Saturday 13 February 2010

கூகுள் பஸ் (Buzz) !

கடந்த இரண்டு நாட்களாகப் பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் விசயம் தான் கூகுள் பஸ் (Buzz)! ஜிமெயில் முகப்புப் பக்கத்திற்கு வரும்பொழுதே புதிதாக ஒரு சுட்டி வந்துள்ளது "கூகுள் பஸ்ஸைப் பிடியுங்கள்" என்று. ஜி-மெயில் பயனர் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் கிடைத்திருக்கும் இந்த வசதியை, "ஆஹா!! அருமையான ஒரு சேவை" என்று சிலரும், "எதற்காக வலிந்து நம் மீது ஒரு புது சேவையைப் புகுத்துகிறது கூகுள்!" என்று சிலரும் கேள்வியை எழுப்பியுள்ளனர். சரி எதற்காக இந்த கூகுள் பஸ்? இணைய உலகில் தேடுதல், மின்னஞ்சல், பேச்சாடல், செய்திகள், புகைப்படம் பகிர்தல் என்று பரவலாக அனைத்து சேவைகளையும் வைத்திருக்கும் கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற உடனுக்குடன் தன் நிலையைப் புதுப்பிக்கும் "நிலை புதுப்பிப்பான்" (Status Updater ) சேவையை மட்டும் கோட்டை விட்டுவிட்டது. இந்த ஓட்டையை நிரப்புவதற்காக வந்திருக்கும் சேவை தான் பஸ்!! இந்த நிலை புதுப்பிப்பான் மூலம் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற நிறுவனங்களுக்கு என்ன பயன்? லேட்டானாலும் லேட்டஸ்டாக எதற்காக கூகுளும் இந்த சேவையில் குதித்துள்ளது? எல்லாம் பாய்ஸ் படத்தில் நம்ம நடிகர் செந்தில் சொல்வது போல "இன்பர்மேசன் இஸ் வெல்த்" என்பதற்கே!! ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சேவையைப் பயன்படுத்தும் பயனர்கள் என்ன மாதிரியான விசயங்களை விவாதிக்கிறார்கள், எந்த ஊரில் எந்த விசயம் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டது, எந்த வயதினர் எதை விரும்புகிறார்கள் போன்ற தகவல்கள் தான் இன்று "தங்க முட்டையிடம் வாத்துகள்" எனலாம். வர்த்தக ஆய்வு (Market Research ) நிறுவனங்கள் முதல் செய்தித் தகவல், தொழிற்துறை என அனைத்து துறையினர் இது போன்ற தகவல்களை மிகவும் பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள். உதாரணத்திற்கு, ஆப்பிள் நிறுவனம் ஐ-பேட் (i-pad) என்ற பொருளை சந்தையில் அறிமுகப்படுத்திய பொழுது அதைப் பற்றி எத்தனை சதவிதத்தினர் விவாதித்தனர்? எந்த வயதினரை அதிகம் ஈர்த்துள்ளது. "ஐ-பேட்"ன் போட்டி நிறுவனமான "கிண்டில்"(Kindle) வெளியான பொழுது எந்த அளவு விவாதம் நடந்தது போன்ற தகவல்களை வைத்து, நிறுவனங்கள் அடுத்த கட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் அதிகமாக டிவிட்டரில் விவாதம் செய்த விசயங்களில் கூகுள் பஸ், காதலர் தினம், ஷாருக்கானின் MNIK போன்ற விசயங்கள் முன்னனி உள்ளன. இது போன்ற தகவல்கள் வருங்காலத்தில் மதிப்பு மிக்கவை. இந்த வருமானத்தை இழக்க விரும்பாத கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கும் சேவை தான் பஸ்!! அது மட்டுமல்ல? இதனுடைய மற்றுமொரு பரிமாணம் சமூக இடங்கள் (SOCIAL LOCATION) சார்ந்த சேவைகள்!! இன்று சென்னைக் கீழப்பாக்கம் ஈகா திரையரங்கள் அருகில் இருந்து ஒரு விசயத்தைப் பற்றி விவாதிக்கிறீர்கள் என்றால், அந்த இடம் சார்ந்த விளம்பரங்கள் செய்யும் வாய்ப்பு போன்ற சேவைகளில் கிடைக்கவிருக்கும் வருமானத்திற்கு எல்லையே இல்லை. Social Location சேவைகளால் பயனர்களுக்கு என்ன பயன்? கூகுள் பஸ்ஸில் என்னைத் தொடரும் நண்பர்களுள் யார் மிக அருகில் இருக்கிறார்கள்? புதிதாக நான் சென்றிருக்கும் ஊரில் என் நண்பரின் நண்பர்கள் யார் யார் இருக்கிறார்கள்? அவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கும் இடங்கள் எவை போன்ற விசயங்களைச் சொல்லலாம்!! இதுவரை கூகுள் பஸ் பற்றியும் சமூக வலையமைப்புத் தளங்கள் பற்றியும் சிறிய அறிமுகத்தைப் பார்த்தோம். எனக்கு இந்த பஸ்ஸில் பயனிக்க விருப்பமில்லை. நான் எத்தனை பேரைத் தொடர்கிறேன் என்ற விசயத்தை யாரிடமும் பகிர விருப்பமில்லை என்று நினைத்தால்... ஜிமெயில் பக்கத்தின் கீழே சென்றால் "Turn off buzz" என்று ஒரு சுட்டி உள்ளது. அதை அழுத்தினால் உங்களை யாரும் பஸ் செய்யமாட்டார்கள். ஜிமெயில் ப்ரபைல் (Profile) பக்கத்திற்கு சென்றால் உங்களைப் பற்றிய எந்த செய்தியைப் பகிர்வது என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.என்ன? உங்களுக்கு கூகுள் பஸ்ஸில் ஏற விருப்பமிருக்கிறதா? இல்லையா?

