Wednesday 16 December 2009

பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம்

சாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது. இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக விமான நிலையம் வரை காராக செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும்.விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும்.இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன. வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, "பார்க்கிங்' ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்து செல்லும் போது மோசமான வானிலை, புயல் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட்டால், குறைந்த கால இடைவெளியில் சாலையில் இறங்கி விடலாம்.சாலையில் கார் சென்று கொண்டிருக்கும் போது, தேவைப்பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும். அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார், மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை, 95 லட்ச ரூபாய். வரும் 2011ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

400 ரன்னுக்கு மேல் எடுத்தும் தோல்வியை நெருங்கியதால் அதிக பதட்டம் அடைந்தேன் : டோனி

முதல் 35 ஓவர் வரை இலங்கை அணியே ஆதிக்கம் செலுத்தியது. விக்கெட் விழுந்தபோது அதை சரியாக பயன்படுத்திக் கொண்டோம். கடைசி நேரத்தில் ஜாகீர்கான் நெக்ரா சிறப்பாக பந்து வீசினார்கள். இந்தப் போட்டியில் நான் அதிகமாக பதட்டம் அடைந்தேன். 400 ரன்னுக்கு மேல் எடுத்து கிட்டத்தட்ட தோல்வியை நெருங்கியதால் மிகவும் பதட்டம் ஆனேன். இந்த நேரத்தில் அமைதியாக பணியாற்றுவது என்பது கடினமே. இவ்வாறு டோனி கூறினார். இந்திய வீரர்களின் பீல்டிங் கவலையளிக்கும் வகையில் உள்ளது. 3 கேட்சுகளை தவற விட்டனர். தரங்கா 10 ரன்னில் இருந்த போது கோலியும், சங்ககரா 56 ரன்னில் இருந்த போது ஹர்பஜனும், தில்சான் 114 ரன்னில் இருந்த போது காம்பீரும் கேட்சை தவற விட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் பீல்டிங் சிறப்பாக இருந்தது. தெண்டுல்கர், ரெய்னாவின் திறமையான பீல்டிங்கினால் 49-வது ஓவரில் இலங்கை வீரர்கள் கண்டாம்பி, சமரவீரா ரன் அவுட் ஆனார்கள் இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. 2-வது போட்டி வருகிற 18-ந் தேதி நாக்பூரில் நடக்கிறது.

குவான்டனாமோ கைதிகளை அடைக்க சிறைக்கூடத்தை விலைக்கு வாங்கியது ஒபாமா அரசு

கியூபாவின் குவான்டனாமோ சிறையில் இருந்து அமெரிக்கா கொண்டு வரப்பட்ட கைதிகளை அடைக்க இல்லினாய்ஸ் மாகாணத்தில் புதிய சிறைக்கூடம் ஒன்றை ஒபாமா அரசு விலைக்கு வாங்குகிறது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் உட்ஸ், “இல்லினாய்ஸில் உள்ள தாம்ஸன் சிறைக் கூடத்தை விலைக்கு வாங்குவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க சிறைக் கழகம் மேற்கொள்ள வேண்டும் என அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்” என்றார். குவான்டனாமோ சிறையில் இருக்கும் எத்தனை கைதிகள் இல்லினாய்ஸ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற விவரத்தை வெள்ளை மாளிகை வெளியிடவில்லை என்ற போதிலும், புதிய சிறைக் கூடத்தில் 100 கைதிகள் இருப்பார்கள் என இல்லினாய்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் டர்பின் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குவான்டனாமோ சிறையை நிர்வகித்த அதிகாரிகளே, இல்லினாய்ஸ் சிறைக்கூடத்தையும் நிர்வகிப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.