர். ஜெனரல் அனுருத்த ரத்வத்த, மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, மேஜர் ஜெனரல் லக்கி அல்கம என அந்த பட்டியல் நீளமானது. அண்மையில் தென்னிலங்கையில் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் கூட, 1993 ஆம் ஆண்டு அராலித்துறை கண்ணி வெடி தாக்குதலில் உயிர்தப்பிய படையி னரை முன்நிறுத்தி அரசு வெற்றியீட்டியிருந் ததும் நாம் அறிந்தவையே. எனவே படை அதிகாரிகளுக்கு தென்னிலங்கையின் அதிக ஆதரவுகள் உண்டு என்பதை நாம் மறுக்க முடியாதது. சரத் பொன்சேகா பதவி விலகிய பின்னர் உருவாக்கிய இணையத்தளத்தில் 15,000 இற்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் 24 மணிநேரத்தில் தமது ஆதரவுகளை தெரிவித்ததாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. திடீரென அரசியலில் ஏற்பட்ட இந்த திருப்பம் ஆளும் தரப்பை அதிகம் பாதித்துள்ளதாகவே அனைத்துலக ஊடகங்களும் கூறு கின்றன. அதனைப் போலவே தேர்தல்கள் தொடர்பான அறிவித்தல் குறித்து கடந்த செப்டெம்பர் மாதமே கருத்துகளை வெளியிட்டு வந்த அரசாங்கம் தற்போது அதனை தவிர்த்து வருகின்றது. கடந்த வாரம் இடம்பெற்ற சுதந்திரக்கட்சியின் 19 ஆவது மாநாட்டில் தேர்தல் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அது வெளியிடப்படவில்லை, பின்னர் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தேர்தல் தொடர்பான அறிவித்தல்கள் வெளிவரலாம் என நம்பப்பட்டது ஆனால் அதுவும் நடைபெறவில்லை. எனினும் சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் பிரதேச தலைவர்களை அழைத்த ஜனாதிபதி, பெரும் தேர்தல் ஒன்றுக்கு தேவையான அரசியல் பணிகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதுடன், அரசாங்கத்துக்கு உள்ள ஆதரவுகள் தொடர்பாகவும் கேட்டறிந்துள்ளார். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதி பதித் தேர்தலில் ஏறத்தாழ ஒரு இலட்சம் வாக்குகளால் வெல்லப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் மிகவும் சவாலான ஒன்றாகவே பலராலும் நோக்கப்பட்டது. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தமது வாக்களிப்பை புறக்கணி த்திருந்தனர். ஏறத்தாழ ஏழு இலட்சம் வாக்குகள் புறக்கணிக்கப்பட்டிருந்தன. ஆனால் எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் மிகவும் அரசியல் சாதுரியம் மிக்க முடிவுகளை நிச்சயமாக எடுப்பார்கள் என்ற கணிப்புகள் உண்டு. இந்த நிலையில் போரின் வெற்றி என்ற மந்திரம் மட்டுமே தென்னிலங்கையில் உள்ள வாக்குகளை அதிகம் கவரும் தன்மை கொண்டதாக உள்ளது. ஆனால் அதுவும் தற்போது பொன்சேகõவினால் பிரிக்கப்பட்டால் நிலைமை மிகவும் மோசமடையும் என்பதே அரசின் கணிப்பு. இந்த நிலையில் அரசாங்கத் தரப்புக்கும் பொன்சேகாவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்கள் மேலும் விரிசல் நிலையை அடைந்துள்ளது. இலங்கையின் அரசியல் நெருக்கடிகளின் மத்தியில் பூகோள பிரந்திய ஆதிக்கப்போட்டிகளும் அதிகம் உள்ளன இந்துசமுத்திர பிராந்தியத்தின் தென்முனையில் காலூன்ற முனைந்து வரும் சீனாவின் ஆதிக்கத்திற்கு அச்சுறுத்தலான நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா உள்ளது. அவ்வாறு மேற்கொள்ளாது விட்டால் சீனாவின் பொருளாதார மேம்பாடுகள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை விழுங்கிவிடும். மறுபுறமாக அமெரிக்காவின் ஆளுமையின் வீச்சும் வலுக்குன்றிவிடும், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணத்தின் பின்னர் இலங்கையில் உள்ள சீன அதிகாரிகளின் பிரசன்னம் குறைந்து விடலாம் என சிலர் ஆறுதல் கூற முற்பட்டுள்ள போதும், நிலக்கரி மின்உற்பத்தி, எண்ணெய் அகழ்வுப்பணி என சீனாவின் முதலீடுகளும், தலையீடுகளும் இலங்கையில் அதிகரித்தே வருகின்றன. இலங்கையின் நிலக்கரி மின் உற்பத்தித் துறையின் அபிவிருத்திக்கு 891 மில்லியன் டொலர்களையும், நெடுஞ்சாலைகள் மற் றும் எண்ணெய் அகழ்வுப் பணிக்கு 350 மில்லியன் டொலர்களையும் சீனா கடனாக வழங்க முன்வந்துள்ளது. அம்பாந்தோட் டையில் ஏறத்தாழ ஒரு பில்லியன் டொலர் களை முதலீடு செய்துள்ள சீனா தற்போது மேலும் 1.25 பில்லியன் டொலர்களை கட னாக வழங்க முன்வந்துள்ளது.எனவே சீனா வின் அண்மைக்கால உதவிகள் ஏறத்தாழ 2.25 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. இது அண்ணளவாக அனைத்துலக நாணயநிதியம் வழங்கிய கடன் தொகைக்கு ஒப்பானது. சீனாவுக்கு போட்டியாக இந்தியாவும் தனது நடவடிக்கைகளை அதிகரித்துள்ள போதும், அதன் வீச்சு மேற்குலகத்திற்கும், சீனாவுக்கும் சவாலானதாக மாறுமா என்பது சந்தேகமே.மேலும் எல்லா நாடுகளுடனும் வழுக்கும் உறவை மேற்கொண்டு அதன் அனுகூலங்களை இலங்கை அரசாங்கங்கள் முன்னர் பெற்று வந்திருந்தன. ஆனால், தற்போது ஒரு முக்கிய திருப்பத்தை அது சந்தித்துள்ளது. அதாவது, ஏதாவது ஒரு பக்கம் சார்புநிலை எடுக்கவேண்டிய கட்டாயம் அதற்குண்டு. அதற்கு இந்து சமுத்திர பிராந்தியத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதே காரணம். இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள இந்த முனைவாக்கம் இலங்கையின் அரசியலில் ஆதிக்கத்தை செலுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது. மனித உரிமை மீறல்கள், போரியல் குற்றங்கள், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் என்ற வலுவான காரணகளை மேற்குலகம் இறுகப்பற்றியுள்ளது. சீனாவின் ஆதிக்கத்திற்கு வலுவான காரணிகள் இல்லை ஆனால் பொருளாதார, படைத்துறை மற்றும் இராஜதந்திர உதவிகள் மூலம் இலங்கையை கவர்ந்துள்ளது. இந்தியா தமிழ் மக்களை முற்றாக எதிரிகளாக மாற்றிக் கொண்டதனால் தற்போது சீனாவின் அணுகுமுறைகளுடன் போட்டிபோட்டு வருகின்றது. ஆனால், மேற்குலகத்தின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்றால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாக இந்தியாவும் தனது மௌனத்தை கலைத்தே ஆகவேண்டும். விரும்பியோ அல்லது விரும்பாமலோ இந்த நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய கட்டாயத்தை இந்தியா அடைந்துள்ளது. ஆனால் அதன் வீச்சு என்ன என்பது தமிழ் மக்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகளின் வலிமையில் தான் தங்கியுள்ளது. அதனைத் தான் தற்போது மேற்குலகம் மேற்கொள்ள முற்பட்டு வருகின்றது.

இழப்புகளின் மீதான இவர்களின் இருப்புகள்: தமிழர்களின் எதிர்காலம் யார் கையில்?

குளிர்காலம் ஆரம்பித்தால் பனி சூழந்த மலைகள் சுவிசின் அழகை மேலும் அழகாக்கும். இப்போது இங்கே பனிகாலம் மக்கள் போர்வைக்குள் தங்களை புதைத்துக் கொண்டு அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார்கள். சூரிச் நகரின் ஒதுக்குப்புறமான ஒரு விருந்தினர் விடுதி வழமைக்கு மாறான பரப்புடன் காணப்படுகிற்னது. கொஞ்சம் நெருங்கி சென்று பார்த போது எங்களுக்கு பரீட்சயமான பல முகங்களை அடையாளம் காண முடிந்தது. தமிழ் மக்களுக்கு தமிழீழம் தான் தீர்வு என்று முழக்கமிட்ட தளபதி அமிர்தலிங்கத்தின் வழித்தோன்றல்கள் ஆனந்தசங்கரி ஐயாவும் சம்பந்தனும் ஒரே இடத்தில் ஒன்றாக இருப்பது கண்டு ஆச்சரியப்படுட்டுப் போனேன். இவர்களோடு இன்னும் பல தெரிந்த முகங்கள் முன்னாள் போராளிகளும் இன்னாள் பக்கா அரசியல் வாதிகளுமான டக்ளஸ் தேவானந்தா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்தன், சிறீதரன் என இலங்கை அரசியலின் சாயம் போனவர்களையும் ஒன்றாக பாhத்த போது திம்புவின் நினைவுகள் மனதில் வந்து போனதை மறைக்க முடியாது தான். ஆனால் திம்புவின் பின்னால் வந்த வம்புகளால் எங்கள் இனம் எல்லாம் இழந்து கோமணத்துணியுடன் வன்னியின் புழுதிக் காட்டிற்குள் முடங்கி கிடக்க இங்கே இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்ற தாங்க முடியாத ஆவலில் எட்டிப்பாதத்தேன். தமிழ் தகவல் மையம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொள்ளதான் இவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியுள்ளார்களாம். இலங்கை அரசியலில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகளில் பெரும்பாலானவற்றை ஒன்றாக ஒரே இடத்தில் அணி திரட்டுவது என்பது குதிரைக் கொம்பான விடயம். நாங்கள் எப்போதோ கேட்டு மறந்து போன தமிழர் தகவல் மையம் என்ற அமைப்பு இலங்கை அரசியலில் முரண்பட்டு நிற்கும் தரப்புகள் அனைத்தையும் ஒரு மேசையில் உட்கார வைக்கும் அளவிற்கு பலமானதா என்ற சந்தேகம் உங்களைப் போலவே எனக்கும் ஏற்பட்டது. இதுவே இந்த சந்திப்பின் பின்னணி குறித்து அறியும் ஆவலைத் தூண்டியது. அதன் போது கிடைத்த தகவல்கள் இனி உங்களுக்காக. இலங்கையில் நீண்டகால யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் ஏற்பட்ட மாற்றங்கள் அயல் நாடான இந்தியாவிற்கு சார்பானதாக இருக்கவில்லை. குறிப்பாக இலங்கையின் அபிவிருத்தி பணிகளில் சீனாவின் ஆதிக்கமும் ஸ்ரீலங்கா இராணுவத்திற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான பிணைப்புகளும் இந்திhவை அல்லது இந்திய அரசாங்கத்தை ஆளும் ரோ எனப்படும் புலனாய்வு பிரிவினை அதிகம் கவலைப்படுத்தியுள்ளது. விடுதலைப்புலிகள் தமது ஆயுதப் போரட்டத்தை கைவிடுவதாக அறிவித்ததன் பின்னர் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு விற்று காசுபார்க்கும் நடவடிக்கைகள் பாதுகாப்பு செயளலாளரால் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆயுதங்கள் பாகிஸ்தானால் வேறு நாடுகளில் இருந்து பெறப்பட முடியாதவை அல்ல ஆனாலும் கோட்பாயாவிடம் இருந்து அந்த ஆயுதங்களை விலை கொடுத்து பெற பாகிஸ்தான் முன்வந்தமையின் பின்னணியில் பலமான போரியல் வியூகம் ஒன்று காத்துக் கிடப்பதை இந்தியா அவதானித்துள்ளது. குறிப்பாக இந்தியாவிற்கு தலையிடி கொடுக்கும் நோக்கில் பாகிஸ்தானில் தயாரான “இஸ்லாமிய தீவிரவாதம” என்ற வெடிகுண்டு அமெரிக்க தலையீட்டால் பாகிஸ்தானில் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்கும் தங்கள் தயாரிப்பினை மறைப்பதற்கு ஒரு தளம் பாகிஸ்தானுக்கு தேவைப்பட்டது அதற்குரிய சரியான களமாக பாகிஸ்தான் தெரிவு செய்துள்ள இடம் தான் இலங்கை. இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காட்டு பிரதேசங்களில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதக் குழுக்களை தங்க வைப்பதறகு ஸ்ரீலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளது. குறிப்பாக லக்ஷர் தொய்பா அமைப்பின் தளமாக இலங்கையின் கிழக்கு பகுதியை மாற்றுவதே ஸ்ரீலங்காவின் திட்டம். இது குறித்து இந்திய ஊடகங்கள் கூட அண்மையில் தகவல் வெளியிட்டுள்ளமை நினைவு கூரத்தக்கது. இந்த நடவடிக்கை குறித்து மோப்பம் பிடிப்பதற்கு இந்திய புலனாய்வு பிரிவு அனுப்பிய “புடவை வியாபாரிகளை” ஸ்ரீலங்கா அரசாங்கம் கைது செய்து அவர்களின் முயற்சிகளையும் தடுத்து விட்டது. இதனால் இந்தியாவின் கவலை மேலும் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு செக் வைப்பதற்கான நகர்வுகளில் ஈடுபடத் தொடங்கியது இந்தியா. இந்தியாவின் இந்த நகர்வில் எதிர்பாராத திருப்பமாக சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசம் அமைந்து விட்டது. இது இந்தியாவிற்கு மேலும் தலையிடியை அதிகரித்து விட்டது.