ஊடக முன்னோடிப் போராளி ‘தராகி’ சிவராம் அவர்கள் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களாலும், துணைப்படைக் குழுக்களாலும் கொல்லப்பட்டு, தமிழீழ மண்ணிற்கும், மக்களிற்கும் அவரது சேவை இழக்கப்பட்ட 5வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.


மாமனிதர் ‘தராகி’ சிவராம் அவர்கள் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களாலும், துணைப்படைக் குழுக்களாலும் கொல்லப்பட்டு, தமிழீழ மண்ணிற்கும், மக்களிற்கும் அவரது சேவை இழக்கப்பட்ட 5வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் இரவு கடத்திச் செல்லப்பட்ட இவர், மறுநாள் கொல்லப்பட்ட நிலையில், கொழும்பு ஜயவர்தனபுர நாடாளுமன்ற உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து இவரது உடலம் மீட்கப்பட்டிருந்தது.

‘தராகி’ சிவராம் அவர்களுக்கு ‘மாமனிதர்’ என்ற தமிழீழத்தின் உயரிய விருதினை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வழங்கியதில் இருந்து, தமிழீழத்திற்கும் தமிழீழ மக்களிற்கும் அவர் ஆற்றிய அளப்பரிய பணியினை எடைபோட முடியும்.

தமிழீழத்தின் தலைசிறந்த படைத்துறை ஆய்வாளரான இவர், அரசியல் ஆய்வாளராகவும், ஊடக அசிரியராகவும், ஊடகவியலாளராகவும், இலக்கியப் படைப்பாளியாகவும், சிறந்த பேச்சாளராகவும் பல்வேறு பரிமானங்களில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

தென் தமிழீழத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1959ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் நாள் பிறந்த இவரைப்பற்றியும் இவரது ஊடகப் பணிகள் தொடர்பாகவும், இவரது நண்பரான அமெரிக்காவின் சவுத் கரோலினா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் மார்க் விற்றகெர் (Mark Whitaker), “Learning Politics from Sivaram.” ஏன்ற தலைப்பில் எழுதியிருக்கின்றார்.

தமிழ்நெட் (Tamilnet.com) இணையத்தளத்தின் ஆசிரியரான சிவராம், கொழும்பு மற்றும் புலம்பெயர் நாடுகளிலுள்ள பல ஆங்கில, தமிழ் பத்திரிகைகளிலும் பத்தி எழுத்தாளராகத் திகழ்ந்தார்.

1989ஆம் ஆண்டு ஊடகவியலாளர் றிச்சர்ட் டி சொய்சாவினால் ஊடகத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்ட சிவராம் அவர்கள், அடுத்த ஆண்டில் கடத்திச் சென்று கொல்லப்பட்ட சொய்சாவின் உடலை அடையாளம் காட்டியபோது, தனக்கும் இதேநிலை ஏற்படும் எனபதை அப்பொழுது உணர்ந்திருக்க மாட்டார். பின்னர் அதனை உணர்ந்தபோது அதற்கு அஞ்சா நெஞ்சனாக வாழ்ந்தவர் அவர்.

வெளிநாட்டு ஊடகத்துறையினருடன் மட்டுமன்றி, அரச பிரதிநிதிகள், அரசியல் அறிஞர்கள், மனித உரிமை அமைப்புக்கள் என்பவற்றுடன் நெருங்கிய உறவைப்பேணிவந்த சிவராமின் இழப்பு, தமிழ் மக்களிற்கும், தமிழ்த் தேசியத்திற்கும் மட்டுமன்றி அவர்களுக்கும் பேரிழப்பைக் கொடுத்தது.

‘மாமனிதர் சிவராமின் இழப்பு, மனித உரிமை அமைப்புக்களுக்கம், வெளிநாட்டு அரசறிவியலாளருக்கும், அறிஞர்களுக்கம் ஈடு செய்ய முடியாதது’ என கிளார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ஜூட் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

புளொட் இயக்கத்தின் தலைமையுடன் ஏற்பட்ட கொள்கை முரண்பாடு காரணமாக அதிலிருந்து பிரிந்த பின்னர், தமிழீழ மக்களின் விடுதலைக்காக ஏங்கிய இவருக்கு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைமையும் ஆறுதலாக அமைந்தது.