Friday 12 February 2010

வேலன்டைன் தினம்

இன்று அநேகமாக அனைத்து நாடுகளிலும் பிப்ரவரி 14அன்று வேலன்டைன் தினம் கொண்டாடுவது வழக்கமாகி வருகின்றது. மேற்கே பல நாடுகளில் அன்று விடுமுறையும் அளிக்கப்படுகிறது. வேலன்டைன் தினம் உருவாகியது குறித்து சமூகத்தில் பல கருத்துக்கள் நிலவி வருகின்றன. அந்த கால கட்டத்தில் காதலர்களே பெருமளவில் இந்த நாளை கொண்டாடியதால் காதலர் தினம் எனவும் அறியப்படுகிறது. கிறிஸ்தவ மற்றும் ரோமப் பாரம்பரியங்களை வரலாறாக கொண்டது வேலன்டைன் தினம். கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ரோமாவில் மாமன்னன் இரண்டாம் கிளாடியஸ் திருமணமானவர்களைக் காட்டிலும் திருமணமாகாத வீரர்களே சிறந்த வீரர்களாக திகழ்வதாகக் கூறி திருமணங்களுக்குத் தடை விதித்திருக்கிறார், இதற்கு செவிமடுக்காத வேலன்டைன் எனப்பட்ட கிறிஸ்தவ மத போதகர் எப்போதும் போலவே காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்; ஆனால் இம்முறை மன்னன் அறியாமல் மறைமுகமாக. இதனை அறிந்து கொண்ட இரண்டாம் கிளாடியஸ் அப்போதகரை கொன்று விட்டான் என ஒரு வரலாறு கூறுகிறது. மற்றொரு வரலாறோ, ரோமச் சிறைச்சாலைகளில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட கிறிஸ்தவர்களை விடுவிக்க முயன்ற வேலன்டைனை மன்னன் கொன்றதாக கூறுகிறது. வேறொன்றோ சிறையிலிருந்த வேலன்டைனுக்கும் சிறை அதிகாரியின் மகளுக்கும் காதல் ஏற்பட்டதாகவும், இதை அறிந்து கொண்ட மன்னன் வேலன்டைனைக் கொன்றதாகவும் கூறுகிறது. மரணமடைந்த வேலன்டைன் நினைவாக வேலன்டைன் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தன் காதலிக்கு எழுதிய கடிதத்தின் இறுதியில் உன்னுடைய வேலன்டைனிடமிருந்து (From your valentine) என முடித்திருக்கிறார் வேலன்டைன். அந்த வாக்கே இன்றும் வாழ்த்து அட்டைகளிலும், கடிதங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இருக்கிறது வரலாறு . இப்படியாக வேலன்டைன் தின வரலாறு இன்று வரை சரிவர அறியப்படாமலே இருக்கிறது.