இரு முனை தாக்குதலுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை இந்தியாவிற்கு ஏற்பட்டது. எதிர் கட்சிகளின் சார்பில் சரத் பொன்சேகா போட்டியிட்டால் வெற்றி பெறும் வாய்ப்புகள் இருப்பதை அறிந்த இந்தியா உடனடியா எதிர் கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்களை இந்தியாவிற்கு அழைத்து சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என “அறிவுறுத்தி” அனுப்பியது. இந்தியாவில் இருந்து திரும்பிய பின்னர் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பதற்கு ரனில் விக்கிரமசிங்க முன்வைத்த 10 நிபந்தனைகள் இந்தியாவால் தயாரானவை. அதனை ஏற்றுக் கொண்டும் அவர் போட்டியிட்டால் அவரை போட்டு தள்ளவும் தாயராகவுள்ளது இந்திய புலனாய்வு பிரிவு. இதன் மூலம் மகிந்தவின் வெற்றி வாய்பினையும தட்டிப்பறிப்பது இந்தியாவின் நிலைப்பாடு. எனினும் ரனில் விக்கிரமசிங்க என்ற தோல்வியின் நாயகனை நம்பி மகிந்தவை பகைத்துக் கொள்ளவும் இந்தியாவிற்கு விருப்பம் இல்லை. அதனால் மகிந்தவின் பாகிஸ்தானிய ஆதரவுப் போக்கினை மாற்றுவதற்கு சில நகர்வுகளை இந்தியா ஆரம்பித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களின் ஒருவரான பிராணப் முகர்ஜயை இலங்கைக்கு அனுப்பி தனது ஆட்டத்தை ஆரம்பித்தது இந்தியா. வடக்கு கிழக்கு இணைப்பு என்ற தனது பிரம்மாஸ்திரத்தை எடுத்துள்ளது இந்தியா இதற்கு இணங்குவது என்பது மகிந்தராஜபக்ச அரசியல் தற்கொலை செய்வதற்கு சமனாது என்பது இந்தியாவிற்கு தெரியும். அதற்கு அடுத்து சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நோக்கில் இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்தது தான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் நாங்கள் தரிசித்த சூரிச் காட்சிகள். இலங்கையின் சிறுபான்மை கட்சிகள் என்பன பல கூறுகளை கொண்டவை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பிரிவு இந்தியாவின் தீவிர விசுவாசிகளை கொண்டுள்ளது.இரா சம்பந்தன் சுரேஸ் பிரேமசந்திரன் போன்றவர்கள் இந்தியா சொல்லும் இடத்தில் தான் சிறுநீர் கூட கழிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கின்றார்கள். மறுபுறம் ஸ்ரீகாந்தா மற்றும் கிஸோர் ஆகியோர் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அனுபவிக்கும் சகல சுகபோகங்களையும் அனுபவிக்க வேண்டும் அதற்கு மகிந்தரின் காலை நக்குவது தான் ஒரே வழி என்று புதிய பாதை வகுத்தவர்கள். மாவைசேனாதிராஜா இதில் யார் பக்கம் சேர்வது என்பது தெரியாமல் அடிக்கடி குழம்பிப்போவாதாக தெரிகின்றது. மறுபுறம் அரியநேந்திரன்,பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,சிவாஜிலிங்கம் போன்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருவாக்கப்பட்ட போது வெளியிடப்பட்ட பிரனடனத்தில் இருந்து விலகாமல் இருப்பதற்கு விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவால் பாலூட்டி சீராட்டி வளர்க்கப்பட்ட ஈ.பி.டி.பி தற்போது முற்றிலும் மகிந்த சகோதரர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. டக்ளஸ் விரும்பினாலும் வெளியேற முடியாதபடிக்கு இறுக்கமான முடிச்சுகளை அவரை சுற்றி போட்டுள்ளது ஆளும் தரப்பு. இதே நிலை தான் தொண்டமான் மற்றும் சந்திரசேகரனுக்கும் இவர்களின் ஊழல் மோசடிகள் குறித்து அத்தனை ஆதாரங்களும் பசிலின் மேசையில் தயார் நிலையில் இருக்கின்றன. இவர்கள் கட்சி மாறினால் கைது செய்யப்படும் அவல நிலையில் பாவம் மலையகத்தின் மக்கள் பிரதிநிதிகள். மறுபுறம் தீவிர மேற்குலக ஆதரவுடன் ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் இயங்கி வருகின்றார்கள்.அவர்களின் நிழல் உலக வர்த்தக தொடர்புகள் மேற்குலக நாடுகளின் ஆசீர்வாதத்துடன் செழிப்பாக நடப்பதால் அவர்கள் மேற்குலகம் சொல்வதை செய்வதற்கு தயாராகவுள்ளனர். இப்படியான மாறுபட்ட அரசியல் சித்தாந்தங்கள் கொண்டவர்களுடன் புலி எதிர்பிற்கு அப்பால் அரசியல் அறியாத ஆனந்தசங்கரி,சித்தார்தன்,சிறீதரன் கோஷ்டியும் இலங்கையின் அரசியில் தவிர்க்க முடியாத அங்கங்களாகவி விட்டனர். இந்தியாவிற்கு எப்போதும் நம்பிக்கைக்குரிய விசுவாச நாயகா பரந்தன் ராஜனும் அவருடைய ஈ.என்.டி.எல்.எப்பும் மட்டும் தான் மிச்சமாய் இருக்கின்றது என்பது வேடிக்கையான உண்மை; இந்தியாவில் தஞ்சமடைந்த முன்னாளர் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் இலங்கையின் அரசியலை மறந்து போனதாலும் அவரை இலங்கை அரசியல் மறந்து விட்டதாலும் அவரை இனி நம்பி பயனில்லை என்பது இந்திய எஜமானர்களின் நிலைப்பாடு. இந்தியாவில் இருந்தே இந்த சந்திப்பிற்கான அழைப்பு அனைத்து தரப்பிற்கும் விடுக்கப்பட்டுள்ளது. ஆரசாங்கத்தில் அங்கம் வகிகும் டக்ளஸ், தொண்டமான், போன்றவர்கள் முதலில் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள விரும்பதாக போதும் மகிந்த ராஜபக்சவின் வேண்டுதலின் பேரில் அவர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கின்றது. இவர்கள் கலந்து கொள்ளாவிட்டால் இந்தியா தன் மீது கோப்பட்டு விடும் என்பது மகிந்தரின் கவலையாக இருந்துள்ளது. ஆனால் கூட்டத்தின் ஆரம்ப நாளில் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்சி நிரலை பார்த்த போது தான் இந்தியாவின் ஆட்டம் இவர்களுக்கு விளங்கியுள்ளது. தமிழர் தகவல் மையம் என்ற பெயரில் இந்தியா ஏற்பாடு செய்யத இந்தரை சந்திப்பின் பிரதான நோக்கம் தாங்கள் கைகாட்டும் ஒரு வேட்பாளருக்கு அல்லது கூட்டணிக்கு சிறுபான்மை மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதே. அதனால் தான் இலங்கையின் எதிர் காலத் தேர்தல்களின் சிறுபான்மை மக்களின் வகிபாகம் என்ற விடயத் தலைப்புடன் நிகழ்சி நிரல் வழங்கப்பட்டது. மகிந்தரின் விசுவாசிகள் உடனடியாகவே இதனை லலித் விரதுங்கவிற்கு தெரியப்படுத்தவும் அலரி மாளிகை விழித்துக் கொண்டது. அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் அனைவருக்கும் தேர்தல் குறித்த கலந்துரையாடலை மேற்கொண்டு நடத்துவதற்கு இடமளிக்க வேண்டடாம் என்ற கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தொண்டமான் டக்ளஸ் போன்றவர்கள் தேர்தல் அறிவிக்கப்படாத நிலையில் தேர்தல்கள் குறித்து பேசுவது பயனற்றது என்று கூறி அதனை தடுத்துள்ளனர். அடுத்த விடயம் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் சுதந்திர நடமாட்டம் பற்றியதாக இருந்துள்ளது. இந்த விடயத்தில் சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைவதை எவராலும் தடுக்க முடியாது என்றும் அதனை ஆரம்ப புள்ளியாக வைத்து தனது காய்களை நகாத்தலாம் என்பதும் இந்தியாவின் எதிர்பார்ப்பு. ஆனால் அதற்கும் ஆப்பு வைத்தது இலங்கை எதிர் வரும் டிசம்பர் மாதம் முதல் முகாம்களில் உள்ள மக்கள் சுதந்திரமாக நடமாடும் சுதந்திரம் வழங்கப்படும் என்றும் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு முன்னர் மீள் குடியேற்றப்படுவர்கள் என்றும் பசில் ராஜபக்ச அறிவித்தனை விடுத்தார். இந்தியா போட்ட திட்டங்களை அடித்து நொருக்கியது மகிந்தரின் விசுவாப்படை. இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியேற்றப்பட்டு விடுவார்கள் அவர்களின் நடமாட்ட சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இனி அவர்கள் பற்றி பேசுவதற்கும் ஒன்று படுவதற்கும் எதுவும் இல்லை என்று கூட்டத்தில் கலந்து கொண்ட அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் முன்வைத்த வாதம் வலுப்பெறவே ஏற்பாட்டாளர்களால் அதனையும் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நெருக்கடி நிலைகளை இந்தியாவோ இந்த சந்திப்பை ஏற்பாடு செய்யத தமிழர் தகவல் மையம் மற்றும் ஈ.என்.டி.எல்.எப் போன்ற அமைப்புகளோ எதிர்பார்க்கவில்லை. இதனால் மாற்று ஏற்பாடுகள் அல்லது மாற்று வியூகங்கள் எதுவும் அற்ற நிலையில் இந்த கூட்டம் முடிவடைந்துள்ளது. தமது எஜமானர்களுக்கு விசுவாசமாக நடத்து கொண்ட திருப்தி அங்கு விடுதியின் முகப்பில் நின்று கொண்டிருந்த எங்கள் இனத்தின் பிரதிநிதிகள் முகங்களில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. பயணச் செலவிற்கென இந்தியாவினால் வழங்கப்பட்ட 3000 அமெரிக்க டொலர்களை எவ்வாறு செலவு செய்யலாம் என்ற பேச்சும் அங்கு கேட்டுக் கொண்டிருந்தது. தொண்டமானைப் போல நாங்களும் 5 நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்ற சிலரின் ஆதங்கமும் எனது காதில் விழுந்தது. தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்களின் தலைவிதிகளை தீர்மானிக்கப் போவதாக சொல்லிக் கொள்ளும் இந்த அரசியல் தலைவர்களின் கரங்களில் எங்கள் உறவுகளின் எதிர்காலம் ஒப்படைக்கப்பட்டு விட்டதே என்ற வேதனையில் அங்கிருந்து விடைபெற்றேன். தமிழ் மக்களின் இழப்புகளின் மீதாக தமது அரசியல் இருப்புகளை உறுதிப்படுத்த துடிக்கும் இவர்களின் கரங்களில் தமிழர்களின் தலைவிதியை தர முடியுமா ? சிந்திக்கத் தூண்டும் கேள்வி தான் ஆனால் தமிழர்களின் தலைவிதி இனி யார் கையில் என்தை போலவே இப்போதைக்கு விடை தெரியாத மற்றுமொரு கேள்வியாகத் தானே இதனையும் பார்க்க முடியும். முட்கம்பி வேலிக்குள் முகம் புதைந்து நிற்கும் எனது உறவுகளின் நினைவுகளும் தாயகத்தில் நான் வாழ்ந்த மண்ணில் கால் பதிக்கும் கனவுகளமாய் மீண்டும் ஒரு விடியல் பொழுத்துக்கான ஏக்கத்துடன் அங்கிருந்து நகரத் தொடங்கின என் கால்கள்.

