Friday 29 January 2010

"3G" நெட்வொர்க்கில் புகுந்து விளையாடுங்கள்...

“3G” நெட்வொர்க்கில் புகுந்து விளையாடுங்கள், என்கிறார்களே - 3G என்றால் என்னவென்று பார்ப்போம். கம்ப்யூட்டரின் வளர்ச்சியை பல்வேறு தலைமுறைகளாகப் பிரித்தது போல, தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளையும் அவ்வாறு பிரிக்க முடியும். குறிப்பாக கவனம் செலுத்த வேண்டியது, ஒரே ஒரு தொலைத் தொடர்பு அம்சம் மட்டுமே - வயர்லெஸ் டெலிஃபோன் - பயனாளர் பாஷையில் ‘செல்ஃபோன்’. உங்கள் செல்ஃபோன் வேலை செய்வது எப்படி? செல்ஃபோன், உங்கள் அருகாமையில் உள்ள “கம்யூனிகேஷன் டவர்” உடன் தொடர்பு கொண்ட பிறகு, அந்த “டவர்” உங்களை உலக நெட்வொர்க்கில் இணைத்து விடுகின்றது. டவரின் உயரத்துக்கேற்ப அது தொடர்பு ஏற்படுத்தக் கூடிய பரப்பளவு அதிகரிக்கும் . சிறு வயதில், டி.வி.யின் ஆண்டெனாவை தந்தை வீட்டின் மொட்டை மாடியில் வைத்து, டி.வி. தெரிகின்றதா என்று பார்க்கச் சொல்வாரே, அது போலத்தான்! அத்தனை டவர்களையும் ஒரு “நெட்வொர்க்” இணைத்து வைக்கின்றது. அப்படி இணைக்கும் நெட்வொர்க்குகளைப் பற்றித்தான் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கின்றோம். GSM மற்றும் CDMA என இரு தொழில்நுட்பங்கள் செல்ஃபோனில் உண்டு. ரிலையன்ஸ், டாட்டா இண்டிகாம் போன்ற நிறுவனங்கள் CDMA வசதியைத் தருகின்றன. இதர நிறுவனங்கள், எடுத்துக்காட்டாக, ஏர்டெல், வொடாஃபோன் போன்றவை GSM உபயோகப்படுத்துகின்றனர். இவை இரண்டுமே 2G நெட்வொர்க்கின் வகைகள். ஓ! அப்படியென்றால் 2G என்ற ஒன்றும் உண்டா! ஆம், இத்தனை நாட்களாக நாம் (ஏன், இன்னும் கூடப் பெரும்பாலானவர்கள்) உபயோகிப்பது 2G நெட்வொர்க்குகளைத்தான். அதற்கு முன்னால், 1Gயும் உண்டு. இரண்டாம் உலகப்போரின் சமயம், ரேடியோ ஃபோன்களின் மூலம் பேசிக் கொண்டார்களே, அது 0G நெட்வொர்க் ஆகும். “தொலைதூரம்” என்று சொல்ல முடியாவிட்டாலும், அதுவும் வயர்லெஸ்தானே! 1G நெட்வொர்க்குகளின் மூலம்தான் முதன் முதலில் உலகில் இருக்கும் அனைத்து செல்ஃபோன்களையும் இணைக்க முடிந்தது. இது நடந்தது கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால். இந்த நெட்வொர்க்குகள் உபயோகித்தது அனலாக் சிக்னல்களை. (அனலாக் என்றால் - நேரத்துடன் தொடர்ச்சியாக மாறும் சிக்னல்கள்). 1991ல் முதன் முறையாக அனலாகுக்கு டாட்டா சொல்லிவிட்டு, டிஜிடலினுள் செல்ஃபோன் குதித்தது. டிஜிடல் என்றால்? தொடர்ச்சியாக மாறாமல், விட்டு விட்டு மாறும் சிக்னல்கள். இதற்கு மேல் விளக்கம் தேவை என்றால், உங்களுக்குத் தெரிந்த எலக்ட்ரிகல்/எலெக்ட்ரானிக்ஸ் பயிலும் மாணவர்களை (ஏன், ப்ளஸ்-டூ மாணவர்கள் கூடப் போதும்!) கேளுங்கள், அழகாக படம் வரைந்து விளக்கம் தருவார்கள். அது சரி, இந்த 2Gயால் என்ன லாபம்? கண்கூடாகத் தெரியவில்லையா - அதன் பிறகுதான் பாமரனும் செல்ஃபோன் உபயோகிக்க ஆரம்பித்தான். ஸ்டோரேஜ் என்று சொல்லப்படும் “செய்திகளைச் சேர்த்து வைத்தல்” மிகவும் சுலபமானது. (ஒரே அலைவரிசையில் இன்னும் நிறைய கால்களை அனுமதிக்க முடியும்!) கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது 3G வந்திருக்கின்றது! புதிதாக என்ன சாதித்திருக்கின்றார்கள்? 