தமிழீழத் தேசியத் தலைவரையும், தலைமையையும், தமிழீழ மக்களையும் ஆழமாக நேசித்த சிவராம் அவர்கள், தனது உயிர் பறிக்கப்படும் எனத் தெரிந்திருந்தும், அது தமிழீழ மண்ணில் பிரிய வேண்டும் என்ற அவரது எண்ணம், விடுதலைப் பற்றை உணர்த்தி நிற்கின்றது.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடக நண்பர்கள் போன்று இவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அதிகம் கிடைக்காத போதிலும், அவருடன் பழகியதாலும், அவர் என்னை மாணவனாக ஏற்றுக்கொண்டதாலும், எனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தையும், முன்னேற்றத்தையும், நன்றியையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்கின்றேன்.

1999ஆம் ஆண்டு முதன் முதலாக அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தானத்தில் (ஐ.பி.சி தமிழ்) இவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. ஆந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஐ.பி.சி நிருவாகத்திற்கும், அந்த நேரத்தில் எமது ஊடகத்திற்குப் பொறுப்பாக இருந்தவர்களுக்கும் நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளேன்.

அரசியலை மேற்படிப்பாகப் படித்திருந்தாலும், அரசியலில் ஆர்வம் இருந்தாலும் வானொலியில் ஒலிபரப்பாளராக இருக்க விருப்பம் இருந்ததே தவிர, ஊடகவியலாளராக, செய்தி ஆசிரியராக வரவேண்டும் என்ற எண்ணம் அந்தக் காலத்தில் எனக்கு இருந்ததில்லை.

ஐ.பி.சி வானொலிக்கு ஒரு செய்தி ஆசிரியர் தேவைப்பட்ட காலம் அது. என்னை நியமிக்க நிருவாகம் விரும்பிய போதிலும் நான் அதற்குப் பின்னடித்தபோது, என்னை தனியாக அழைத்துச் சென்று விம்பிள்டனிலுள்ள கொபி றிபப்ளிக் என்ற தேனீர் கடைக்குள் இருத்தி, புலம்பெயர் நாடுகளில் இளம் ஊடகவியலாளர்களின் உருவாக்கத்தின் அவசியம், புலம்பெயர் மக்களிற்கும், தாயக மக்களிற்கும் உறவுப்பாலமாக இருந்த ஐ.பி.சி செய்தியின் முக்கியத்துவம் (அப்போதெல்லாம் தமிழ்நெட் தவிர தமிழ் இணையத்தளங்கள் இல்லை) என்பவற்றை எடுத்து விளக்கி, அந்தக் கடையில் இருந்து வெளியேறியபோது முழுமையான சம்மதத்துடன் என்னை வெளியேற வைத்தவர்.

என்னை மட்டுமன்றி, அப்போது ஐ.பி.சியின் மட்டக்களப்புச் செய்தியாளராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி, யாழ் செய்தியாளர் தவச்செல்வன் போன்ற பல ஊடகவியலாளர்களின் உருவாகத்திற்கும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் அவர்.

ஐ.பி.சி தமிழ் உட்பட பல தமிழ் ஊடகங்களில் தூய தமிழ் பாவிக்கப்பட வேண்டும் என்பதில் பிடியாக இருந்த அவர், அதனை நடைமுறைப்படுத்துவதிலும் முன்னின்று உழைத்தார். இதற்கு உதாரணமாக படை (இராணுவம்), படைத்துறை, படைத்துறை அமைச்சர் (பாதுகாப்பு அமைச்சர்), நீதிமன்றில் முன்னிறுத்தல் (ஆஜர்) போன்ற பல சொற்களை உதாரணங்காட்டலாம்.

தமிழீழத் தேசியத் தலைவர், தளபதிகள், போராளிகள், மக்கள், மண் மீதான இவரது பற்றும் உறுதியும் என்னை மிகவும் கவர்ந்தது. இவர் போன்று நாளாந்தம் தொலைபேசியில் நான் உறவாடிய எமது செய்தியாளர்கள் நிமலராஜன், நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன், நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி போன்றோரின் இழப்பும், உயிர் பறிப்பும் தமிழ் ஊடகத்துறையில் இருந்து முற்றாக ஒதுங்க வேண்டும் என எண்ணும் எனது எண்ணவோட்டத்திற்குத் தடை போட்டு வருகின்றன.

இவர்கள் போன்று சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்ட 30இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும், மாவீரர்களுக்கும் செய்யக்கூடிய ஒரே பணி, வளமான, ஆரோக்கியமான ஊடகத்துறையைக் கட்டியெழுப்புவதும், தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், அனைத்து இன மக்களின் மனித உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்பதே.

பரா பிரபா