அமெரிக்காவின் அந்தர் பல்டியும் கைவிடப்பட்ட ஈழத் தமிழர்களும்

தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்! இலங்கை அரசின் உறவை நாம் இழக்க விரும்பவில்லை! இலங்கை அரசு ஒரு இறைமையுள்ளது! தற்போது அமெரிக்க அரசியல் வாதிகளின் வாயில் இருந்து வரும் சொற்கள் இதுவாகும். எங்கிருந்து வந்தது இந்தத் திடீர் மாற்றம் என அனைத்துத் தமிழர்களும் வியந்து நிற்கின்றனர். நாங்கள் மாறியிருந்தால் தானே, அப்பவும் எப்போதும் நாம் ஒரே மாதிரித் தானே இருந்தோம் என்பதைப் படம் போட்டுக் காட்டியுள்ளது அமெரிக்கா. விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்காலில் இறுதியுத்தத்தில் ஈடுபட்டிருந்த வேளை, தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்தனர். பசுபிக் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான கப்பல் அகதிகளை மீட்டு விடுதலைப் புலி உறுப்பினர்களை மூன்றாவது நாடு ஒன்றிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகின, இருப்பினும் பின்னர் இறுதி நேரம் அமெரிக்கா கையை விரித்தது. பின்னர் சட்டலைட்டில் படங்களைப் பிடித்து மனிதப் புதைகுழிகள், ஆட்டிலறித் தாக்குதல் நடைபெற்ற இடங்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டு ஏதோ மனித உரிமை காக்கப்படவேண்டும் எனக் கொக்கரித்தது அமெரிக்கா. அத்துடன் நிறுத்தாமல், சர்வதேச நாணய நிதியம் வழங்க இருந்த கடன்தொகையை நிறுத்துவதுபோல நடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பின்னர் ச.நா. நிதியம் கொடுக்க இருந்த தொகையைவிட மேலதிகமாகக் கொடுக்க உதவியது. அவ்வப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் மனிதப் பேரவலம், யுத்தக் குற்றம் போன்ற அறிக்கைகளை தயாரித்து அமெரிக்க அரசுக்கு அனுப்ப அதனை வாங்கி குப்பைத் தொட்டியில் இட்டது ஒபாமா அரசு. தற்போது முதற்பெண்மணி, மற்றும் அவரது முதல் நாய் என்பன அந்த அறிக்கை பேப்பரில் பந்துசெய்து விளையாடுகிறார்கள். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது, முதலில் கிலாரி கிளின்ரனுக்கும், பின்னர் அவர் வெற்றியடையமாட்டார் எனத் தெரியவர ஓபாமாவிற்கும் தமிழர்கள் பெரும் தொகைப் பணத்தை வாரி இறைத்தனர். தமிழர்களுக்கு ஒரு விடிவு வரும் அதை அமெரிக்கா பெற்றுத் தரும் என நம்பி இருந்தனர். எவரையும் நம்பாமல், தம்மையே நம்பி சிறிய படைகளுடன் வலுவாக இருந்த விடுதலைப் புலிகள் இறுதியில் பெரும் படையுடன் இருந்தாலும் ஒரு வெளிநாட்டை நம்பி பல பின்னடைவுகளைச் சந்தித்தனர். அது வேறு எந்த நாடும் அல்ல சாட்ஷாத் அமெரிக்காவே தான். இத்தனை நடந்த பின்னரும் ஏதோ தமிழர்களுக்கு உதவுவதுபோல நடந்து பல தமிழ் ஆதரவாளர்களையும், புத்திஜீவிகளையும் நம்பவைத்து, அவர்களிடம் இருந்து தனக்குத் தேவையான தகவல்களைப் பெற்ற பின்னர், தற்போது தமது வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது அமெரிக்க அரசு. தமிழர்களாகிய நாம் ஒன்றை புரிந்து வைத்திருக்கவேண்டும். இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியக் கொள்கை வகுப்பாளர்களும் “ரோ” அமைப்பும் எதை விருப்புகிறதோ அதுவே நடக்கும். அதே போல ஓபாமா ஆட்சிக்கு வந்தாலும் அங்கு FBI மற்றும் CIA போன்ற உளவு நிறுவனங்கள் என்ன சொல்கிறதோ அவையே இறுதி முடிவும் ஆகும், இதில் நாம் என்னதான் தலைகீழாக நின்றாலும் நடக்காது எமது விடயம். இதுவே யதார்த்தமாகும். விடுதலைப் புலிகளின் வளர்ச்சிகண்டு உலகமே அச்சம் கொண்டிருக்கவேண்டும். அதுவும் அமெரிக்கா மிகுந்த கவலை அடைந்திருக்கவேண்டும் அதனால் தான் புலிகளை அழிக்க பல நீண்ட திட்டங்களை அமைத்துக் கொடுத்துள்ளது. ஒரு களம் அமைத்துக் கொடுத்துள்ளது. அமெரிக்க கைப்பொம்மையான பான் கீ மூன் இன்று என்ன செய்கிறார்? ஏன் பாதுகாப்புச் சபையில் இலங்கை குறித்த விவாதம் நடைபெறும் போது சீனா எதிர்த்தது. ரஷ்யா இலங்கைக்கு ஏன் ஆதரவு வழங்கியது? அப்போது ஏன் அமெரிக்கா அதில் தலையிடவில்லை? இவை எல்லாம் மறைக்கப்பட்ட விடயங்கள். பல உலக நாடுகள் தமிழன் காதில் பூ வைத்திருக்கின்றன ஆனால் அமெரிக்கா தற்போது வைத்துள்ளதுதான் பெரிய பூ. உலகத் தமிழர்கள் ஒன்றை நன்கு புரிந்து வைத்திருக்கவேண்டும். போராடாத இனம் வென்றதாகச் சரித்திரம் இல்லை. எமது போராட்டத்திற்கு முட்டுக்கட்டை போடும் உலக நாடுகளை நாம் எதிரியாய்ப் பார்க்கவேண்டியது இல்லை, அவர்களை நம்பாமல் செயல்படுவதே நல்லது. பல உலக நாடுகளிடம் நாம் சென்று உதவுமாறு கோரிக்கை விடுப்பதை விட நாமே போராடி ஜெயிப்பதே நல்லது. எமது ஒற்றுமை எமது போராட்ட பங்களிப்பு என்பன புதுவேகத்துடன் ஆரம்பிக்கப்படவேண்டும். 33,000 மாவீரர்கள் இறந்ததும், அவர்கள் கனவுகளும், போராட்டங்களும் அமெரிக்காவுக்குப் புரியுமா? அவர்களையும் பயங்கரவாதிகளாக அல்லவா பார்க்கும் அமெரிக்கா, மாவீரரின் உன்னதம் தமிழனுக்குத் தானே தெரியும், இதில் நாம் ஏன் வேறு நாடுகளிடம் சென்று மடிப்பிச்சை கேட்கவேண்டும்? உலக நாடுகளை எமது குறிக்கோளை அடைய ஒரு கருவியாகப் பாவிக்கலாமே ஒழிய அவர்களை நம்பி அதில் ஏறிப் பயணிக்க முடியாது என்பதை தமிழர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும், இது இந்தியா தான் தமிழர்களுக்கு தீர்வைப் பெற்றுத்தரும் என்று அலையும் ஒரு சிறு கூட்டத்தினருக்கும் பொருத்தமாகும்

ஜனாதிபதித் தேர்தலும் முசுப்பாத்திகளும்….!