2Gயில் என்ன குறை கண்டார்கள்?! முன்பெல்லாம் செல்ஃபோன்களைப் பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தோம். GSM போன்ற 2G நெட்வொர்க்குகளுக்கு இது சர்வ சாதாரணம். அவைகளின் முக்கிய வேலையும் அதுதான். அவ்வப்பொழுது, இணையதள வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால், உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்துக்கும், அதன் வேகத்துக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. (“இல்லையே, என் ஃபோன் வேகமா இருக்கே” என்று நீங்கள் சொன்னால், பதில் இதுதான் “சின்னச் சின்ன இணையப் பக்கங்களை நீங்கள் பார்ப்பதால்தான். ஒரு நூறு எம்.பி ஃபைலை தரவிறக்க முயற்சி செய்யுங்கள், உங்கள் ஃபோன் என்ன சொல்கிறதென்று பார்ப்போம்!) அது மட்டும் இல்லை, இணைய வசதிகளை 2G தருவதற்கு, நீங்கள் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். காரில் பறந்து கொண்டே இணையத்தின் மூலம் சினிமா பார்க்க முடியாது. ஏன், ஒரு பக்கத்தைத் தரவிறக்குவதே கடினம்தான். ரயில்களில் செல்லும்பொழுது செல்ஃபோன் வேலை செய்யாமல் படுத்துமல்லவா, அதைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்! போதாத குறைக்கு, இப்பொழுது காலம் மாறிவிட்டது, செல்ஃபோன் பேசுவதற்கு மட்டும் பயன்படும் பொருள் அல்ல. நமக்கு செல்ஃபோனிலேயே எல்லாம் வேண்டும். என் மொத்தப் பாடல் தொகுப்பு, பத்துப் பதினைந்து திரைப்படங்கள், ஈ-மெயில், இணையம், எல்லாமும் செல்ஃபோனிலேயே வேண்டும். 2Gயால் இது முடியாது - அதனால்தான் வந்தது 3G. 3G அனைத்துக்கும் பதில் வைத்திருக்கின்றது. சரி, என் போன்ற பொறியாளர்களுக்காக சில கணக்குகள் - 2G தரும் வேகம் கிட்டத்தட்ட பத்து கிலோபைட், ஒரு வினாடிக்கு. அந்த வேகம் ஒரே இடத்தில் இருந்தால் மட்டுமே. நாம் நகர்ந்து கொண்டே இருந்தோமானால் இதுவும் வராது. 3G எவ்வளவு தருகின்றது? கிட்டத்தட்ட இரண்டாயிரம் கிலோபைட்ஸ், ஒரு நொடிக்கு - ஒரே இடத்தில் இருந்தால்! அதி வேகத்தில் பறந்துகொண்டே 3G நெட்வொர்க்கை நோண்டினால், கிட்டத்தட்ட நொடிக்கு முன்னூறு கிலோபைட்ஸ்!! இனி ட்ரெய்னில் போய்க்கொண்டே, செல்ஃபோனைக் கையில் வைத்த படி உலகைக் கை வசப்படுத்த முடியும். “லேட் ஆகி விட்டது” என்று அவசரக் கடிதம் எழுதலாம். செல்ஃபோன் பில் மட்டும் அல்லாது, எல்லா பில்களையும் உள்ளங்கையிலேயே கட்டி விடலாம். பேங் அக்கவுண்ட்களைப் பராமரிக்கலாம். ஊர் சுற்றிக்கொண்டு இருக்கும்பொழுது தொலைந்து போனால், கூகில் மேப்ஸ் உதவியுடன் எங்கிருக்கின்றோம் என அறிந்து கொள்ளலாம். இவ்வளவு ஏன், சினிமா