Sunday, 2 May 2010மேதினத்தில் சபதம் எடுப்போம்இன்று உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்தால் உற்சாகத்துடன், உவகை பொங்க கொண்டாடப்படும் ஒரு நாள். இந்துக்களுக்கு, கிருத்துவர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு என தனித்தனி பண்டிகைகள், கொண்டாட்டங்கள் உண்டு ஆனால் அனைத்து மத உழைப்பாளி மக்களும் கொண்டாடும் ஒரே தினம் மேதினம் மட்டுமே. அடையாளபூர்வ கொண்டாட்ட தினமல்ல இது. உரிமைகளை பெற்ற தினம். மனிதன் மிருகமாக வேலைவாங்கப்பட்ட நாட்களில் அவர்களது மனித உணர்வுகளை மீட்டெடுக்க புரட்சிகர சக்திகள் ஏற்படுத்திய போராட்டத்தின் விளைவு மேதினம். சிக்காகோ நகர் வீதிகளில் சிந்திய போராளிகளின் உதிரம் பெற்றுக்கொடுத்த வரலாற்று பரிசு இந்த தினம்.

ஆனால் 80 ஆண்டுகால உழைபாளிகளின் உதிரத்தால் பெறப்பட்ட உரிமைகள் மீண்டும் அடகு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் உலக நாடுகளை சூரையாட ஏகாதிபத்திய நாடுகள் போட்டியிடுகின்றன. ஆயுதத்தால் அல்ல சந்தையால் லாபத்தை கொழித்திட நமது நாட்டில் கடைவிரித்துள்ளன. அவர்களுக்கு குறைந்த கூலியில் தொழிலாளிகளை கொடுக்கும் சந்தையாக  இருப்பதால்தான் பலநாட்டு கம்பெனிகள் இங்கு வருகின்றன. அவர்களுக்கு உரிமைகளை கேட்டு போராடும் மனிதர்கள் இருக்ககூடாது, அவர்களை ஒன்றினைக்கும் சங்கங்கள் இருக்கக்கூடாது எனவே தாங்கள் விரும்பும் அரசாங்கங்களை அவர்கள் நிறுவுகின்றனர். .

கண்ணிதுறை ஊழியர்களுக்கு 8 மணிநேரம் என்றால் என்னவென்று தெரியாது. ஒப்பந்த கூலி தொழிலாளிகளுக்கு இந்த நேரம் கிடையாது,அந்நிய பண்ணாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கம் வைக்கவே உரிமை கிடையாது. அங்குள்ள உள்நாட்டு தொழிலாளிகளை அடித்து நொறுக்க நமது காவல்துறை விசுவாசத்துடன் பண்ணாட்டு கம்பெனிகளுக்கு வேலை செய்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏலமிடப்படுகின்றன. சமூக பாதுகாப்பான வேலை என்பது கானல் நீராக மாறி வருகிறது. அனைத்தையும் தனியாரிடம் கொடுக்க நமது அரசாங்கங்கள் அலைபாய்கின்றன.

மேதினத்தில் சபதம் எடுப்போம். உரிமைகளை பாதுகாக்க! மக்களை திரட்டுவோம், மக்கள் போடராட்டத்தை தவிர மிகப்பெரிய ஆயுதம் எதுவுமில்லை.

வரலாறு... 


(தோழர் முத்துக்கண்ணன் வலைதளத்திலிருந்து)


1806 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்திற்கு தலைமையேற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்ற போது நாளன்றுக்கு 19 முதல் 20 மணி நேரம் வேலை வாங்கப்பட்ட தகவல்கள் வெளியானது.

1820 முதல் 1830 களில் பில்டெல்பியா நகர இயந்திர தொழிலாளர் சங்கம் தான் முதன் முதலில் 10 மணி நேர வேலை என்ற கோஷத்தை முன் வைத்தது, அதே நகரில் 1827ல் கட்டிட தொழிலாளர்கள் சங்கம் இந்த கோரிக்கைக்காக வேலைநிறுத்தத்தை நடத்தியது. இதன்பின்பு தான் 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை அனைத்து தரப்பினராலும் பிரதானமாக பார்க்கப்பட்டது.

நியூயார்க் நகரில் ரொட்டி தொழிலாளர்கள் இதே காலத்தில் சுமார் 20 மணி நேரம் எகிப்திய அடிமைகளை விட கேவலமான முறையில் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். 1837ல் வேன்பியுரன் தலைமையிலான அரசாங்கம் பத்து மணி நேர வேலைநாள் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இது போராடிய தொழிலாளர்களின் மத்தியில் புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தது. பல தொழிற்சாலைகளில் இக்கோரிக்கை வெற்றியடைய தொழிலாளர்கள் உடனே 8 மணி நேர வேலை கோஷத்தை முன் வைத்தனர்.