அரசியல்வாதிகளெல்லாம் வடிவேல் சொல்வது போல் திடீரென்று “பாசக்காரப் பயலுகளாக” மாறத் தொடங்கிவிட்டார்கள். கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் சுதந்திரமாக நடமாடலாம் என்கிறார்கள், பாஸ் இல்லாமல் போக்குவரத்துச் செய்யலாம் என்கிறார்கள், 180 நாள்கள் வேலை செய்தவர்களையெல்லாம் உத்தியோகத்தில் நிரந்தரமாக்குவோம் என்கிறார்கள்….. இப்படி நமது ஆளுந்தரப்பிலுள்ள அரசியல் வாதி களின் பாசமழை ஒருபுறம்! மறுபக்கம், எதிரணியினர் குறிப்பாக ஜெனரல் சரத்பொன்சேகா தரப்பினர் பாச மழையில் மக்களை போதும், போதும் எனும் வகையில் தெப்பமாக்கித் தொலைக்கிறார்கள். நலன்புரி முகாம்களிலுள்ள மக்களுக்குச் சுதந்திரம் இல்லையாம், மாகாணசபை முறைமைக்கு அப்பால் சென்று சிறுபான்மையி னருக்கு தீர்வு வழங்கத் தயாராம், மக்களுக்கு இந்த நாட்டில் ஜனநாயகம் இல்லையாம், அதை அவர் பெற்றுத்தருவாராம்! எல்லாம் இந்த ஜனாதிபதித் தேர்தல் படுத்தும் பாடு! தேர்தல்கள் மட்டும்தான் அரசியல்வாதிகளைப் பாசக்காரப் பயலுகளாக மாற்றுகின்றன, மக்களை எஜமானர்களாக்குகின்றன. அப்படிப் பார்த்தால், அடிக்கடி தேர்தல் வருவதுதான் நல்லது போல் தெரிகிறது என்று சற்று நக்கல் பாணியில் நம்மிடம் சொன்னார் நமது ஊடக நண்பர். இந்த திடீர் பாசமெல்லாம் மக்கள் மீதுதான். ஆனால், வேட்பாளர்களோ ஒருவர் மீது ஒருவர் இனியில்லையென்ற கடுப்பில் இருக்கின்றார்கள். இராணுவத்துக்குள் நடந்த ஊழல்களுக்கெல்லாம் சரத்பொன்சேகாவே பொறுப்பு என்கிறது மஹிந்த தரப்பு. இந்த நாட்டில் நிலவும் அராஜகம், அட்டூழியம் அனைத்தையும் புரிந்தது மஹிந்த ராஜபக்ஷதான் என்கிறார் சரத்பொன்சேகா! மஹிந்தவும், பொன்சேகாவும் பரஸ்பரம் இப்படிக் குற்றச்சாட்டுக்களைக் கூறிக் கோஷமிடும் போது, அவர்களுடன் இணைந்து நிற்கும் சிறுபான்மையின அரசியல்வாதிகள் வில்லுப் பாட்டுக்கு ஆமா போடுகின்றமைபோல், பக்கப்பாட்டுப் பாடுகின்றமைதான் இப்போதைக்கு மிகக் கொடுமையாக இருக்கிறது. உதாரணமாக, சரத்பொன்சேகா மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று, அவர் சிறுபான்மையினத்தவருக்கு எதிரானவர் என்பது! பொன்சேகா இராணுவத்தளபதியாக இருந்தபோது வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கியிருந்த பேட்டியொன்றை வைத்துக்கொண்டுதான் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுச் சுமத்தப்படுகிறது. கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் “நஷனல் போஸ்ற்” என்கிற ஊடகமொன்றுக்கு கடந்த வருடம் பொன்சேகா நேர்காணலொன்றை வழங்கியிருந்தார். அதன்போது, இலங்கை நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது எனத் தாம் பலமாக நம்புகிறார் என்கிற அர்த்தப்பட அவர் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். அந்த ஊடகமும் அதை வெளியிட்டிருந்தது. பக்கம் சாராமல் சொல்வதென்றால், இது மிக மோசமானதோர் இனவாதக் கருத்துத்தான் என்பதில் இரண்டுபட்ட கருத்தியல் இல்லை! ஆனால், தான் அப்படிக் கூறவில்லை என்றும் தனது கருத்து பிழையாக விளங்கப்பட்டுவிட்டது என்றும் இப்போது சரத்பொன்சேகா கூறுகிறார். பொன்சேகா கூறுகின்றமை உண்மையாக இருந்தாலும் கூட, இந்த மறுப்பை அவர் பேட்டி வெளியான போதே கூறியிருக்க வேண்டும். இப்போது கூறுகின்றதில் இலாபமில்லை! அது ஒருபுறமிருக்க, ஆளுந்தரப்பிலுள்ள சிறுபான்மை அரசியல்வாதிகள், குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள், பொன்சேகாவின் அந்தக் கருத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, கோசம் போடும் போதுதான் நமக்குள் சில தார்மீகக் கோபங்களும், கேள்விகளும் எழுகின்றன. ஜெனரல் சரத்பொன்சேகா அந்தக் கருத்தைக் கூறியபோது, அவர் இலங்கை நாட்டு இராணுவத்தின் தளபதி எனும் பதவியை வகித்துக் கொண்டுதான் இருந்தார். அதாவது மஹிந்த ராஜபக்ஷவின் முழுமையானதொரு கட்டுப்பாட்டின் கீழ்தான் ஜெனரல் சரத்பொன்சேகா அப்போது கடமையாற்றினார். அப்படியானதொரு நிலையில், தனது இராணுவத் தளபதி இனவாதக் கருத்தொன்றைக் கூறும்போது, மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அவரின் அரசிலுள்ள முக்கியஸ்தர்களோ ஏன் அதை எதிர்க்கவேயில்லை? சிறுபான்மையினர் மத்தியில் அந்தக் கருத்து ஏற்படுத்திய மன உளைச்சலுக்காக ஏன் மன்னிப்புக் கோரவில்லை? மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இருந்து கொண்டே இயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல்துறை அமைச்சரான சம்பிக்க ரணவக்க தமிழ், முஸ்லிம் மக்களை கேவலப்படுத்தும் வகையில் கடந்த வருடம்; இனவாத வாந்தி எடுத்திருந்தமையை வாசகர்கள் எவரும் மறந்திருக்க மாட்டீர்கள். முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு வியாபாரிகளாக வந்தவர்கள், இந்துக்களோ இந்தியாவிலிருந்து அகதிகளாக வந்தவர்கள். எனவே, இலங்கைத் தேசத்தில் இவர்களுக்கு எவ்விதமான உரிமைகளும் கிடையா. இந்த நாடு பௌத்த மகாஜனங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று ஆங்கிலப் பத்திரிகை யொன்றுக்கு அவர் வழங்கிய பேட்டியொன்றில் கூறியிருந்தார். சம்பிக்க இவ்வாறு கூறியபோது, ஆளுந்தரப்பிலிருந்த சிறுபான்மை அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஏனைய அரசியல்வாதிகளும் தங்கள் வாய்கள் உட்பட அனைத்தையும் மொத்தத்துக்குப் பொத்திக் கொண்டிருந்துவிட்டு, இப்போது மட்டும் சரத்பொன்சேகாவின் கருத்துக்கு எதிராகக் கோசமிடுகிறார்களே, இவர்களுக்கு வெட்கமில்லையா என்று கோபத்துடன் கேட்கிறார் இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஒருவர்! முஸ்லிம்களை வியாபாரிகளாக வந்தவர்கள் என்றும், இந்துக்களை அகதிகளாக வந்தவர்கள் என்றும் சம்பிக்க கூறியபோது மஹிந்த ராஜபக்ஷ மௌனம் காத்தாரே தவிர, அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அது ஏன்? மௌனம் என்பது சம்மதத்துக்கும் ஆதரவுக்கும் அறிகுறி என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்ததுள்ளமையும் இங்கு கவனிக்கத் தக்கது! இவை ஒருபுறமிருக்க, நாமெல்லாம் எதிர்பாத்தகால நேரங்களுக்கு முன்பாகவே கட்சித் தாவல்கள் ஆரம்பித்துவிட்டன. ஐ.தே.க.வின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. என அழைக்கப்படுகின்ற எஸ்.பி. திஸாநாயக்க மீண்டும் சுதந்திரக் கட்சிக்குப் போய்விட்டார். இதில் சுவாரசியம் என்னவென்றால் எஸ்.பியின் வீட்டுக்கு ஜனாதிபதியே சென்று எஸ்.பி.யைக் கட்டித் தழுவி கட்சி மாறுமாறு கேட்டிருக்கின்றார். மஹிந்த ஏன் இப்படி இறங்கிப் போனார்? எஸ்.பியின் வீட்டுக்கு சென்று ஆதரவு கேட்குமளவு மஹிந்த ராஜபக்ஷவின் நிலை ஆட்டங்கண்டு விட்டதா? ஏன்று கேட்கிறார்கள் ஒரு சாரார்! ஆனால், அப்படியல்ல இது மஹிந்தவின் ராஜதந்திரமாக்கும் என்கிறார்கள் வேறொரு சாரார்! அதாகப்பட்டது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார், சரத்பொன்சேகாவுக்கு ஆதரவாகப் பேசக்கூடிய அல்லது களமிறங்கக் கூடியதொரு நிலை இந்தத் தேர்தலில் காணப்படுகின்றது. அப்படி சந்திரிக்கா களமிறங்கினால், அது மஹிந்தவுக்கு ஏதோவொரு விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும். எனவே, அந்த நிலையை எதிர்கொள்வதற்காகத்தான் ஐ.தே.க.வுக்குள் அதிருப்திகளோடு இருந்த எஸ்.பியை தனது அணிக்குள் கொண்டு வந்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ! எஸ்.பி யும் சந்திரிக்கா அம்மையாரும் அரசியலில் கவுண்டமணியும் செந்திலும் போலானவர்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. (பாம்பும் கீரியும் என்கிற உதாரணத்தை எத்தனை காலத்துக்குத்தான் சொல்வது. அதுதான் இப்படியொரு உதாரணம். செந்திலை கவுண்டமணி உதைக்காமல் எந்தப் படம் தான் வந்திருக்கிறது) இதேவேளை, சிறுபான்மைக் கட்சிகளுக்குள்ளும் இந்தக் கட்சித் தாவல்கள் நிகழத் தொடங்கி விட்டன. உதாரணமாக, முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட உறுப்பினரும் கல்முனை மாநகரசபையின் அங்கத்தவருமான சட்டத்தரணி அமீருல் அன்சார் மௌலானா அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு கொடுக்க முன்வந்திருக்கிறார். இதுபோலவே, காத்தான்குடி நகரசபையின் முஸ்லிம் காங்கிரஸ் சார்பான தலைவர் மர்சூக் என்பவரும் நகரசபை உறுப்பினர்கள் சிலரும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குகிறார்கள் எனச் சொல்லிக்கொண்டு போய்விட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தாங்கள் அப்படி அணி மாறவில்லை என அவர்கள் தரப்பில் தற்போது மறுக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிக முக்கியமான பிரமுகரொருவர் நம்மைத் தொலைபேசியில் அழைத்து, சந்தேகமொன்றைக் கேட்கின்றமை போல், தகவலொன்றைக் கூறினார். அந்தத் தகவல் சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதாவது, முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து, அவரின் அணிக்குச் சென்று விட்டாராம் என்பதுதான் அந்தத் தகவலின் கதைச் சுருக்கம்! மு.கா. தவிசாளரை அதே நிமிடம் கைப்பேசியில் தொடர்பு கொண்டு விசயத்தைக் கேட்டோம். மெல்லிய சிரிப்புடன் பதிலளித்தார். “”யாரோ வேண்டாதவர்கள் கட்டிவிடும் கதைதான் இது! மு.கா.விலிருந்து நான் ஒதுங்கிப் போகும் நிலையொன்று வந்தால், எனது வீட்டுக்குத்தான் செல்வேனே தவிர, இப்படியெல்லாம் போக மாட்டேன்” என்றார்! ஐ.தே.முன்னணியோடு, முஸ்லிம் காங்கிரஸ் அவசரப்பட்டு இணைவது குறித்து அக்கட்சியின் தவிசாளர் பசீர்சேகுதாவூத்மாறு பட்டசில கருத்துக்களை ஊடகங்களுக் குத்தெரிவித்திருந்தார். அதைவைத்துக்கொண்டு சிலர்போட்ட கோலம்தான், பசீர் கட்சி மாறிவிட்டார் என வந்த இந்தக் கதை என்பது பிறகு நமக்குப் புரிந்தது. ஆனாலும்,கட்சி தாவும் காட்சிகள் நிறையவே இன்னும் அரங்கேறத்தான் போகின்றன. அம்பாறை மாவட்டத் திலுள்ள ஓர் அமைச்சரும், இன்னொரு பிரதியமைச்சரும் கூட ஐ.தே.க. முன்னணியோடு இணையவுள்ளனர் என கதையொன்று உலவுகிறது. பேச்சுசையும் நடந்து விட்ட தாம்! இதுபற்றி நண்பரொருவரிடம் பேசிக் கொண்டிருந் தேன், அப்படியென்றால், நல்ல முசுப் பாத்திதான் என்று ரஜனி படமொன்றைப் பார்க்கப் போகும் ஆவலுடன் கேட்டார்! உண்மைதான். ஜனாதிபதித் தேர்தலில் இன்னும் நிறையவே முசுப்பாத்திகள் காத்திருக்கின்றன!

