Friday 12 February 2010

வேலன்டைன் தினம்

இன்று அநேகமாக அனைத்து நாடுகளிலும் பிப்ரவரி 14அன்று வேலன்டைன் தினம் கொண்டாடுவது வழக்கமாகி வருகின்றது. மேற்கே பல நாடுகளில் அன்று விடுமுறையும் அளிக்கப்படுகிறது. வேலன்டைன் தினம் உருவாகியது குறித்து சமூகத்தில் பல கருத்துக்கள் நிலவி வருகின்றன. அந்த கால கட்டத்தில் காதலர்களே பெருமளவில் இந்த நாளை கொண்டாடியதால் காதலர் தினம் எனவும் அறியப்படுகிறது. கிறிஸ்தவ மற்றும் ரோமப் பாரம்பரியங்களை வரலாறாக கொண்டது வேலன்டைன் தினம். கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ரோமாவில் மாமன்னன் இரண்டாம் கிளாடியஸ் திருமணமானவர்களைக் காட்டிலும் திருமணமாகாத வீரர்களே சிறந்த வீரர்களாக திகழ்வதாகக் கூறி திருமணங்களுக்குத் தடை விதித்திருக்கிறார், இதற்கு செவிமடுக்காத வேலன்டைன் எனப்பட்ட கிறிஸ்தவ மத போதகர் எப்போதும் போலவே காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்; ஆனால் இம்முறை மன்னன் அறியாமல் மறைமுகமாக. இதனை அறிந்து கொண்ட இரண்டாம் கிளாடியஸ் அப்போதகரை கொன்று விட்டான் என ஒரு வரலாறு கூறுகிறது. மற்றொரு வரலாறோ, ரோமச் சிறைச்சாலைகளில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட கிறிஸ்தவர்களை விடுவிக்க முயன்ற வேலன்டைனை மன்னன் கொன்றதாக கூறுகிறது. வேறொன்றோ சிறையிலிருந்த வேலன்டைனுக்கும் சிறை அதிகாரியின் மகளுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், இதை அறிந்து கொண்ட மன்னன் வேலன்டைனைக் கொன்றதாகவும் கூறுகிறது. மரணமடைந்த வேலன்டைன் நினைவாக வேலன்டைன் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தன் காதலிக்கு எழுதிய கடிதத்தின் இறுதியில் உன்னுடைய வேலன்டைனிடமிருந்து (From your valentine) என முடித்திருக்கிறார் வேலன்டைன். அந்த வாக்கே இன்றும் வாழ்த்து அட்டைகளிலும், கடிதங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இருக்கிறது வரலாறு . இப்படியாக வேலன்டைன் தின வரலாறு இன்று வரை சரிவர அறியப்படாமலே இருக்கிறது.வேலன்டைன் தினத்திற்கு இன்னும் பல கதைகள் சொல்லப்படுகின்றன. மேற்கில் ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் தான் பிப்ரவரி மாதத்தின் மத்திய தினமான 14 ஐ வேலன்டைன் தினமாகக் கொண்டாடத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது; அதற்கும் ஒரு பின்னணியிருக்கிறது. பிப்ரவரி 14 அல்லது அதன் பிறகோ தான் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டின் பறவைகள் தங்கள் இணையோடு சேரும் பருவம் தொடங்கி வந்துள்ளது. எனவே அந்த மாதத்தின் மத்திய தினமான 14 ஐ தெரிந்தெடுத்ததாக கூறுகிறது ஒரு வரலாறு.வேறு பல வரலாறுகளும் உள்ளன. 18 நூற்றாண்டிற்கு பின்னர் தான் அனைத்து தரப்பினராலும் பரவலாக வேலன்டைன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு அக்காலக்கட்டத்தில் அனைத்து தரப்பினரும் அன்பைப் பரி மாறிக்கொண்டதால் அன்பர்கள் தினம் எனவும் அழைக்கப்பட்டுவருகிறது. வாழ்த்து அட்டைகளும், ரோஜாப்பூ பரிமாற்றங்களும் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து தான் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. வர்த்தக ரீதியாக, வண்ண வண்ண ரிப்பன்கள் மற்றும் scrap என அழைக்கப்படும் படங்களாலான முதலாவது வாழ்த்து அட்டை 1840 ல் Esther A. Howland, என்ற பெண்மணியால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. அவர் Mother of valentine என்று அறியப்பட்டு வருகிறார். கிறிஸ்துமஸிற்கு அடுத்தபடியாக வேலன்டைன் தினத்தன்று தான் உலகிலேயே வருடத்திற்கு அதிக அளவு வாழ்த்து அட்டைகள் (சுமார் ஒரு பில்லியன்) அனுப்பப்படுகின்றன. கிறிஸ்துமஸின் போது சுமார் 2.6 பில்லியன் வாழ்த்து அட்டைகள் உலகம் முழுவதும் பரிமாறப்படுகின்றன. வாழ்த்து அட்டைகளில் உபயோகிக்கப்படும் cupid என்றழைக்கப்படும் இறக்கையுடைய குழந்தை போன்ற சின்னம் ரோம காமக் கடவுள் ஆகும்; ரோமப்புராண கதைகளின் படி அன்பிற்கு உருவகமான பெண் கடவுள் வீனஸின் மகனாகும். இன்று அம்புகளுடனான cupid தான் பிரபலம். வரலாறு எதுவாயினும் வேலன்டைன் தினத்தன்று இன்றைய இளைஞர்கள் ஒரு வரம்போடு இருப்பார்களேயானால் அவர்களுக்கும் சமூகத்திற்கும், அது ஆனந்தமே. மட்டுமல்லாமல் அனைத்து தினங்களிலும் நம்மை சார்ந்து இருப்பவர்களிடமும், சக மனிதர்களிடமும் அன்போடு இருப்போமானால் வாழ்வு மகிழ்ச்சியால் நிறைவது நிச்சயம்.