8 மணி நேர வேலைக்கான கோஷத்தை முன் வைத்து வளரும் நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன. ஆஸ்திரேலியாவில் கட்டிட தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற கோரிக்கையை முன் வைத்து 1858ல் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றனர். 1884 களில் அமெரிக்காவில் உருவான 8 மணி நேர இயக்கம் தான் மேதினம் உருவாக காரணமாக அமைந்தது. இதற்கு ஒரு தலைமுறை முன்பே இக்கோரிக்கைக்காக அமெரிக்காவில் உள்நாட்டு போர் நடைபெற்ற 1861-62 காலத்தில் தேசிய தொழிற்சங்கம் தொழிலாளி வர்க்கத்தின் போர்குணமிக்க ஸ்தாபனமாக போராடியது.

1866ல் தேசிய தொழிற்சங்கத்தின் முதல் மகாநாடு அமெரிக்கா முழுமைக்கும் 8 மணி நேர வேலைநாள் என்பதை சட்டமாக அறிவிக்க வேண்டும். அப்போது தான் முதலாளித்துவ அடிமைத்தனத்தில் இருந்து நாட்டின் உழைப்பு சக்தியை விடுவிக்க முடியும். இந்த மாபெரும் பலனை அடைய நாம் நம்முடைய சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி போராட தீர்மானிக்கிறோம் என தீர்மானத்தை நிறைவேற்றியது.

அதனால் தான் இரண்டாவது இன்டர் நேஷனல் 1889ல் பாரிஸில் நடைபெற்ற போது மே முதல் நாள் என்பது தொழிலாளர்கள் தங்கள் அரசியல் மற்றும் தொழிற்சங்கத்தின் மூலம் கொடுக்க வேண்டிய முக்கிய அரசியல் கோரிக்கை 8 மணி நேர வேலைக்கான போர் குரலாக ஒலிக்க வேண்டிய தினம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு 1884 சிக்காகோ நகரில் நடைபெற்ற தொழிலாளர் மகாநாட்டில் 1886 மே முதல் நாளை 8 மணி நேர வேலைக்கான தினமாக அறிவிக்க தயாரிப்பு பணிகளை துவக்கிடுவது என்ற அறைகூவலுக்கு இணங்க அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. அந்த மூன்றாண்டுகளும் போராட்ட களமாக காட்சி அளித்தது. சாலை, ரயில்வே, நகராட்சி, இயந்திரத் தொழிலாளர்கள், பென்சில்வேனியா சுரங்க தொழிலாளர்கள் என பல இடங்களில் போராட்டம் தீவிரமடைந்தது.

1873 களில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவும், வேலை இல்லா திண்டாட்டமும், மக்களின் துன்பமும் குறைவான வேலைநாளுக்கான போராட்டத்திற்கு உந்து சக்தியாக அமைந்தது. 1881ல் 500 வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது 1886ல் 11562 ஆக உயர்ந்தது. வேலைநிறுத்தத்தின் மையமாக சிக்காகோ நகரமும், இதர பகுதிகளில் குறிப்பாக நியூயார்க், பால்டிமோர், வாஷிங்டன், மில்வாக்கி, சின்சிநாட்டி, செயிண்ட் லூயிஸ், பிட்ஸ்பர்க், டெட்ராய்ட் ஆகிய நகரங்களில் அதிக அளவில் பங்கேற்றது.

1886 மே 1ம் தேதியன்று சிக்காகோ நகரம் தனது வரலாற்றில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கி தங்களது மாபெரும் வர்க்க ஒற்றுமையை காட்டிய காட்சியை கண்டது. சிக்காகோ நகரம் மட்டுமல்ல உலகமே கண்டது. தொழிலாளி வர்க்கத்தின் எதிரிகள் மற்றும் அரசு எந்திரம் இணைந்து தொழிலாளர்களை கைது செய்தது. போர்குணமிக்க தலைவர்களை அழித்தொழிக்கும் முயற்சியில் இறங்கியது. அமைதியான முறையில் போராட்ட களத்தில் நின்ற தொழிலாளர்களை காவல்துறை சுற்றி வளைத்து தாக்கியது. அதில் ஏற்பட்ட கலவரத்தையட்டி பல தொழிலாளர்கள் காவல்துறையின் துப்பாக்கி சூட்டிற்கு தங்களது உயிரையும், குருதியையும் தந்தனர். தொழிற்சங்க தலைவர்கள் பலர் தூக்கு கயிற்றை முத்தமிட்டனர். அவர்களின் அந்த மகத்தான தியாகமே மேதினத்தை தொழிலாளர்களின் உரிமை தினமாக உலகம் முழுவதும் அனுஷ்டித்து வருகிறது.

No comments:

Post a Comment