பார்க்கலாம், பாட்டு கேட்கலாம், கதை படிக்கலாம், அரட்டை அடிக்கலாம் (வீடியோ உடன் கூடிய அரட்டை) - எல்லாம் உள்ளங்கையிலேயே! ஒரே வரியில் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், இதற்கு முன் இருந்த செல்ஃபோன் நெட்வொர்க்களையும், ப்ராட்பேண்ட் தர இணையதள நெட்வொர்க்குகளையும் 3G ஒன்றாக இணைத்துவிட்டது. நீங்கள் நினைக்கலாம் - நான் இந்தக் கட்டுரையை 3G நெட்வொர்க் ஃபோனில்தான் தட்டச்சு செய்கின்றேன் என - இல்லை! முக்கியமான காரணம், இன்னும் 3G நெட்வொர்க் ஃபோன்கள் சற்று விலை அதிகமாகவே விற்கின்றன. சரவணா ஸ்டோர்ஸில் ஆயிரம் ரூபாய்க்கெல்லாம் கிடைக்காது. இதில் நிறைய லைசென்ஸ் தகராறெல்லாம் வேறு உள்ளது. எல்லாப் பிரச்சினைகளையும் மீறி ஒரு வழியாக நம் நாட்டில் 3G ஃபோன்கள் வந்துவிட்டன. வரவேற்போம்! கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்கள் போராடி இது எல்லா நாடுகளிலும் கிடைக்கும்படி செய்திருக்கின்றார்கள். முன்பு சொல்லியிருந்தது போல, ஒவ்வொரு நாட்டிற்கும் தனியாக லைஸென்ஸ் பெற வேண்டும். சரி, ஏழெட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தது இப்பொழுது பிரபலமாகி விட்டது. 4G நெட்வொர்க்குகளைப் பற்றிய ஆராய்ச்சி தீவிரமாக நடக்க ஆரம்பித்து விட்டது. ஒரே வரியில் அதைப் பற்றிச் சொல்கிறேன்! ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. முகவரி இருப்பதை நாம் அறிவோம்! அது போல, ஒவ்வொரு செல்ஃபோனுக்கும் ஒரு ஐ.பி. முகவரி இருந்தால் எப்படி இருக்கும்!! சிந்தனை செய்தால், எனக்கு தலை எல்லாம் சுற்றுகிறது! இன்னும் நான்கைந்து வருடங்களில் 4G பற்றிய விரிவான கட்டுரையை நீங்கள் எதிர்பார்க்கலாம்

Thursday 21 January 2010

ஆயிரத்தில் ஒருவன்: ஈழப் போராட்டத்தின் நுணுக்கமான பதிவு

இன்று அண்மையில் வந்த, செல்வராகவன் இயக்கத்தில் உருவான அற்புதமான படைப்பான 'ஆயிரத்தில் ஒருவன்' எனும் புதிய திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்த்தேன். வழக்கமான சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி, மிக மிக வேறுபட்ட அனுபவத்தையும், நுண்ணுணர்வுகளால் புரிந்து கொள்ளப்பட்டு எழுத்தால் பகிரப்பட முடியாத உணர்வுகளையும் இந்தப் படம் எனக்கு தந்தது. அத்துடன் படத்தின் மையக்கருத்தும், படத்தின் முடிவும் முள்ளிவாய்க்காலுடன் உறைந்து போயிருக்கும் ஈழப்போராட்டத்தைப் பற்றிய நுணுக்கமான ஒரு பதிவாகவும், அதன் எதிர்காலப் போக்குப் பற்றிய நூலிழை எதிர்வு கூறலாகவும் அமைந்து இருக்கின்றது இந்தக் குறிப்பில் ஆயிரத்தில் ஒருவனின் கதையை எழுதக்கூடாது என்று உத்தேசித்து ஆரம்பிக்கின்றேன். 