வேலன்டைன் தினத்திற்கு இன்னும் பல கதைகள் சொல்லப்படுகின்றன. மேற்கில் ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் தான் பிப்ரவரி மாதத்தின் மத்திய தினமான 14 ஐ வேலன்டைன் தினமாகக் கொண்டாடத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது; அதற்கும் ஒரு பின்னணியிருக்கிறது. பிப்ரவரி 14 அல்லது அதன் பிறகோ தான் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டின் பறவைகள் தங்கள் இணையோடு சேரும் பருவம் தொடங்கி வந்துள்ளது. எனவே அந்த மாதத்தின் மத்திய தினமான 14 ஐ தெரிந்தெடுத்ததாக கூறுகிறது ஒரு வரலாறு.வேறு பல வரலாறுகளும் உள்ளன. 18 நூற்றாண்டிற்கு பின்னர் தான் அனைத்து தரப்பினராலும் பரவலாக வேலன்டைன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு அக்காலக்கட்டத்தில் அனைத்து தரப்பினரும் அன்பைப் பரி மாறிக்கொண்டதால் அன்பர்கள் தினம் எனவும் அழைக்கப்பட்டுவருகிறது. வாழ்த்து அட்டைகளும், ரோஜாப்பூ பரிமாற்றங்களும் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து தான் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. வர்த்தக ரீதியாக, வண்ண வண்ண ரிப்பன்கள் மற்றும் scrap என அழைக்கப்படும் படங்களாலான முதலாவது வாழ்த்து அட்டை 1840 ல் Esther A. Howland, என்ற பெண்மணியால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. அவர் Mother of valentine என்று அறியப்பட்டு வருகிறார். கிறிஸ்துமஸிற்கு அடுத்தபடியாக வேலன்டைன் தினத்தன்று தான் உலகிலேயே வருடத்திற்கு அதிக அளவு வாழ்த்து அட்டைகள் (சுமார் ஒரு பில்லியன்) அனுப்பப்படுகின்றன. கிறிஸ்துமஸின் போது சுமார் 2.6 பில்லியன் வாழ்த்து அட்டைகள் உலகம் முழுவதும் பரிமாறப்படுகின்றன. வாழ்த்து அட்டைகளில் உபயோகிக்கப்படும் cupid என்றழைக்கப்படும் இறக்கையுடைய குழந்தை போன்ற சின்னம் ரோம காமக் கடவுள் ஆகும்; ரோமப்புராண கதைகளின் படி அன்பிற்கு உருவகமான பெண் கடவுள் வீனஸின் மகனாகும். இன்று அம்புகளுடனான cupid தான் பிரபலம். வரலாறு எதுவாயினும் வேலன்டைன் தினத்தன்று இன்றைய இளைஞர்கள் ஒரு வரம்போடு இருப்பார்களேயானால் அவர்களுக்கும் சமூகத்திற்கும், அது ஆனந்தமே. மட்டுமல்லாமல் அனைத்து தினங்களிலும் நம்மை சார்ந்து இருப்பவர்களிடமும், சக மனிதர்களிடமும் அன்போடு இருப்போமானால் வாழ்வு மகிழ்ச்சியால் நிறைவது நிச்சயம்.