ஈழம் பொதுசன வாக்கெடுப்பு - கேள்வி - பதில்கள் & விவாதங்கள்

ஈழத்தமிழர்களே, ஈழ ஆதரவாளர்களே இவ்வெளியீடு இரண்டு சிறு பகுதிகளாக பிரித்து வெளியிடப்பட்டுள்ளது. முதல் பகுதி பொதுசனவாக்கெடுப்பு தொடர்புடைய சில கருத்துக்களை கேள்வி - பதில் முறையில் விளக்கி வந்துள்ளது. இரண்டாவது பகுதி பொதுவாக்கெடுப்பு ஈழ விடுதலைக்கான அரசியல் பாதை என்ற எமது முந்தைய வெளியீட்டின் மீது தமிழ் ஈழ ஆதரவு முன்னணியினர் முன் வைத்துள்ள - பொதுவாக்கெடுப்பு ஈழப்போராட்டத்தை காயடிக்கும் சந்தர்ப்பவாதக் கோரிக்கை என்ற வெளியீட்டின் - விமர்சனங்களுக்கு எமது விளக்கங்களை அளித்து வந்துள்ளது. மேற்கூறிய இரு வெளியீட்டையும், வாசிக்காதவர்கள் கூட புரிந்து கொள்ளும் விதத்திலே இரண்டாவது பகுதி வெளி வர கவனம் செய்யப்பட்டுள்ளது. எனவே இவ்வெளியீடு பொதுசனவாக்கெடுப்பிற்கான விளக்கங்களையும், (பொதுவாக்கெடுப்பு எனும் வார்த்தை வாசகர்களின் கூடுதல் புரிதலுக்காக பொதுசனவாக்கெடுப்பு என அதே பொருளுடன் மாற்றப்படுகிறது) அது குறித்த ஆரோக்கியமான விவாதங்களையும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும் என நம்புகிறோம். பொதுசனவாக்கெடுப்பு - சில கேள்வி பதில்கள் 1. பொதுசனவாக்கெடுப்பு - ஈழப்பிரிவினையை கைவிடுவதாகுமா? பொதுசனவாக்கெடுப்பு என்பது ஈழமக்களிடம் ஈழப்பிரிவினையா? ஒன்றுபட்ட இலங்கையா? என்று ஒரு வாக்கெடுப்பு நடத்தி, அவர்களின் அரசியல் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்கும் அரசியல் உரிமையாகும். பொதுசனவாக்கெடுப்பு நடத்தப்பட்டால், ஈழ மக்கள் பிரிவினைக்கே வாக்களிப்பார்கள். அந்த வகையில் ஈழத்திற்கான சாத்தியப்பாட்டையே பொதுசனவாக்கெடுப்பு முழுமையாக உள்ளடக்கி உள்ளது என்பது தர்க்கப்பூர்வமாகும். பிறகு எப்படி ஈழத்தைக் கைவிடுவதாக பொதுசனவாக்கெடுப்பு இருக்க முடியும்? மேலும், பிரிவினை கோருபவர்களே உலகமெங்கும் பொதுசனவாக்கெடுப்பை கோருகிறார்கள். எனவே பொதுசனவாக்கெடுப்பு எங்குமே பிரிவினையின் ஆயுதமே தவிர, பிரிவினையைக் கைவிடுபவர்களின், மறுப்பவர்களின் ஆயுதமாக இருக்க முடியாது. 2. பொதுசனவாக்கெடுப்பு - ஈழத்திற்கான மாற்றா? மாற்று இல்லை. ஏனெனில் ஈழம் என்பது இலக்கு, பொதுசனவாக்கெடுப்பு என்பது வழிமுறை, ஒரு இலக்கிற்குப் பதிலாக அந்த இடத்தில் இன்னொரு இலக்கு வைக்கப்பட முடியும். ஒரு வழிமுறைக்குப் பதிலாக அதன் இடத்தில் இன்னொரு வழிமுறை வைக்கப்பட முடியும். ஆனால் ஒரு இலக்குக்குரிய இடத்தில் எந்தவொரு வழிமுறையும் மாற்றாக வைக்கப்பட முடியாது. எனவே பொதுசனவாக்கெடுப்பு என்ற வழிமுறை, ஈழம் என்ற இலக்கிற்கு மாற்றாக வைக்கப்பட முடியாது. எனவே பொதுசனவாக்கெடுப்பு என்பது ஈழத்திற்கான மாற்று இல்லை, ஈழத்திற்கான வழிமுறை. 3. தனி ஈழக் கோரிக்கைக்கும், பொதுசனவாக்கெடுப்பு கோரிக்கைக்கும் உள்ள வேறுபாடு என்ன? ஈழம் என்பது இலக்கு. பொதுசனவாக்கெடுப்பு என்பது வழிமுறை. இவ்விரண்டுக்கும் இடையிலான வேறுபாடு என்பது ஒரு இலக்கிற்கும், அதன் வழிமுறைக்கும் இடையிலான வேறுபாடு ஆகும். இலக்கையே (ஈழம்) கோரிக்கையாக வைக்கும்போது அக்கோரிக்கையில் இலக்கு வெளிப்படையாக இருக்கும். அதற்கான வழிமுறையை கோரிக்கையாக வைக்கும் பொழுது (பொதுசனவாக்கெடுப்பு) இலக்கு அதன் உள்ளீடாக இருக்கும். இலக்கும், வழிமுறையும் என்பது ஊரும், பாதையும் போன்றது. இலக்கிற்கும், அதன் வழிமுறைக்கும் உள்ள வேறுபாடு என்பது ஒன்றை ஒன்று நிராகரிக்கும் முரண்பாடுகள் அல்ல. எந்தவொரு இலக்கும், வழிமுறையும் முரண்பாடாக இருந்தால் அவை, 'இலக்கும், வழிமுறையும்' என்ற உறவுடையதல்ல. 4. பொருத்தமற்ற வழிமுறை என்ற வகையில் பொதுசனவாக்கெடுப்பு ஈழத்தைக் கைவிடுவதாகாதா? முற்றிலும் பொருத்தமற்ற வழிமுறையை நாம் இலக்குடன் தொடர்பற்றது என விமர்சிக்க முடியும். பொதுசனவாக்கெடுப்பு ஈழப்பிரிவினைக்கு முற்றிலும் பொருத்தமற்ற வழிமுறை என்று விமர்சிக்க முடியுமா? முடியாது. ஏனெனில் இது வரலாற்றை மறுப்பதாகும். பொதுசனவாக்கெடுப்பு பல்வேறு நாடுகளில் பிரிவினையை நிகழ்த்தியிருக்கிறது என்பது வரலாற்று உண்மை. உண்மை இப்படியிருக்கையில் ஈழத்திற்கான பொதுசனவாக்கெடுப்பு இலக்குடன் (தனி ஈழப் பிரிவினையுடன்) தொடர்பற்றது என்றோ, அதனை கைவிடுவது என்றோ, ஒன்றுக்கொன்று முரண்பட்டது என்றோ யார் தான் கூறமுடியும்? 5. பொதுசனவாக்கெடுப்பு ஆயுதப்போராட்டத்தை கைவிடுவதாகாதா? நிச்சயமாக ஆகாது. பொதுசனவாக்கெடுப்பை முன்வைத்தால் ஆயுதப் போராட்டமே நடத்த கூடாது என்றோ, ஆயுதப் போராட்டம் நடத்தும் போது பொதுசனவாக்கெடுப்பு கோரக் கூடாது என்றோ ஒரு நிபந்தனையும் இல்லை. பொதுசனவாக்கெடுப்பு என்பது கோரிக்கை. ஆயுதப் போராட்டம் என்பது போராட்ட வடிவம். இவையிரண்டும் ஒன்றுக்கொன்று மாற்றானது அல்ல. பொதுசனவாக்கெடுப்பு கோரி ஆயுதம் தாங்காத அரசியல் போராட்டம் நடத்தலாம், அந்த அரசியலை தாங்கிய ஆயுத போராட்டமும் நடத்தலாம். இரண்டும் சேர்ந்தும் நடத்தலாம். அதேபோல் ஆயுத போராட்டம் என்ற வடிவத்தை ஈழத்தை அங்கீகரிக்க கோரியும் நடத்தலாம். பொதுசனவாக்கெடுப்பு நடத்தக்கோரியும் நடத்தலாம். அல்லது 'ஈழத்தை அங்கீகரி' இல்லையெனில் 'பொதுசனவாக்கெடுப்பு நடத்து' என்று இரண்டையும் இணைத்து கோரியும் நடத்தலாம். எனவே பொதுசனவாக்கெடுப்பு கோரிக்கை ஆயுதப் போராட்டத்தை நடத்துவது அல்லது நிறுத்துவது என்று எதையும் தீர்மானிக்கக் கூடியதல்ல. 6. பொதுசனவாக்கெடுப்பா? ஆயுதப்போராட்டமா? எது முற்போக்கானது? ஒரு கோரிக்கை முற்போக்கானதா? அல்லது பிற்போக்கானதா? என்பது அது எம்மாதிரியான போராட்ட வடிவங்களை மேற்கொள்கிறது என்பதால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது அக்கோரிக்கையின் அரசியல் உள்ளடக்கத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. அதுபோல் ஒரு ஆயுதந்தாங்குதல் நடவடிக்கை, ஆயுதம் தாங்குவாதாலேயே அது முற்போக்கானது என தீர்மானிக்கப்படுவதில்லை. அது முற்போக்கானதா? அல்லது பிற்போக்கானதா? என்பதும் அதன் அரசியல் உள்ளடக்கத்தால் தான் தீர்மானிக்கப்படுகிறது. ஈழத்தில் புலிகளின் ஆயுதப் போராட்டங்களை முற்போக்கானது என்று கூறும் எவரும், தந்தை செல்வாவின் (ஆயுதம் ஏந்தா) போராட்டங்களை பிற்போக்கானது என்று விமர்சிப்பதில்லை. 7. பொதுசனவாக்கெடுப்பு கோரிக்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இருக்குமா? ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற பெயரில் எல்லா ஏகாதிபத்தியங்களையும் எதிர்ப்பது நமது நோக்கமல்ல. அது அவசியமுமில்லை. சாத்தியமுமில்லை. ஈழப்பிரிவினையை எதிர்க்கும் ஏகாதிபத்திய நாடுகளை, கூடவே ஏகாதிபத்தியமல்லாத நாடுகளையும் கூட எதிர்த்துப் போராடுவதுதான் நமது கொள்கையாக இருக்கமுடியும். பொதுசனவாக்கெடுப்பு முறையில் ஈழம் அமைந்தால் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு ஈழமாக இருக்காது என்றும் அதே நேரம் தனிஈழத்தை அங்கீகரி கோரிக்கை மூலம் ஈழம் அமைந்தால் அது ஏகாதிபத்திய எதிர்ப்பு ஈழமாக அமைய முடியுமென்றும் ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. இரண்டு கோரிக்கைகளுமே ஐ.