Saturday 13 February 2010

கூகுள் பஸ் (Buzz) !

கடந்த இரண்டு நாட்களாகப் பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விசயம் தான் கூகுள் பஸ் (Buzz)! ஜிமெயில் முகப்புப் பக்கத்திற்கு வரும்பொழுதே புதிதாக ஒரு சுட்டி வந்துள்ளது "கூகுள் பஸ்ஸைப் பிடியுங்கள்" என்று. ஜி-மெயில் பயனர் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் கிடைத்திருக்கும் இந்த வசதியை, "ஆஹா!! அருமையான ஒரு சேவை" என்று சிலரும், "எதற்காக வலிந்து நம் மீது ஒரு புது சேவையைப் புகுத்துகிறது கூகுள்!" என்று சிலரும் கேள்வியை எழுப்பியுள்ளனர். சரி எதற்காக இந்த கூகுள் பஸ்? இணைய உலகில் தேடுதல், மின்னஞ்சல், பேச்சாடல், செய்திகள், புகைப்படம் பகிர்தல் என்று பரவலாக அனைத்து சேவைகளையும் வைத்திருக்கும் கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற உடனுக்குடன் தன் நிலையைப் புதுப்பிக்கும் "நிலை புதுப்பிப்பான்" (Status Updater ) சேவையை மட்டும் கோட்டை விட்டுவிட்டது. இந்த ஓட்டையை நிரப்புவதற்காக வந்திருக்கும் சேவை தான் பஸ்!! இந்த நிலை புதுப்பிப்பான் மூலம் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நிறுவனங்களுக்கு என்ன பயன்? லேட்டானாலும் லேட்டஸ்டாக எதற்காக கூகுளும் இந்த சேவையில் குதித்துள்ளது? எல்லாம் பாய்ஸ் படத்தில் நம்ம நடிகர் செந்தில் சொல்வது போல "இன்பர்மேசன் இஸ் வெல்த்" என்பதற்கே!! ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சேவையைப் பயன்படுத்தும் பயனர்கள் என்ன மாதிரியான விசயங்களை விவாதிக்கிறார்கள், எந்த ஊரில் எந்த விசயம் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டது, எந்த வயதினர் எதை விரும்புகிறார்கள் போன்ற தகவல்கள் தான் இன்று "தங்க முட்டையிடம் வாத்துகள்" எனலாம். வர்த்தக ஆய்வு (Market Research ) நிறுவனங்கள் முதல் செய்தித் தகவல், தொழிற்துறை என அனைத்து துறையினர் இது போன்ற தகவல்களை மிகவும் பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள். உதாரணத்திற்கு, ஆப்பிள் நிறுவனம் ஐ-பேட் (i-pad) என்ற பொருளை சந்தையில் அறிமுகப்படுத்திய பொழுது அதைப் பற்றி எத்தனை சதவிதத்தினர் விவாதித்தனர்? எந்த வயதினரை அதிகம் ஈர்த்துள்ளது. "ஐ-பேட்"ன் போட்டி நிறுவனமான "கிண்டில்"(Kindle) வெளியான பொழுது எந்த அளவு விவாதம் நடந்தது போன்ற தகவல்களை வைத்து, நிறுவனங்கள் அடுத்த கட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக டிவிட்டரில் விவாதம் செய்த விசயங்களில் கூகுள் பஸ், காதலர் தினம், ஷாருக்கானின் MNIK போன்ற விசயங்கள் முன்னனி உள்ளன. இது போன்ற தகவல்கள் வருங்காலத்தில் மதிப்பு மிக்கவை. இந்த வருமானத்தை இழக்க விரும்பாத கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் சேவை தான் பஸ்!! அது மட்டுமல்ல? இதனுடைய மற்றுமொரு பரிமாணம் சமூக இடங்கள் (SOCIAL LOCATION) சார்ந்த சேவைகள்!! இன்று சென்னைக் கீழப்பாக்கம் ஈகா திரையரங்கள் அருகில் இருந்து ஒரு விசயத்தைப் பற்றி விவாதிக்கிறீர்கள் என்றால், அந்த இடம் சார்ந்த விளம்பரங்கள் செய்யும் வாய்ப்பு போன்ற சேவைகளில் கிடைக்கவிருக்கும் வருமானத்திற்கு எல்லையே இல்லை. Social Location சேவைகளால் பயனர்களுக்கு என்ன பயன்? கூகுள் பஸ்ஸில் என்னைத் தொடரும் நண்பர்களுள் யார் மிக அருகில் இருக்கிறார்கள்? புதிதாக நான் சென்றிருக்கும் ஊரில் என் நண்பரின் நண்பர்கள் யார் யார் இருக்கிறார்கள்? அவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கும் இடங்கள் எவை போன்ற விசயங்களைச் சொல்லலாம்!! இதுவரை கூகுள் பஸ் பற்றியும் சமூக வலையமைப்புத் தளங்கள் பற்றியும் சிறிய அறிமுகத்தைப் பார்த்தோம். எனக்கு இந்த பஸ்ஸில் பயனிக்க விருப்பமில்லை. நான் எத்தனை பேரைத் தொடர்கிறேன் என்ற விசயத்தை யாரிடமும் பகிர விருப்பமில்லை என்று நினைத்தால்... ஜிமெயில் பக்கத்தின் கீழே சென்றால் "Turn off buzz" என்று ஒரு சுட்டி உள்ளது. அதை அழுத்தினால் உங்களை யாரும் பஸ் செய்யமாட்டார்கள். ஜிமெயில் ப்ரபைல் (Profile) பக்கத்திற்கு சென்றால் உங்களைப் பற்றிய எந்த செய்தியைப் பகிர்வது என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.என்ன? உங்களுக்கு கூகுள் பஸ்ஸில் ஏற விருப்பமிருக்கிறதா? இல்லையா?