1. போரும் அமைதியும் எனும் ரொல்ஸ்ரோயின் காவியத்தின் மையக்கருத்து 'போர் என்றும் ஓய்வதில்லை' என்றே சொல்வேன். யுத்தம் என்பது இன்றோ நேற்றோ தொடங்குவதில்லை. அதன் காரணங்கள் நீண்ட வரலாறு கொண்டவை. யுத்தம் ஒன்று சமூகங்களுக்கோ அல்லது நாடுகளுக்கோ இடையில் ஆரம்பித்தால் அதற்கான காரணங்கள் ஒரு நீண்ட வரலாற்று பின்னணியை கொண்டு இருக்கும். அதே போல் எந்த யுத்தமும் முடிவடைவதும் இல்லை. அது ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு தலைமுறைகளால் வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு யுத்தம் இன்று தவிர்க்கப் பட்டால் அது நாளையோ அல்லது அடுத்த நூற்றாண்டிலோ அல்லது ஒரு ஆயிரம் வருடத்தின் பின்னோ இடம் பெறவே செய்யும். ஆனால் யுத்தம் என்பது மானுட வரலாற்றினை முன்னோக்கவும், இழுத்துக் கட்டி வைத்திருக்கவும் என்று எப்பவும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. போரற்ற வாழ்வு எது? போரற்ற தமிழன் வரலாறு தான் எது? 2. தஞ்சையில் பாண்டிய மன்னனால் சோழ பேரரசு அழிக்கப்படுகின்றது. அழிக்கப்பட்ட பேரரசில் இருந்து தப்பிக் கொண்ட இளவரசனும் இன்னும் சிலரும் பாண்டிய பேரரசின் சின்னமான சிலையொன்றுடன் தப்பி, தேசங்கள் கடந்து யாருமற்ற தீவொன்றில் மறைந்து விடுகின்றனர். தான் தன் பரம்பரை எல்லாம் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்த மண்ணை விட்டு அகல்கின்றான் சோழ பேரரசன். அந்தச இளவரசனையும், சின்னத்தையும் தேடி பாண்டிய பேரரசின் பரம்பரை பல நூற்றாண்டுகள் கடந்தும் வெறி கொண்டு அலைகின்றது. நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய அவையெங்கே வில்லாடிய களமெங்கே கல்லாடிய சிலையெங்கே தாய் தின்ற மண்ணே *************** அடிமையாக வாழ்ந்த தமிழன், ஈழம் எனும் சிறு பகுதியில் மானமுடன் வாழ ஆசைப்படுகின்றான். வரலாறு சப்பித்துப்பிய எச்சமாய் போனவன் தனக்கென்ற தேசம் பற்றி கனவு கொண்டும், என்றாவது ஒரு நாள் பெரும் தேசம் புகுவான் என்றும், தன் எல்லா சக்தியும் கொண்டு சிறு தேசம் கட்டி, உயிரை அடை காக்கின்றான். எதிரியால் அபகரிக்கப்பட்ட நிலம் எங்கும் மீண்டும் தன் புலிக்கொடி பறக்கும் என்று காத்திருக்கின்றான் ***************** பாண்டிய பரம்பரை நெஞ்சில் வஞ்சினம் கொண்டு சோழனை தேடுகின்றது. தப்பிய இளவரசனின் பரம்பரையால் என்றாவது தன் பேரரசிற்கு ஆபத்து என்று வெறி கொண்டு அலைகின்றன. ஆண்டுகள் மாறுகின்றன, களம் மாறுகின்றது, வரலாறும் மாறுகின்றது. ஆனால் தாய் நிலம் இழந்தவனும், அபகரித்தவனும் மாறும் களம் தமக்கானதாய் கனிய காத்திருக்கின்றன. 800 ஆண்டுகள் கழிந்தும் போர் மட்டும் ஓயாமால் வெவ்வேறு களங்களினூடும், தளங்களினூடும் பயணம் செய்கின்றது. நிலம் இழந்தவனும், தன் இன மானச் சின்னத்தை எதிரியிடம் இழந்தனும் வெறி கொண்டு தம் பக்க நியாயங்களுக்காக காத்திருக்கின்றன "தமிழர் காணும் துயரம் கண்டு தலையை சுற்றும் கோளே.. அழாதே என்றோ ஒரு நாள் விடியும் என்றே இரவை சுமக்கும் நாளே.. அழாதே நூற்றாண்டுகளின் துருவை தாங்கி உறையில் தூங்கும் வாளே.. அழாதே எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ என்னோடழும் யாழே.. அழாதே" சோழ பரம்பரை காத்திருக்கின்றனர்... தாங்கமுடியா துயர்களை தாங்கி விடிவு ஒன்றுக்காய் மட்டுமே ஒரு சிறு நிலமதில் உயிர் சுமக்கின்றனர். அந்த நிலத்தின் சட்டங்கள் வேறு, நியாயாதிக்கங்கள் வேறு, பண்பாடு வேறு. ஆனால் அனைத்தும் மீண்டும் தம் சுதந்திர வாழ்வு பற்றிய ஒற்றைப் புள்ளியில் சுழல்கின்றன. பாண்டியனின் புதிய பரம்பரையின் ஒரு வித்து சோழனின் இடம் பற்றி அறிகின்றது, திட்டமிடுகின்றது, தேடுகின்றது, தேடி இறுதியில் பல பொறிகள் (Traps)கடந்து அவனை வீழ்த்த முனைகின்றது, 800 வருடங்களாக காத்திருந்த வெறியும், நிலம் மீள காத்திருந்த கனவும் சந்திக்கின்றன. அனைத்தையும் இழந்த சோழ பரம்பரை தனக்கிருக்கும் குறைந்த வளத்துடன் போரிடுகின்றது. ஈற்றில், ஆக்கிரம்மிப்பு வெறியும், பலமும் கொண்ட பாண்டிய பரம்பரை நவீன ஆயுதங்களின் துணையுடன் மீண்டும் சோழனை வீழ்த்துகின்றது. எவரின் உதவியும் அற்று (அல்லது ஒதுக்கி) தன் சொந்த கால்களின் பலத்துடன் மட்டுமே நின்ற சோழப்பரம்பரை மீண்டும் தோற்கின்றது. தலைமை தாங்கிய அரசன் படுகொலை செய்யப்படுகின்றான். பலர் தம் குரல்வளையை அறுத்து தற்கொலை செய்கின்றனர். பலர் சிறை பிடிக்கப்படுகின்றனர். பெண்கள் வல்லுறவுக்குள்ளாகின்றனர். அவர்களை காக்க முனையும் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர் மீண்டும் அந்தப் சோழ பரம்பரையில் ஒருவனும், அவனுடன் கூடவே சிலரும் தப்பிக்கின்றனர்.. மீண்டும் சோழனின் பயணம் தொடர்கின்றது..தான் இழந்த நிலம் மீட்கும் வரை ஓயாது என்று அந்தப் பயணம் தொடர்கின்றது. தப்பிய அவனைத் தேடி பாண்டிய வம்சத்தின் துரத்துதலும் தொடர்கின்றது ************** முள்ளிவாய்க்காலில் இந்தத் தலைமுறையின் விடுதலை வேட்கை பலம் கொண்டவர்களால் அடக்கபடுகின்றது. ஆனால் போர் மட்டும் ஓயவில்லை. இன்னொரு களம், இன்னொரு காலம் நோக்கி நகர்கின்றது; தமிழர் தன் சுதந்திரத்தினை அடையும் வரையும் எதிரி தன் இருப்பை சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவும் வரைக்கும் இந்தப் போர் ஓயப்போவதில்லை **************** 3 இப்படி ஒரு சினிமா தமிழில் இது வரைக்கும் வரவில்லை என்றே சொல்வேன். முன் பாதி முழுதும் மாயாஜாலம் நிறைந்த (தமிழர்களின் மாயாவாதம்) காட்சிகள், பின் பாதி மானுடம் முழுதும் நிரம்பி இருக்கும் உயிர் வாழ்தலுக்கான போட்டி. போர் என்பது மனித வாழ்வில் பிழைத்து இருக்க (Survival) தவிர்க்க முடியாதது. 99% அடிமை உணர்வில் ஆட்கொண்டு பணிந்து போனாலும் மிச்சம் இருக்கும் 1% சுதந்திரம் பற்றி தன்னுணர்வு கொண்டு தன் சமூக விடுதலைக்காக தொடர்ந்து போர் செய்ய முனையும் என்பதை சினிமாவில், அதுவும் தமிழ் சினிமாவில் பதிவு செய்த திரைப்படம் இது. சக காலத்தில் நிகழ்ந்த பெரும் போராட்டம் ஒன்றின் உறைநிலையை (அல்லது தற்காலிக முடிவை) கருப்பொருளாக்கி சினிமா தந்த செல்வராகவன் பாராட்டுக்குரியவராகின்றார். ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் Perfection என்பது அதிசயிக்கத்தக்கது. எல்லாக் காட்சிகளிலும் Frame இற்குள் அகப்பட்ட அனைத்தும் முழுமையாக இருக்கின்றது. சின்ன சின்ன விடயங்களில் கூட அதிக பட்ச அக்கறை காட்டியிருப்பதும் உணரக்கூடியதாக இருக்கின்றது 4 ஆனால் இந்தத் திரைப்படம் எத்தனை பேரைச் சேரும் என்பது கவலைக்குரிய கேள்வி. நான் இன்று பார்க்கும் போது திரையரங்கு எங்கும் சலிப்பான குரல்களையும், 'எப்படா படம் முடியும்' என்ற சில குரல்களையும் கேட்க முடிந்தது. வேட்டைக்காரன் போன்ற நாலாம்தர சினிமாக்களை வரவேற்கும் ஒரு சமூகத்தில் இத்தகைய படங்கள் வெற்றி பெற்றால், அதுவே பெரும் சாதனை ========================================================= பி.கு 1: இதனை இந்தப் பகுதியில் இணைத்தது அனைவரும் (ஆகக் குறைந்தது ஈழத் தமிழர்கள் ) கண்டிப்பாக பார்க்க தூண்ட வேண்டும் என்பதற்காகவே. பி.கு 2: திரைப் படத்தின் இறுதியில், கொல்லப்பட்ட தலைவனின் உடலை மிச்சமிருப்பவர்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அடக்கம் செய்வதை காணும் போது, நெஞ்செங்கும் ஒரு குற்ற உணர்வு வந்து அடைக்கின்றது

Saturday 16 January 2010

கூகுள் -சீன அரசு மோதல் உச்சகட்டம்

மனித உரிமைகளை தட்டிக் கேட்டு வெப்சைட்டில் வரும் கருத்துக்களை தாங்கிக்கொள்ள முடியாத சீனா, கூகுள் வெப்சைட்டை தணிக்கை செய்ய ஆரம்பித்துள்ளது. இதனால், சீன கம்யூனிச அரசுக்கும், கூகுளுக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. எந்த ஒரு தகவலையும் தெரிந்து கொள்ள இன்டர்நெட் மூலம் வழி செய்வது வெப்சைட்கள். இவைகளை தேடுவதற்காக அமைக்கப் பட்டது தான் யாகூ, கூகுள் போன்ற தேடுதல் சாதனங்கள் (சர்ச் இன்ஜின்). சீன கம்யூனிச ஆதிக்கத்தின் மனித உரிமை மீறிய செயல் களை, கூகுள் வெப்சைட்கள் மூலம் சீனாவைச் சேர்ந்த பலரும் விமர்சித்து வருகின்றனர். இது போதாதென்று, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்த சீனர்கள், இன்டர்நெட்டை பயன்படுத்தி, கூகுள் வழியாக பல வெப்சைட்களிலும், சீனாவில் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து பகிரங்கமாக பல தகவல்களை வெளியிட்டு வருவது, சீன கம்யூனிச அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வந்தது. இதனால், சீன கம்யூனிச அரசு இரண்டு வழிகளில் கூகுள் வெப்சைட்களை கட்டுப்படுத்த திட்டமிட்டது. ஒரு பக்கம், கூகுள் வெப்சைட்களை "அபகரித்து' அதில் உள்ள தகவல்களை தனக்கு சாதகமாக மாற்றி வெளியிட ஆரம்பித்தது. இப்படி பல வெப்சைட்களைத் "திருடி' வந்தது. இது பற்றி கூகுள் நிறுவனம் கேட்ட போது, தனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. உரிய விசாரணை செய்வதாக மட்டும் கூறியது. ஆனால், தொடர்ந்து, சீனாவில் இருந்து தான் கூகுளில் உள்ள