Tuesday 15 December 2009

தீர்வுக்கான கூட்டா? அல்லது தேர்தல் கூட்டா?

தேர்தல் திருவிழா ஆரம்பமாகிறது. இன்னமும் இலங்கையில், ஜனநாயகப் பயிர் அழிந்து விடவில்லையென்று உலகிற்கு எடுத்துக் கூற, இந்தத் தேர்தலை விட்டால் வேறு மார்க்கம் இல்லை போல் தெரிகிறது. மக்களுக்கான ஜனநாயகம், புள்ளடி போடுவதோடு முற்றுப் பெற்றுவிடும். இன முரண்நிலையைத் தீர்ப்பதற்கு புதிய வகை தேடல்களோடு களமிறங்க, பலரும் தயாராகி வருகின்றனர். வாக்கு வங்கியை மையப்படுத்தி, சகல தரப்பினரும் சுழல ஆரம்பித்து விடுவார்கள். புள்ளடியைப் போட்டு விட்டு, விடியலைத் தேடும் விபரீத விளையாட்டில் மக்களும் அரசியல்வாதிகளும் மோதிக் கொள்கிறார்கள். இந்த புள்ளடிச் சுதந்திரம், அடித்தட்டு பெரும்பான்மை மக்களின் வாழ்வில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தியதாகத் தெரியவில்லை. தேச மக்களின் இறைமை, அதிகார வர்க்கத்தால் கடத்திச் செல்லப்பட்டு, சிறு குழுவினருக்கானதாக மாற்றமடைகையில் இனங்களுக்கிடையிலும் வர்க்கங்களுக்கிடையிலும் முரண்பாடுகள் தோற்றமுறுகின்றன. ஆகவே, வருகிற ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் என்றும் மாறாத புள்ளடி ஜனநாயகத்தின் கீழ் நடத்தப்படப் போகின்றது என்பதில் சந்தேகம் இல்லை. முள்ளிவாய்க்காலில் ஓய்வடைந்த, 60 ஆண்டுகால அரசியல், ஆயுதப் போராட்டங்கள், புதியதொரு அரசியல் போராட்ட வடிவத்துள் காலடி எடுத்து வைப்பதாகக் கூறப்பட்டாலும் புள்ளடி அரசியல் என்கிற பழைய முறைமைக்குள் இருந்து வேறுபடவில்லை. இராணுவ பலத்தில் உச்ச நிலையைத் தொட்ட விடுதலைப் புலிகள், அதனை அரசியல் தீர்வொன்றைப் பெறும் நிலைக்கு பயன்படுத்தவில்லை அல்லது அதற்கான ஆளுமை அவர்களுக்கு இருக்கவில்லையென்கிற வகையில் வியாக்கியானங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஐம்பதுக்கு ஐம்பது என்பதிலிருந்து ஆரம்பித்து பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், திம்புப் பேச்சுவார்த்தை வரை சாத்வீக வழியில் அரசியல் போராட்டம் நடத்தியவர்கள் சாதிக்க முடியாதவற்றை, ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொண்ட விடுதலைப் புலிகளாலும் சாதிக்க முடியவில்லை. ஆகவே சமஷ்டி வடிவிலான தீர்வொன்றை முன்வைக்கப் போவதாகக் கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராலும் எதையும் சாதிக்க முடியாதென்கிற முடிவினை இலகுவில் ஊகித்துக் கொள்ளலாம். சர்வதேசத்திடம் கையளிக்கப்படவிருக்கும் இந்த உயர்ந்தபட்ச அதிகாரம் கொண்ட தீர்வுத் திட்டம், கொழும்பு ஆட்சியாளர்களால் நிராகரிக்கப்பட்டால் அடுத்த கட்ட அரசியல் நகர்விற்கான ஆதரவினை இந்தியாவும் மேற்குலகும் வழங்குமென்று கூட்டமைப்பு எதிர்பார்ப்பது போல் தெரிகிறது. ஆனாலும் பிரிந்து செல்வதே, இந்த அடுத்த கட்ட நகர்வென்று, ஆட்சியாளர்களுக்கு மிக நன்றாகப் புரியும். 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பின்னடிக்கும் அரசாங்கம், பூரண சுயாட்சியுடன் கூடிய தீர்வு பற்றி அக்கறை கொள்ளாது. இன்னமும் இரண்டு வாரங்களுள் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படுமென்று கடந்த இரண்டு மாதங்களாகக் கூறி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள், பொதுத் தேர்தலுக்கு முன்பாக அத்தீர்வுப் பொதியை முன்வைப்பாரா என்று தெரியவில்லை. சிலவேளைகளில் இத்தீர்வுத் திட்டம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமாகவும் மாறலாம். தந்தை செல்வாவின் வட்டுக்கோட்டைத் தீர்மான வாக்கெடுப்புப் போன்று இப்புதிய தீர்வுத் திட்டத்தினை, மக்களின் அங்கீகாரத்திற்காகத் தேர்தலில் முன்வைப்பதாகவும் இவர்கள் கூறலாம். ஏனெனில், வன்னி முகாம் மக்களின் அவல நிலைக்கு அப்பால் தேர்தலை நோக்கிய அதிதீவிரப் பார்வையொன்று அரசியல் தளத்தில் வெளிக்கிளம்புவதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கின்றது. தளர்வான ஐக்கியத்தைப் பேணும், அரசியற் கட்சியல்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தனித்துவம் பேணும் நான்கு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுமை கலந்த அனுசரணையோடு உருவாக்கப்பட்ட இக்கூட்டமைப்பில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஷ்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி போன்றவை இணைந்து புலிகளை தமிழ் மக்களின் ஏக தலைமையாக ஏற்றுக் கொண்டன. தற்போது விடுதலைப் புலிகளின் பிரசன்னம் வெளிப்படையாக இல்லாத நிலையில், வருகிற தேர்தலை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஈ. பி. ஆர். எல். எப். (வரதர் அணி) போன்ற கட்சிகளோடு சேர்ந்து, பரந்த கூட்டணி அமைக்க கூட்டமைப்பு இணங்கியுள்ளது. அத்தோடு தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளுக்கிடையில் இணக்கம் காணப்பட வேண்டியது அவசியமென இப் புதிய தேர்தல் கூட்டணி கருதுகிறது. இந்த ஆறு கட்சிகளும் ஒன்றுகூடிய நிகழ்வில் வடக்கு மக்கள் மீள்குடியேற்றம், கிழக்கு மாகாண காணிப் பங்கீடு மற்றும் எதிர்கால தேர்தலில் தமிழ் பேசும் கட்சிகளின் நிலைப்பாடு உள்ளடங்கிய எட்டு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. மறுபடியும், வருகிற செவ்வாய்க்கிழமை கூடும் இவர்கள், தமக்கிடையே ஏற்பட்டுள்ள பொது இணக்கம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர, நான்கு கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் முயற்சி முன்னெடுக்கப்படுவதாகத் தெரிய வருகிறது. தத்தமது கட்சிகளை கலைத்து விட்டு, ஈழம், தமிழீழம் என்கிற சொற்பதமற்ற தமிழ்த் தேசியம் என்கிற பொது கோட்பாட்டைத் தாங்கி நிற்கும் பெயருடன் அடுத்த அரசியல் பாதையை இவர்கள் தேர்ந்தெடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கூட்டமைப்போடு இணைவுப் போக்கினை மேற்கொள்ளவிக்கும் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சிகள், இறுதிப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மற்றும் பேரவலம் தொடர்பான தமது நிலைப்பாட்டை தெளிவாக மக்கள் முன் வைக்க வேண்டும். தேர்தலிற்கான கூட்டாக இது அமைந்தால் வாக்கு வங்கியில் பெரிய மாற்றங்கள் நிகழும் சாத்தியப்பாடுகள் அரிதாகவே இருக்கும். இந்த பொதுக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கு வவுனியா மற்றும் கிழக்கு மாகாணத்திலும் மனோ கணேசனின் கட்சிக்கு கொழும்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு மேலதிக ஆசனங்களைப் பெற உதவும். ஆனாலும் வடக்கைப் பொறுத்தவரை ஏனைய தமிழ்க் கட்சிகளின் ஆதரவு, கூட்டமைப்பின் வாக்குப் பலத்தை அதிகரிக்க உதவுமாவென்பதில் பலத்த சந்தேகமுண்டு. தற்போது உருவாகும், பெரும்பான்மையான தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் இக்கூட்டு, தேர்தலை நோக்கிய தற்காலிக முன்னணியா? அல்லது சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க, ஒரு பொதுவான தீர்வுத் திட்டத்தை முன்வைத்து, நகரப் போகும் சந்தர்ப்பவாதமற்ற உறுதியான சக்தியா? என்பதை அறிய புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் ஆவலாக இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு அரசியல் தீர்வு பற்றிய சிந்தனை கிடையாது, செப்டெம்பர் 11, இரட்டைக் கோபுரத் தாக்குதலிற்குப் பின், அமெரிக்கா தொடுத்த உலகப் பயங்கரவாதத்திற்கெதிரான போரின் நுட்பங்களை புலிகள் புரிந்து கொள்ளவில்லை என்று பிராந்திய சர்வதேச வல்லரசாளர்களின் சதிகளையும், நலன்களையும் புரிய மறுப்பவர்கள், இனி என்ன செய்யப் போகிறார்களென்பதை பார்க்க வேண்டும். இந்தியா இல்லாமல் அணுவும் அசையாது என்போர், சமஷ்டித் தீர்வுத் திட்டத்தை புதுடில்லிக்குச் சமர்ப்பித்து, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கட்டும். விடுதலைப் புலிகள் இல்லாத, ஈழத் தமிழர்களின் புதிய அரசியல் தலைமைத்துவத்தை இந்தியா ஏற்குமென்பவர்களும் இந்திய அனுசரணைக்கு புலிகள் தடையாக இருந்தார்கள் என்பவர்களுக்கும் இப்போது புதிய களம் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனாலும் வடக்கு கிழக்கில், பல இலட்சம் மக்கள் முகாம்களில் முடக்கப்பட்டிருக்கையில் தேர்தல் ஜனநாயகம் பற்றிப் பேசுவது விந்தையாக இருக்கிறது.

No comments:

Post a Comment