Friday 5 February 2010

அசல் விமர்சனம்

அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த சரணின் அடுத்த படம் தான் அஜித்தின் 49 வது திரைப்படமான "அசல்". படத்திற்கு இணை இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார் அஜித். "படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்புடன் கதை சொல்லி நம்மை சீட்டின் நுனியில் அமர வைக்கிறார் இயக்குனர்". இது மாதிரி நான் எப்பதான் எழுத போறேனோ தெரியல போங்க. கதை பிரான்சில், மிகப்பெரிய பணக்காரத் தந்தையான அஜித்திற்கு 3 மகன்கள்.முதல் மனைவியின் மகன்கள் சம்பத், ராஜீவ் கிருஷ்ணா. இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் இளைய அஜித். எந்த வேலையாக இருத்தலும் இளைய அஜித்திடம் கேட்ட பிறகே செய்கிறார் தந்தை அஜித். இதனால் மற்ற இருவருக்கும் இளைய அஜித்தை பிடிக்காமல் போகிறது. இளைய அஜித்தை 10 வயது வரை வளர்த்து பின்னர் பிரான்சில் உள்ள தந்தை அஜீத்திடமே ஒப்படிக்கிறார் பிரபு. தந்தை அஜித் தன் இறப்பிற்குப் பிறகு தனது சொத்து இளைய அஜித்துக்கு தான் சேர வேண்டும் என உயில் எழுதி விட்டு இறந்து விடுகிறார்.அதனால் இளைய அஜித்தை தீர்த்து விட்டு சொத்தை அபகரிக்க முயல்கின்றனர் மற்ற இருவரும். இதறகிடையில் மும்பை சேர்ந்த தாதா ஒருவன் ராஜுவை மும்பைக்கு கடத்தி சம்பத்தின் குடும்ப சொத்து முழுவதையும் தனக்கு கொடுக்குமாறு மிரட்டுகிறான். பின்னர் அஜித் பிரான்சில் இருந்து மும்பைக்கு வந்து அவரது தம்பி ராஜு கிருஷ்ணாவை காப்பாற்றுகிறார்.சகோதரர்கள் திருந்தி விட்டார்கள் என எண்ணிய நேரத்தில், அஜித்தை சுட்டு விட்டு பிரான்ஸ் பறகிறார்கள் சகோதர்கள் . தப்பி பிழைத்த அஜித் தன்னை கொலை செய்ய என்ன காரணம் என கண்டுபிடிக்க பிரபு, பாவனா, யூகிசேது அவர்களுடன் பிரான்ஸ் போகிறார். பின்னர் தன் தம்பி இருவரையும் கொள்கிறார். சமிரா, பாவனா, பிரபு, சுரேஷ் , யூகிசேது பிரான்சில் அஜித்திற்கு நண்பராக சமிரா. இந்தியாவில் அஜித் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார் பிரபு. அவர்க்கு உறவினராக பாவனா . காமடி பீசுக்கு யூகிசேது . பிரான்சில் போலிசாக வேலை செய்யும் சுரேஷ் சம்பத்திற்கு நண்பராக வருகிறார். பாடல்கள் அசல் பாடல் வெளியுட்டு விழாவில் அஜித் , பிரபு பிடிக்கும் என சொன்ன "என தந்தை", "எங்கே எங்கே " இரண்டுமே படத்தில் மிஸ்ஸிங் ..."டொட்டடொய்ய்ய்ங்...". பாடல் மட்டும் ரசிக்கும் படி படமாக்கி உள்ளார்கள்.so மற்ற பாடல்கள்? இரண்டு நாயகிகளும் அஜித் தனக்குத்தான் என் போட்டி போடுகிறார்கள். இதில் பாவனாவிற்கு சமீரா விட்டு கொடுக்கிறார். அது எப்படித்தான் முதல் பார்வையிலேயே பாவனாவிற்கு அஜித் மேல காதல் வருதோ. பிரான்சில் வரும் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாகவும் புதுமையாகவும் உள்ளன. Result அஜித் தயவு செய்து நல்ல கதையை தேர்தெடுத்து நடிங்க . இந்த கதைக்காகவா 6 மாசம் Wait பண்ணிங்க. ரமணா, வில்லன் படத்துக்கு திரைக்கதை பண்ணிய யூகி சேது இந்த படத்துல சொதபிட்டாறு . படத்துல அஜித் நல்லா 'Ramb ஷோ' பண்ணி காட்றாரு . அதுக்காகவாவது இந்த படத்தை ஒரு தடவை பாருங்கன்னு நான் சொன்னா, நீங்க என்னை என்ன சொல்வீங்க? படத்தில இருக்கிற ஒரே நல்ல விஷயம், படம் பில்லா மாதிரி ரொம்ப ஸ்டைலிஷா வந்திருக்கு. அதனால இந்த படத்தை "அசல்" அஜித் ரசிகர்கள் கொண்டாடலாம்..