நாவிடம் தான் வைக்கப்படுகிறது. இரண்டுமே உலகமக்களின் ஆதரவைத் திரட்டி ஏகாதிபத்திய நாடுகளை ஏற்கவைக்காமல் அல்லது அவற்றின் ஆதரவைப் பெறாமல் நடைபெற முடியாது. இப்படியிருக்கையில் பொதுசனவாக்கெடுப்பு முறையில் அமையும் ஈழம் மட்டும் ஏகாதிபத்திய ஆதரவு ஈழமென்றும், நேரடியாக அங்கீகரிக்கப்படும் ஈழம் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஈழம் என்றும் எப்படிப் பிரிக்க முடியும்? கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், பொதுசனவாக்கெடுப்பு முறையை விட நேரடியாக ஈழம் அங்கீகரிக்கப்படுவதில்தான் கூடுதலான ஏகாதிபத்திய நலன்கள் உள்ளடங்கிவரும். பிறகு எப்படி 'தனிஈழத்தை அங்கீகரி' கோரிக்கையில் தான் ஏகாதிபத்திய எதிர்ப்பு அடங்கியிருக்கும் என்று கூறுவது? ஈழவிடுதலையை பொருத்தவரை தமிழீழம் நேரடியாக அங்கீகரிக்கப்பட்டாலும் சம்மதமே, பொதுசனவாக்கெடுப்பு முறையில் அமைந்தாலும் சம்மதமே என்றுதான் இருக்க முடியும். பொதுசனவாக்கெடுப்பு முறையில் அமைந்தால் அதில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இல்லை. எனவே அதை ஏற்க மாட்டோம் என்பது என்ன வகையான ஈழ ஆதரவு? 8. ஏகாதிபத்திய எதிர்ப்பு இல்லாதது இன விடுதலையாகுமா? ஈழ விடுதலை என்பது சிங்களரிடமிருந்து அரசியல் விடுதலை பெறுவது என்பதே. ஆனால் இது தவறு என்றும், ஏகாதிபத்தியங்களிடமிருந்து அரசியல், பொருளாதார விடுதலை பெறுவதே உண்மையான இன விடுதலை என்றும் கூறப்படுகிறது. இது ஏகாதிபத்திய எதிர்ப்பை விடுதலைக்கான உள்ளடக்கமாகக் கூறி, உண்மையான ஈழ விடுதலைக்கான உள்ளடக்கத்தை (சிங்களத்திடமிருந்து அரசியல் விடுதலை) மறுக்கிறது அல்லது முக்கியத்துவமற்றதாக்குகிறது. ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டம் என்பது தம்மை ஒடுக்கும் ஆதிக்க தேசிய இனத்திற்கு எதிரான போராட்டம் தான். ஒட்டு மொத்த உலக ஏகாதிபத்தியங்கள் அனைத்தையும் எதிர்க்கும் போராட்டமல்ல. அப்படி ஒரு போராட்டம் இராணுவரீதியிலும் சாத்தியமில்லை, அரசியல் ரீதியிலும் சாத்தியமில்லை. இப்படி சாத்தியமற்ற 'முற்போக்கான' கற்பனை விடுதலையை விட சிங்களத்திடமிருந்து அரசியல் விடுதலை எனும் எதார்த்த விடுதலை தான் நிஜமாகக் கூடியது. மேலும் மேலும் நாடுகள் பிரிவதால் ஏகாதிபத்தியங்களின் மொத்த சுரண்டலின் அளவு குறையப்போவதில்லை. சுரண்டல் அளவு என்பது ஒரே நாட்டிற்குரியதாகயிருந்து வந்தது, இரு நாட்டிற்குரியதாக பிரிந்து விடும். ஒரே நாடாக சுரண்டியவர்கள் இருநாடாக சுரண்டுவார்கள் அவ்வளவு தான். எனவே நாடுகள் பிரிவது ஏகாதிபத்தியங்களுக்கு சுரண்டலின் அளவில் இழப்பை ஏற்படுத்துவதில்லை. ஒரு குறிப்பிட்ட பிரிவினை, குறிப்பிட்ட ஏகாதிபத்தியங்களுக்கு சாதகமாக இருந்தால் அவை ஆதரிக்கும். அதே பிரிவினை குறிப்பிட்ட ஏகாதிபத்தியங்களுக்கு பாதகமாக இருந்தால் எதிர்க்கும். எனவே தேசிய விடுதலைப் போராட்டம் என்றாலே அதை எல்லா ஏகாதிபத்தியங்களும் எதிர்க்கும் என்ற பொருளும் இல்லை. அப்போராட்டமும் எல்லா ஏகாதிபத்தியங்களையும் எதிர்க்கும் என்ற பொருளும் இல்லை. ஒரு இன விடுதலைப் போராட்டம் ஏகாதிபத்திய உலகிற்கு எதிரான போராட்டத்தால் வளர்ச்சி பெற்று வருவதல்ல. மாறாக தனது இன ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான போராட்டத்தால் தான் வளர்ச்சி பெற்று வருகிறது. 9. பொதுசனவாக்கெடுப்பு - என்றைக்குமான கோரிக்கையா? இடைக்கால கோரிக்கையா? இடைக்காலக் கோரிக்கை தான். பொதுசனவாக்கெடுப்பு என்பது ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் என்றென்றைக்குமான அரசியல் உரிமை. ஆனால் அது என்றென்றைக்குமான கோரிக்கையாக இருக்கவேண்டும் என்பதில்லை. உதாரணத்திற்கு இந்தியாவில் தமிழ் தேசிய இனத்திற்கு அரசியல் உரிமையாக அது என்றென்றைக்கும் இருந்து வருகிறது. ஆனால் கோரிக்கையாக என்றென்றைக்கும் இருந்து வரவில்லை. உரிய அரசியல் சூழலில் மட்டுமே இந்த உரிமை கோரிக்கையாக இயக்கம் பெறும். எனவே பொதுசனவாக்கெடுப்பு என்பது உரிமை என்ற வகையில் நிரந்தரமானதும், கோரிக்கை என்ற வகையில் இடைக்காலமானதும் ஆகும். பொதுசனவாக்கெடுப்பு கோருவதற்கான சூழல் ஏற்பட்டு விட்டாலே பொதுசனவாக்கெடுப்பு முறையில்தான் அந்த தேசிய இனம் பிரிவினை பெற்றாக வேண்டும் என்ற பொருள் இல்லை. பொதுசனவாக்கெடுப்போ இன்னபிற வழிமுறைகளோ, எது அதிக, பொருத்தப்பாட்டைக் கொண்டிருக்கிறதோ அந்த வழிமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். 10. பொதுசனவாக்கெடுப்பு - ஈழப்போராட்டத்தை முதலிலிருந்து துவங்க செய்கிறதா? முதலில் எந்த ஒரு போராட்டத்தையும் மீண்டும் முதலிலிருந்து துவங்க செய்ய முடியாது. ஏனெனில் எந்த ஒரு வரலாறும் மீண்டும் முதலிலிருந்து துவங்காது. 4ம் கட்ட ஈழப்போர் இராணுவ ரீதியில் தோல்வியில் முடிந்தாலும் சர்வதேச அரசியல் களத்தில் சில வெற்றிகளை பெற்றுள்ளது. சர்வதேச அரசியல் களத்தில் ஈழப்பிரச்சனையை முன்னெப்போதையும் விட தீவிரமாக இப்போர் கொண்டு சென்றுள்ளது. லட்சக் கணக்கில் புலம் பெயர் தமிழர்களை போராட்ட ஆற்றல்களாக இப்போர் வளர்த்துள்ளது. சர்வதேச சனநாயக உலகில் சிங்கள அரசை இனப்படுகொலை அரசாக இப்போர் பதிவு செய்ய வைத்துள்ளது. இந்நிலையில் பொதுசனவாக்கெடுப்பு, ஈழத்தமிழர்களின், உலகத் தமிழர்களின், உலக சனநாயக ஆற்றல்களின் ஒற்றைக்குரலாக இருந்தால், அதை பரிசீலித்தே ஆக வேண்டிய கட்டாயத்தை சர்வதேச சமூகத்திற்கு இப்போர் ஏற்படுத்தி உள்ளது. பொதுசனவாக்கெடுப்பு கோரிக்கை இந்நிலையில் எப்படி முதலிலிருந்து ஈழப் போராட்டத்தை துவங்கச் சொல்வதாக இருக்க முடியும்?. பகுதி -2 'பொதுவாக்கெடுப்பு, ஈழப்போராட்டத்தை காயடிக்கும் சந்தர்ப்பவாதக் கோரிக்கை' என்ற வெளியீட்டின் மீதான விவாதங்கள் பொதுசனவாக்கெடுப்பு ஈழ விடுதலைக்கான ஒரு அரசியல் பாதை எனும் வெளியீடு (http://www.nerudal.com/nerudal.9346.html) பொதுசனவாக்கெடுப்பு ஒரு உலகப் போக்கு என்றும், ஈழத்திற்கும் அது பொருந்தும் என்றும் அதைக் கோரிக்கையாக வைக்கும் போது, அது ஒரு பெரும் மக்கள் இயக்கமாக வளர முடியும் என்றும் கூறி இருந்தது. இன்றைய நிலையில், சர்வதேச அளவில் ஈழ மறுப்பு பெரும்பான்மையாகவும், ஈழ ஆதரவு சிறுபான்மையாகவும் உள்ளது. இந்த அரசியல் பிரிவுகளை பொதுசனவாக்கெடுப்பை ஏற்கும் பெரும்பான்மையாகவும் மறுக்கும் சிறுபான்மையாகவும், பொதுசனவாக்கெடுப்பு கோரிக்கையால் மாற்ற முடியும் என்று கூறி இருந்தது. • ஈழத்தை ஆதரிக்காதவர்களைக் கூட பொதுசனவாக்கெடுப்பை ஏற்க வைக்க முடியும். • சிங்கள அரசின் ஆதரவாளர்களைக் கூட நிர்பந்திக்க முடியும் அல்லது தனிமைப் படுத்த முடியும். • உரிமை தளத்திலே சிங்கள அரசையும், விடுதலைப் புலிகளையும் ஒரு சேர விமர்சனம் செய்பவர்களைக் கூட அதே உரிமைத் தளத்தில் நின்று பொதுசனவாக்கெடுப்பை ஏற்க நிர்பந்திக்க முடியும். இப்படி பலநிலை ஆற்றல்களையும், ஈழ நோக்கத்திற்கு ஆதரவாக அணி திரட்டி பெரும் மக்கள் இயக்கத்தை கட்ட பொதுசனவாக்கெடுப்பு கோரிக்கை ஒரு அரசியல் தந்திரமாக இருக்க முடியும் எனக்கூறி இருந்தது. இதுவே அவ்வெளியீட்டின் உள்ளடக்கம். தமிழ் ஈழ ஆதரவு முன்னணியினரே! உங்கள் விமர்சன வெளியீட்டில் இந்த உள்ளடக்கத்தின் மீது நேரடியாக எவ்வித விமர்சனத்தையும் நீங்கள் வைக்கவில்லை. ஆயுதப்போராட்டத்தையும், ஏகாதிபத்திய எதிர்ப்பையும் மையப்படுத்தி பொதுசனவாக்கெடுப்பு மீதான உங்கள் கடும் மறுப்பை முன் வைத்து இருக்கிறீர்கள். இவ்வெளியீட்டின் முதற் பகுதியில் உங்கள் விமர்சனம் தொடர்பான