வெப்சைட்கள் "திருடப்படுவது' அதிகரித்தது. அதிலும் குறிப்பாக, சீன மனித உரிமை பற்றி சொல்லும் வெப்சைட்கள் மட்டும் இப்படி "திருடப்பட்டு' சீன அரசுக்கு சாதகமாக வெளியிடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல, மனித உரிமை மீறலை கிளப்புவோரின், "இ - மெயில்'களும் மாயமாகி விடுகின்றன. இப்படி ஒரு பக்கம் தன் "வேலை'யைக் காட்டிய சீன அரசு, தணிக்கை அதிரடியையும் இன்னொரு பக்கம் ஆரம்பித்து விட்டது; "கூகுள் வெப்சைட்களில் சீனாவின் இறையாண்மைக்கு எதிராக தகவல்கள் வருகின்றன; பலான வெப்சைட்கள் அதிகமாக வருகின்றன; அதனால், தணிக்கை செய்து தான் சீன மக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்க முடியும்' என்று தணிக்கையை சீனா நியாயப்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் முற்றியதை அடுத்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனை கூகுள் நிறுவன உயர் அதிகாரிகள் சந்தித்து முறையிட்டுள்ளனர். "கூகுள் தேடுதல் சாதனம் என்பது, உலகில் உள்ள மக்கள் சுதந்திரமாக தகவல்களை தெரிந்து கொள்ளவும், எண்ணங் களை பரிமாறிக் கொள்ளவும் ஏற்படுத்தப்பட்டது. மக்களுக்கு தகவல்களை அளிப்பது தான் இணைய தளங்களின் பொறுப்பு. அதன் நம்பகத்தன்மை பற்றி சந்தேகிப்பது சரியல்ல; சீனா தன் கெடுபிடியை நீக்கி, கூகுள் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்' என்று ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார். கூகுள் நிறுவனம் சார்பில் உயர் அதிகாரி டேவிட் ட்ரம்மண்ட் கூறுகையில், "கூகுள் வெப்சைட்கள் அடிக்கடி "திருடு' போவதற்கு, சீனாவில் உள்ள சில கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தான் காரணம். திட்டமிட்டு இப்படி வெப்சைட்களை "திருடி' தகவல்களை திரிக்கின்றனர்; இப்படி செய்வதால், ரகசியமான தகவல்கள் திருடப்படுவதும், கடத்தப்படுவதும் எளிதாகி விடும். இதை கூகுள் அனுமதிக்க விரும்பாது. சீன அரசு இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதுபோல தணிக்கையையும் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், சீனாவில் கூகுள் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டிய கட்டாயம் வரும்' என்று தெரிவித்தார். கூகுள் தேடுதல் சாதனத்தை அதிகம் பயன்படுத்துவோரில் சீன மக்கள் தான் அதிகம். சீனாவின் கெடுபிடி நிறுத்தப்படாவிட்டால், விரைவில், சீன மக்களுக்கு கூகுள் மூலமான வெப்சைட்கள் கிடைக்காது; அதனால், பெரிய அளவில் சீன தொழில், வர்த்தகர்கள் முதல் சாதா மக்கள் வரை பாதிக்கப்படுவர். சீன அரசுக்கும், கூகுளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில், கூகுள் பக்கம் அமெரிக்கா உள்ளது. இதனால், சீனாவின் கோபம் அதிகரிக்க வாய்ப்புண்டு. கூகுள் தன் செயல்பாட்டை நிறுத்துவதற்கு முதல் கட்டமாக, பீஜிங்கில் உள்ள தன் அலுவலகத்தை மூட திட்டமிட்டுள்ளது