விசயங்கள் பொதுவான கேள்வி பதில் முறையில் தரப்பட்டுள்ளது. எனினும் பொதுசனவாக்கெடுப்பு குறித்த உங்களது அநேக இடதுதீவிர அணுகுமுறைகளுக்கு வினையாற்றுவதே இப்பகுதியின் நோக்கம். உங்கள் வெளியீட்டிலேயே அதிமுக்கியம் எனக்கருதி அல்லது சாரம் எனக்கருதி அல்லது இரத்தினச்சுருக்கம் எனக் கருதி பின் அட்டையில் இருபத்திகளை வெளியீட்டிருக்கிறீர்கள். எனவே நமது விவாதத்தை அதன் மீதே மையப்படுத்தி கொள்வோம். அவ்விருபத்திகளையும் அப்படியே கீழே தருகிறோம். ஈழ மக்கள் தனித் தமிழ் ஈழக் கோரிக்கையையும், ஆயுதப் போராட்டத்தையும் விட்டுவிட்டு, 'பொதுவாக்கெடுப்பு நடத்து' என அமைதியாகப் போராட வேண்டும் எனச் சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனமானது! இது ஈழத்தமிழர்களுக்கு தோல்வி மனப்பான்மையை ஊட்டி, அவர்களை மழுங்கடிக்கும் வேலையாகும். ஈழவிடுதலை போராட்டத்தை 60 ஆண்டுகளுக்குப் பின்னுக்கு இழுத்து, 'மறுபடியும் முதலிலிருந்து துவங்கச்' சொல்வதாகும். ஏகாதிபத்திய நாடுகள் தங்களின் நலன்களின் பொருட்டே தனிநாடுகளை உருவாக்குகின்றன. இப்படி அடிமை-தனிநாடான ஒரு தேசிய இனத்தை அவ்வினம் 'இனவிடுதலை' பெற்றுவிட்டதாகக் கூறுவது ஏமாற்று வேலை. மாறாக, ஒரு தேசிய இனம் 'சுயமான அரசியல், சுயமான பொருளாதாரம், சுயமான பண்பாடு' ஆகியவற்றை அமைத்துக்கொள்வது தான் இனவிடுதலை ஆகும். 1.பொதுசனவாக்கெடுப்பு-அமைதியான முறை என்று விமர்சனம் செய்கிறீர்கள். பொதுசனவாக்கெடுப்பை விமர்சிப்பதற்கு அது அமைதியான முறை என்பதும் ஒரு காரணமா? உங்கள் விமர்சனம் வினோதமானது, மனித இயல்பில் அமைதிதான் விரும்பத்தக்கது. அமைதியின்மை விரும்பத்தகாதது. உங்கள் விருப்பம் இயற்கைக்கு மாறானது. ஆயுதப்போராட்டம் என்ற சமூக அமைதியின்மை கூட நாம் விரும்பி ஏற்ற அமைதியின்மை அல்ல, நம் மீது திணிக்கப்பட்ட ஒரு அமைதியின்மை தான். 2.பொதுசனவாக்கெடுப்பு-எதிரிகளுக்கு அடங்கிப்போவது என்கிறீர்கள். ஆயுதப்போராட்டம் என்பது அடங்காதது, மற்றதெல்லாம் அடங்கிப்போவது என்று இதற்கு நீங்கள் அளவுகோல் வைத்திருக்க வேண்டும். இந்த கருத்து நமது இலக்கிற்கு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்கிறதா? இல்லை. மாறாக இது இலக்கிலிருந்து விலகி, நமக்கும் எதிரிகளுக்கும் இடையிலான தன்னை முன்னிறுத்தும் (ஈகோவிற்கான) போராட்டத்திற்கு வழிவகுக்கிறது. சரி! ஆயுதப் போராட்டத்திலும் கூட பின்வாங்கும் போர்தந்திரம் ஒன்று உள்ளதே, அதற்கும் நீங்கள் வைத்திருக்கும் பெயர் என்ன 'எதிரிக்கு அடங்கிப்போவதா?" 3.பொதுசனவாக்கெடுப்பு - ஈழப் போராட்டத்தை முதலிலிருந்து துவங்கச் சொல்வதாக உள்ளது என விமர்சனம் செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஈழத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என குறிப்பிடும் போது மீண்டும் அரசியல் போராட்டம் துவங்கி, அதை ஆயுதப்போராட்டத்தோடு இணைத்து ஈழத்தை அங்கீகரி என போராட வேண்டும் என வழிமுறை சொல்கிறீர்கள் (உங்கள் வெளியீடு பக்கம் 7 பத்தி -1) இது தானே 60 ஆண்டு காலமாக இன்று வரை ஒரு சுற்று நடந்து முடிந்திருப்பது. எனவே நீங்கள் கூறுவது தானே முதலிலிருந்து துவங்கச் சொல்வதாக உள்ளது? 4. எதிரி பலமானவன் நாம் பலவீனமானவர்கள் (பக்கம் 3 பத்தி -1) என்பது பலவீனமான சிந்தனை என்று எழுதுகிறீர்கள். பலம், பலவீனம் என்பது சிந்தனை சம்பந்தப்பட்டதல்ல. மதிப்பீடு சம்பந்தப்பட்டது. அரசியல் ரீதியாகவோ, இராணுவ ரீதியாகவோ மதிப்பிடும் போது யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் பலமாக இருக்கலாம் அல்லது பலவீனமாக இருக்கலாம். 'நாம் பலமானவர்கள்' என்பது ஒரு வரலாற்று மதிப்பீடு, அதை அரசியல் ரீதியிலும், இராணுவ ரீதியிலும் செயல்படுத்தினால் அது நம் அழிவிற்கே இட்டுச்செல்லும். 5. பொதுசனவாக்கெடுப்பு கோரிக்கையல்ல; தனி ஈழக் கோரிக்கையே இந்தியாவை அச்சப்படுத்தும் என்று கூறி இருக்கிறீர்கள் (பக்கம் 11, 12) இந்தியாவை எது அச்சப்படுத்தும் என ஈழக்கருத்தியல் களத்தில் யார் வாதிட்டார்கள்? நீங்களாகவே ஆர்வமாக முன் வந்து இந்தியாவை அச்சப்படுத்துவது எது என்றும், அதை செய்வது எப்படி என்றும் மூன்று பத்திகளில் விளக்கியிருக்கிறீர்கள். "ஆகவே நம்முடைய கடமை இந்திய அரசை அச்சுறுத்தும் வகையிலான போராட்டங்களை வளர்த்தெடுப்பதில் தான் உள்ளது". (பக்கம்-12-பத்தி-3) என முடித்திருக்கிறீர்கள். அரசை அச்சுறுத்துவதற்கான போராட்டங்கள் என்ற பார்வை, சரியான அரசியல், ஆயுதப்போராட்ட பார்வையிலிருந்து விலகி, பயங்கரவாத வழி முறைகளை நோக்கியதாகாதா? 6. பொதுசனவாக்கெடுப்பு நடத்த கோருவது அய்.நா. மீதான மாயை என்கிறீர்கள். (பக்கம் 8 பத்தி 3) நீங்கள் 'தமிழீழத்தை அங்கீகரி' என்று யாரிடம் கோரிக்கை வைக்கிறீர்கள்? அய்.நாவிடம் தானே? பொதுசனவாக்கெடுப்பை விட 'தமிழீழத்தை அங்கீகரி' என்பது அய்.நா.விற்கு மிகப் பெரிய கோரிக்கை தானே! எனவே இது பொதுசனவாக்கெடுப்பை விட ஐ.நா.மீது மிகப்பெரிய மாயையை ஏற்படுத்தாதா? 7.பொதுசனவாக்கெடுப்பை ஏற்க மறுக்கும் எங்களைப்போன்ற ஈழ ஆதரவு சக்திகளும் உண்டு என்கிறீர்கள். கொள்கையளவிலேயே பொதுசனவாக்கெடுப்பை ஏற்க மறுப்பவர்கள் இராசபட்சே,இந்திய அரசு போன்ற ஈழ எதிரிகள் தான். அவர்களது கொள்கைகளை வேறு உள்ளடக்கத்தில் வைத்திருக்கும் உங்களை தவிர்த்து பொதுசனவாக்கெடுப்பை மறுக்கும் வேறு உண்மையான ஈழ ஆதரவு சக்திகளை காட்டமுடியுமா? 8.பொதுசனவாக்கெடுப்பு முறையில் பிரிந்தாலும் ஏகாதிபத்திய நலன்கள் என்கிறீர்கள்; கொசாவா முறையில் பிரிந்தாலும் ஏகாதிபத்திய நலன்கள் என்கிறீர்கள். பிறகு எப்படித்தான் ஈழம் பிரிவது? ஈழம் தனது ஆயுத பலத்தால் உலக ஏகாதிபத்தியங்களை வென்று, இந்தியாவை வென்று, சிங்களரை வென்று பிரிய வேண்டும் என்கிறீர்களா? அதே ஆயுத பலத்தால் தனது எல்லைகளைக் காத்து ஏகாதிபத்தியங்களின் எல்லா அரசியல் பொருளாதார அழுத்தங்களையும் எதிர்த்து நின்று சுயமான அரசியல், சுயமான பொருளாதாரம், சுயமான பண்பாட்டை கட்டியமைத்து... இப்படி தமது ஆயுத பலத்தாலேயே எல்லாவற்றையும் அடைய வேண்டும் என்கிறீர்களா? 9.உங்கள் கருத்துக்களில் ஆயுதப் போராட்டத்தையே மையப்புள்ளியாக வைக்கிறீர்கள். பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளையும், கோட்பாடுகளையும், கருத்துக்களையும், அது ஆயுதப் போராட்டத்திலிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது அல்லது அருகிலிருக்கிறது என்பதையே அளவுகோல் வைத்து பார்க்கிறீர்கள். ஆனால் சமூக போராட்டத்தின் மையப்புள்ளி அரசியல் தான். ஆயுதப் போராட்டமே கூட அரசியலால் பிறந்து. அரசியலால் வளர்க்கப்பட்டு, அரசியலால் முடிவுக்கு வருவது தான். ஆயுதங்களுக்கே ஆயுதம் அரசியல் தான். 10.உங்கள் வெளியீட்டில் சுயமான அரசியல், சுயமான பொருளாதாரம், சுயமான பண்பாடு கொண்ட தனிநாடு பற்றி பேசுகிறீர்கள். உலகில் இப்படியொரு நாட்டை நீங்கள் காட்ட முடியுமா? இப்படியொரு நாடு முதலாளித்துவ நாடா? சோசலிச நாடா? முதலாளித்துவ நாடு என்றால் இது சாத்தியமில்லை. ஏனெனில், "எந்த நாட்டையும் சுரண்டமாட்டேன். என் நாட்டையும் சுரண்ட அனுமதிக்கமாட்டேன்" என சத்தியப் பிரமாணம் செய்யும் முதலாளி வர்க்கம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை. எனவே இப்படியொரு சுயமான முதலாளித்துவ நாடு என்பது வெறும் கற்பனை. இப்படி ஒரு நாடு சோலிச நாடு என்று கூறினீர்கள் என்றால், நீங்கள் ஈழ இன விடுதலையிலிருந்து ஒதுங்கி நின்று ஈழப்புரட்சியை பரிந்துரை செய்கிறீர்கள். அதையும் நேரடியாக சொல்லாமல் விமர்சனங்களுக்கு அஞ்சி, மறைமுகமாக பரிந்துரை செய்கிறீர்கள். 11. பொதுசனவாக்கெடுப்பு தனி ஈழக் கோரிக்கையை கைவிடும் அயோக்கியத்தனம் என்று வன்சொல் பயன்படுத்தியிருக்கிறீர்கள். இது உலகம் முழுவதும் ஈழப் பிரச்சனைக்கு பொதுசனவாக்கெடுப்பு கோரும் மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் அனைவரையும் குறிப்பதாகும். பொதுசனவாக்கெடுப்பு முறையில் பிரிவினை பெற்ற மக்கள், அயோக்கித்தனமான வழிமுறையை கொண்டவர்கள் என குறிப்பிடுவதாகும். வரலாற்றிற்கும், போராடும் மக்களுக்கும், சனநாயக ஆற்றல்களுக்கும் மதிப்பளிப்பதற்காகவாவது 'அயோக்கியத்தனமானது' என்ற வன்சொல்லை பயன்படுத்தியதற்கு நீங்கள் வருத்தம் தெரிவிப்பது நல்லது. 12. பொதுசனவாக்கெடுப்பு என்பது ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு, அமைதியாக போராடச் சொல்லும் அயோக்கியத்தனம் என்று எழுதி இருக்கிறீர்கள். "மேலும் இந்த சந்தர்ப்பவாதிகள் பல மாதங்களாகவே (விடுதலைப்புலிகள் ஆயுதந்தாங்கிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போதிலிருந்தே) இந்த கோரிக்கைகளை முன் வைத்து வருகிறார்கள்". (பக்கம் 4 பத்தி -1) என்றும் கூறி இருக்கிறீர்கள். இதன் மூலம் ஆயுதப் போராட்டம் நடத்தும் போது பொதுசனவாக்கெடுப்பு கோரிக்கை கூடாது என்று புது இலக்கணம் வகுத்திருக்கிறீர்கள். அயோக்கியத்தனம் என்ற உங்களின் வன்சொல்லை நேரடியாக நீங்கள் விடுதலைப்புலிகள் மீது பிரயோகிப்பது தான் நேர்மையானது. அவர்கள் தான் ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போதே பொதுசனவாக்கெடுப்பை நடத்த கோரியிருந்தவர்கள், விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் 22.03.2009ல் சர்வதேச சமூகத்திடம் பொதுசனவாக்கெடுப்பை கோரியது அனைத்து ஈழ ஆதரவு இணையதளங்களிலும் வெளிவந்துள்ளது. செய்திவெளி வந்த சில இணைய தள பக்க முகவரிகள்: http://www.nerudal.com/nerudal,2279.html http://tamilwin.com/view.php?2b36PWQ4b343bl624dbPXoReb024dlNc4d3dWrC3e0dv5Km4ce02h5gA)2ccdph7r0e ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போதே புலிகள் பொதுசனவாக்கெடுப்பை வைத்திருப்பதால் உங்கள் அயோக்கியத்தனம் எனும் விமர்சனம் பொதுசனவாக்கெடுப்பை ஆதரிக்கும் எங்களை விட அதைக்கோரிய புலிகளுக்கே கூடுதலாக பொருந்தும். விடுதலைப்புலிகள் தமது அரசியல் துறை பொறுப்பாளர் நடேசன் மூலம் இக்கோரிக்கையை ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது வைக்கவில்லை, மாறாக போர் முடியும் தருவாயில் தான் வைத்தார்கள் என்று நீங்கள் கூறினால், முடியும் தருவாயிலே புலிகளுக்கு பொதுசனவாக்கெடுப்பு முக்கியத்துவம் ஆகிவிட்டது எனும் போது இப்போதைய 4ம் கட்ட ஈழப்போர் முடிந்த தருவாயில் அம்முக்கியவத்துவம் கூடுதலாகி விட்டது என்று தானே பொருள்? ஆயுதப்போராட்டத்தில் 30 ஆண்டு கால அனுபவம் கொண்டவர்கள் புலிகள். இவ்விசயத்தில் அவர்களின் அணுகுமுறை (ஆயுதப்போராட்டத்தின் போது பொதுசனவாக்கெடுப்பு கோரியது) களத்தில் நிற்கும் ஒரு உறுதியான போராளிக் குழுவின் சூழலுக்கேற்ற அணுகுமுறை, இதை நீங்கள் கணக்கில் கொள்வதாக இருந்தால் உங்கள் வெளியீட்டின் கருத்து தவறு என சுயவிமர்சனம் ஏற்கவேண்டும். கோட்பாடு ரீதியாக நாங்கள் சரி என்று சொல்வீர்களாயின் (ஆயுதப் போராட்டத்தின் போது பொதுசனவாக்கெடுப்பு கூடாது என்ற) உங்கள் விமர்சனத்தை புலிகள் மீது முன் வைத்து உங்கள் கருத்து நேர்மையை காப்பாற்றி கொள்ள வேண்டும். தொகுப்பாக, உங்கள் வெளியீட்டில் இரண்டு முக்கிய விஷயங்கள் தெளிவின்றி உள்ளது. 1. தனிஈழப் போராட்டத்தை ஆதரிக்கிறீர்களா? இல்லையா? 2. விடுதலைப் புலிகளின் போராட்டத்தை அங்கீகரிக்கிறீர்களா? இல்லையா? ஈழப் போராட்டம் குட்டி முதலாளியவர்க்கத் தலைமையிலான போராட்டம் என்பது உங்கள் வரையறை, மேலும் நீங்கள் இன விடுதலைப் போராட்டம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமே என்ற கொள்கையில் பற்றும் உறுதியும் கொண்டவர்கள். அதேநேரம் நீங்கள் குட்டி முதலாளியவர்க்க போராட்டம் முழு ஏகாதிபத்திய உலகிற்கு எதிரான போராட்டமாவதற்கான அடிப்படை கொண்டதாக இருக்காது எனவும் கருதுபவர்கள். இதனால் தானே உங்கள் வெளியீட்டில் புலிகளுக்கு கீழ்கண்டவாறு அறிவுரையும் சொல்லியிருக்கிறீர்கள். "ஈழப்போராளிகள் கூட ஏகாதிபத்தியங்கள் மீது வைத்திருக்கும் மாயைகளை விட்டொழிக்க வேண்டும். ஏகாதிபத்திய நாடுகள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களின் எதிரியாக கறாராக வரையறை செய்து கொண்டு செயல்பட வேண்டும்." (பக்கம் 15 பத்தி -2) அப்படியானால் உங்கள் வரையறைப்படி ஏகாதிபத்திய நாடுகள் அனைத்தையும் எதிரியாக கறாராக வரையறை செய்யாத ஈழத்தையும், புலிகளையும் நீங்கள் எப்படி ஆதரிக்க முடியும்? ஈழ விடுதலை குறித்தும், புலிகள் குறித்தும் நீங்கள் சொல்ல வருவது தான் என்ன? 1. ஏகாதிபத்திய நாடுகள் அனைத்தையும் எதிரியாக கறாராக வரையறுக்காமல் சிங்கள அரசை மட்டும் எதிரியாக வரையறை செய்திருக்கும் ஈழப்போராட்டத்தை எங்களால் முழுமனதோடு ஆதரிக்க முடியவில்லை என்கிறீர்களா? 2. ஏகாதிபத்திய நாடுகள் அனைத்தையும் எதிர்ப்பதில் உறுதியற்றது குட்டி முதலாளிய வர்க்கம் என்பதால் நாங்கள் புலிகளின் குட்டி முதலாளித்துவ போராட்டத்தை அங்கீகரிக்க மறுக்கிறோம் என்கிறீர்களா? 3. பொதுசனவாக்கெடுப்பு உள்ளிட்ட புலிகளின் அரசியல், இராஜதந்திர வழிமுறைகள், ஏகாதிபத்திய உலக ஆளுமையை ஏற்றுக்கொள்ளும் வழிமுறைகள், எனவே அந்த வகையிலும் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதை தவிர்க்கிறோம் என்கிறீர்களா? 4. மொத்தத்தில் 60 ஆண்டு கால விடுதலைப் போராட்டத்தின் இலக்கை மாற்றி போராட்டத்தின் தலைமையை மாற்றி புதிய சமூக இலக்கு, புதிய வர்க்க தலைமையை எதிர்பார்க்கிறீர்களா? இவற்றையெல்லாம் உங்களுக்கு நீங்களே முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். எங்களைப் பொறுத்தவரை நாங்கள் ஈழவிடுதலையையும், அதற்கான புலிகளின் போராட்டத்தையும் தெளிவாக, உறுதியாக ஆதரிப்பவர்கள். "விருப்பம் போல் வளைப்பதற்கு வரலாற்றுச் சக்கரம் வண்டிச்சக்கரம் இல்லை" இறுதியாக, நீங்கள் விமர்சித்திருக்கும் வெளியீடு நீங்கள் குறிப்பிட்டதுபோல் முத்துக்குமார் மக்கள் எழுச்சிப் பாசறை, மற்றும் புதிய போராளிகளுடையதல்ல. நாங்கள் அனைவரும் பொதுசனவாக்கெடுப்பு என்ற நிலைப்பாட்டிற்கான நட்பு இயக்கங்கள். அவர்களின் வெளியீடாக கருதியே நீங்கள் விமர்சனங்களில் கடும் சொற்களை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என கருதுகிறோம். இவ்வெளியீட்டையும் அவர்களுடையதாக எதிர்கொள்ளாமல் ஈழ விசயத்தில் உங்கள் இடது தீவிர அணுகுமுறை மீதான எங்கள் பிரதிபலிப்புகளை சீர்தூக்கி பார்க்க வேண்டும் என்பது எமது விருப்பம். எமது வெளியீட்டை விமர்சித்து பொதுசனவாக்கெடுப்பு குறித்து விவாதக்களத்தை ஏற்படுத்தி தந்தமைக்கு, பொதுசனவாக்கெடுப்பு கோரும் அனைவரின் சார்பாகவும் நன்றி.